Published:Updated:

எம்.ஜி.ஆரும் ரசிக்கும்படி பேசுவார்! முன்னாள் எம்.எல்.ஏ அம்பிகாபதி நினைவுகளைப் பகிரும் மக்கள்

முன்னாள் எம்.எல்.ஏ அம்பிகாபதி
முன்னாள் எம்.எல்.ஏ அம்பிகாபதி

இலக்கிய ஆளுமை, மிடுக்கான தோற்றம், கம்பீரமான பேச்சு, மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தல் என ஒரு ஹீரோவாகவே இப்பகுதி மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கிறார். இவரது மறைவு மன்னார்குடி மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்பொழுதெல்லாம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி பேச்செடுத்தாலே, தொகுதி மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பற்றிய குறைகளையே மக்கள் முதலில் அடுக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மன்னார்குடி மக்களோ, 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த `மன்னை அம்பிகாபதி’யைப் பற்றி நெகிழ்ச்சியோடு பேசுகிறார்கள். தற்போது இவரது மறைவுச் செய்தி, இப்பகுதி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுடனும் எளிமையாகப் பழகுதல், உதவிகள் செய்தல், இலக்கிய ஆளுமை, மிடுக்கான தோற்றம், கம்பீரமான பேச்சு, மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தல் என ஒரு ஹீரோவாகவே இப்பகுதி மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கிறார் அம்பிகாபதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், 1977, 80 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் இரு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அம்பிகாபதி
அம்பிகாபதி

இவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் மன்னார்குடியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பாரதிச்செல்வன் ``அம்பிகாபதி, வெறும் ஐந்தாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சவர். ஆனாலும், மிகப்பெரும் இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தார். கம்பராமாயணத்தை மிகச் சிறப்பாக இலக்கிய நயத்தோடு விவரிப்பார். பாரதியாரின் சிறப்புகளைப் பற்றியும் ரொம்ப அழகா பேசுவார். இவரது மேடைப் பேச்சை நாள் முழுக்க கேட்டுக்கிட்டே இருக்கலாம். சாதாரணமாகவே இவரது பேச்சு, எல்லோரையும் வசீகரிக்கக்கூடியது. ஊர்மக்கள் எல்லோரையுமே மாமா, மச்சான், மாப்பிள்ளைனு உறவு முறைபோல்தான் கூப்பிடுவார். யாரு போய் கேட்டாலும் உதவிகள் செஞ்சிக் கொடுப்பார். அதிக நிலம் வச்சிருக்கக்கூடிய ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள்கிட்ட இருந்து நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு கொடுக்கணும்னு போராட்டங்கள் எல்லாம் நடத்தியிருக்கார். விவசாயக் கூலிகளுக்காகவும் குரல் கொடுத்திருக்கார்.

கொரோனா:`அமைச்சர் முதல் எம்.எல்.ஏ-க்கள் வரை...’ -அச்சத்தில் ஆளும்கட்சியினர்

அப்பெல்லாம், சைக்கிள்ல ரெண்டு பேர் டபுள்ஸ் போகக் கூடாதுனு, அரசு தடை விதிச்சிருந்துச்சு. அப்படி போனவங்களை புடிச்சி, போலீஸ்காரங்க, அபராதம் விதிச்சாங்க. அப்ப அது ஒரு பெரிய பிரச்னையாகவே இருந்துச்சு. ஏழை எளிய மக்கள்தான் அதுல அதிகமாகப் பாதிக்கப்பட்டாங்க. சட்டமன்றத்துல குரல் கொடுத்து அம்பிகாபதிதான், அந்தத் தடையை நீக்க வச்சார். சட்டமன்றத்தில் இவரது பேச்சை எல்லாருமே ரொம்பவே ரசிச்சி கேட்பாங்க. குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு இவரது பேச்சு ரொம்பப் பிடிக்கும்’’ என்றார்.

மன்னார்குடி
மன்னார்குடி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் இரா.காமராசு கூறுகையில், ``அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் வருவதற்கும் அம்பிகாபதிதான் முக்கியக் காரணமாக இருந்தார். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வருவதற்கும் இவர்தான் காரணம். ஆரம்பகாலங்கள்ல இவர் ஒரு நாடகக் கலைஞர். கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தனோடு எல்லாம் நெருங்கிய நட்பில் இருந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அம்பிகாபதி, சோவியத் ரஷ்யாவுக்கு போயிட்டு வந்த பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு, எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அ.தி.மு.க-வுல கொஞ்ச நாள்கள் இருந்தார். சிறுசேமிப்பு திட்டக்குழுத் துணை தலைவராக, எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். மறுபடியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலேயே தன்னை இணைத்துக்கொண்டார். இவரின் மகனான வழக்கறிஞர் பாரதி, தற்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளராக உள்ளார்” எனத் தெரிவித்தார்.

அம்பிகாபதி, தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி நீண்டகாலமாகிவிட்டது. ஆனாலும், மன்னார்குடியில் நடைபெறக்கூடிய அனைத்து விழாக்களிலும் இவர் சிறப்பு விருந்தினராகவே இடம்பெற்று வந்தார். பணம், பதவி இல்லாவிட்டாலும், மக்களின் மனதில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்துள்ளார். இவரது மறைவு மன்னார்குடி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு