Published:Updated:

புதுச்சேரி: `கலைமாமணி... தமிழ்மாமணி' -பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்!

பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன்
பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன்

புதுச்சேரி புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீருமான மன்னர் மன்னன் முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் இன்று உயிரிழந்தார்.

தந்தையின் முகச்சாயல்:

`எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’ என்ற எழுச்சிமிகு வரிகள் மூலம் தமிழ் தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன். 92 வயதான அவருக்கு முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த சில வருடங்களாக அவதியுற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

கோபதி என்ற இயற்பெயரைக் கொண்ட மன்னர் மன்னன் தந்தை வழியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர். தந்தையின் முகச்சாயலை அச்சு அசலாகப் பெற்றிருந்த மன்னர் மன்னன், தனது மீசையையும் தந்தையைப் போலவே வடிவமைத்துக்கொண்டவர். பாரதிதாசன் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் இவரை நேரில் சந்திக்கும்போது சிலிர்ப்புக்குள்ளாவார்கள். பாரதிதாசன் மறைந்து 56 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், அவரை தனது தோற்றத்தின் மூலம் புதுச்சேரியின் வீதிகளில் நடமாடச் செய்தவர் மன்னர் மன்னன். பாரதிதாசனின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழாக்களில் அவரது திருவுருவப் படத்துக்கு பதில் தனது புகைப்படத்தை வைத்தச் சம்பவங்களை சிலேடையாகக் கூறுவார்.

`கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்’

தன் தந்தையின் வரலாற்றை `கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட மரபுக் கவிதை மற்றும் தொகுப்பு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். புதுச்சேரி வானொலியின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், புதுச்சேரியில் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்து தொடர்ந்து இரண்டு முறை அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதிருக்கும் தமிழ்ச் சங்கக் கட்டடம் இவரது பதவிக்காலத்தில் கட்டப்பட்டதுதான். விடுதலைப் போராட்டத் தியாகியான இவர், மொழிப்போர் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத் தண்டனையைப் பெற்றவர். தந்தையைப் போல திராவிட இயக்கச் சிந்தனையாளரான இவர், தந்தைப் பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

இளைய மகன் பாரதியுடன் மன்னர் மன்னன்
இளைய மகன் பாரதியுடன் மன்னர் மன்னன்

தமிழக அரசின் கலைமாமணி, திரு.வி.க விருதுகள், புதுச்சேரி அரசின் கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகளையும் பெற்ற இவர் மிகச்சிறந்த பேச்சாளர். இவருக்கு செல்வம், தென்னவன், பாரதி என மூன்று மகன்களும், அமுதவள்ளி என்ற மகளும் இருக்கிறார். மன்னர் மன்னன் - சாவித்திரி இணையர்களின் திருமணத்தில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முன்னின்று நடத்தி சிறப்புரையாற்றினார். 30 ஆண்டுகளுக்கு முன்பே இவரின் மனைவி சாவித்திரி காலமாகிவிட்டார்.

மன்னர் மன்னன் பெயர் உருவான பின்னணி:

தமிழ் மீது கொண்ட பற்றினால் தனது 14-வது வயதில் நண்பரும் கவிஞருமான தமிழ் ஒளியை உடன் இணைத்துக்கொண்டு `முரசு’ என்னும் கையெழுத்து இதழை வெளியிட்டார். அந்த இதழ் அரசுக்கு எதிராக இருப்பதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தியது பிரெஞ்சு அரசு. அப்போது 14 வயது என்பதால் தண்டனையில் இருந்து இவர் தப்பித்துவிட, கவிஞர் தமிழ் ஒளி தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் கோபதி என்ற இயற்பெரில்தான் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அன்றிலிருந்துதான் `மன்னர் மன்னன்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

Vikatan

அறிஞர் அண்ணா தோற்றுவித்த தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலக் கிளையை 1947-ல் தொடங்கிய 5 பேரில் மன்னர் மன்னனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசனைப் பற்றி இவர் எழுதிய இலக்கியப் பாங்கு, பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம் உள்ளிட்ட நூல்கள் முக்கியமானவை. அதேபோல இவரது ’பாட்டுப் பறவைகள்’ என்ற நூல் பாரதியின் பத்தாண்டுகால புதுச்சேரி வாழ்வையும், அப்போது பாரதிதாசனுடன் அமைந்த தொடர்பையும் விரிவாகப் பேசக்கூடியது. இவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து `தமிழுக்குத் தக்க துணையான பக்க பலம் போய்விட்டதே’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். நாளை 7.7.2020 அன்று மாலை புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு