கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

முன்னணி நடிகர்களின் பின்னணி ஹீரோ!

ஆரூர்தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரூர்தாஸ்

ஆரூர்தாஸ் எங்களின் சிறந்த நண்பர். தேவர் பிலிம்ஸுக்காக நாங்கள் எழுதும் கதைகளுக்கு அவர்தான் வசனம் எழுதுவார். கதையையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி, அவர் கையில் ஒப்படைத்துவிடுவோம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு வசனம் எழுதிய ‘பின்னணி ஹீரோ' ஆரூர்தாஸ் மரணம் திரையுலகத்தைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆரூர்தாஸுக்கு உற்ற நண்பராக இருந்த கதையாசிரியர் கலைஞானத்திடம் பேசினேன்.

‘‘என்னைவிட அவர் இரண்டு வயது இளையவர். எனக்கு 93. அவருக்கு 91. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் சந்தித்தால், விடியும் வரை பேசுவோம். இனி அவரைச் சந்திக்க முடியாது’’ என்று தழுதழுத்த குரலில் ஆரூர்தாஸின் நினைவுகளில் மூழ்கினார் கலைஞானம்.

‘‘ஆரூர்தாஸ் எங்களின் சிறந்த நண்பர். தேவர் பிலிம்ஸுக்காக நாங்கள் எழுதும் கதைகளுக்கு அவர்தான் வசனம் எழுதுவார். கதையையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி, அவர் கையில் ஒப்படைத்துவிடுவோம். நான்கைந்து மாதங்கள் கஷ்டப்பட்டு எழுதிய திரைக்கதையில் என்ன சொல்லியுள்ளோம் என்பதைப் படித்துப் பார்த்துவிட்டு, ஒரே வாரத்தில் வசனங்களை எழுதிக்கொடுத்துவிடுவார். அப்படியொரு தனித்திறமையானவர். அந்தக் காலத்தில் ரீமேக் என்றாலே, வசனம் மற்றும் பாடல்களை தஞ்சை ராமையா தாஸ்தான் பிரமாதமாக எழுதுவார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்த பிறகுதான், ஆரூர்தாஸ் மேலும் திறமைகளை வளர்த்துக்கொண்டார்.

ஒருகட்டத்தில், ராமையா தாஸ் பாராட்டும் அளவுக்கு அவரின் வலதுகையாகவே மாறிப்போனார். அப்படியொரு இடத்திலிருந்துதான், தேவர் பிலிம்ஸுக்கு ஆரூர்தாஸ் வந்தார். 1973-ம் ஆண்டு தேவர் பிலிம்ஸில் நான் சேரும்போதிலிருந்து ஆரூர்தாஸைத் தெரியும். வசனகர்த்தாவாகவும் கெட்டிக்காரர். நட்பிலும் கெட்டிக்காரர். யார் மனதையும் நோகும்படி பேசாமல், அரவணைத்துச் செல்வார். நான் என்ற கர்வமே இல்லாதவர்.

முன்னணி நடிகர்களின் பின்னணி ஹீரோ!

எம்.ஜி.ஆர் சமூகக் கருத்துள்ள படங்களில்தான் நடிப்பார். அவரைத் திருப்திப்படுத்தி கதைக்கு ஓகே வாங்குவது என்பது பெரிய விஷயம். ஆனால், அப்படிப்பட்டவரே தனது பல படங்களுக்கு ஆரூர்தாஸையே வசனம் எழுத வைத்தார் என்றால், ஆரூர்தாஸின் திறமையைப் புரிந்துகொள்ளலாம். எம்.ஜி.ஆரின் அரசியல் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு புரட்சிகர வசனங்களை அமைத்தவர். அதேமாதிரி, சிவாஜிக்கு எப்படி எழுதவேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருந்தார். குடும்பக் கதைகளில்தான் சிவாஜி நடிப்பார். அவர் எப்படிப் பேசுவார், எப்படி விரும்புவார் என்பதை உணர்ந்து வசனம் அமைத்தார். ‘பாசமலர்' படத்தில், ‘கைவீசம்மா கைவீசு' என்று வருவதெல்லாம் ஆரூர்தாஸ் எழுதியதுதான். இப்படி, ரசிகர்களை நெகிழவைத்து, கைதட்ட வைக்கும்படியான வசனங்களை அமைத்துப் படங்கள் வெற்றி பெற்றதற்குக் காரணமாக இருந்தார்.

அதேபோல், யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் முதல் ஆளாக நிற்பார். இப்படி எல்லா வகையிலும் நிறைவாக இருந்து முன்னணி நடிகர்களின் ஆஸ்தான வசனகர்த்தாவாக ஆரூர்தாஸ் மாறிப்போனார். அவர் என்னை விட்டுப் பிரிந்தது எனக்குப் பேரிழப்பு.’’