“சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு’’ என்ற வாக்கியத்துக்குச் சொந்தக்காரர் பி.ஹெச்.பாண்டியன். வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், துணை சபாநாயகர், சபாநாயகர், எம்.பி எனப் பல பதவிகளை வகித்த, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பி.ஹெச்.பாண்டியன் இப்போது இல்லை. சபாநாயகராக இருந்தபோது பி.ஹெச்.பாண்டியன் பயன்படுத்திய ‘வானளாவிய அதிகாரம்’ பல சர்ச்சைகளைக் கிளப்பியது.
1986-ல் மத்திய அரசால் இந்தி வாரம் கொண்டாடப்பட்டதைக் கண்டித்துத் தி.மு.க. சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 10 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்தார் பி.ஹெச்.பாண்டியன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவின் எம்.பி பதவி பறிக்கப்படாதபோது, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறித்த பி.ஹெச்.பாண்டியனின் நடவடிக்கை சர்ச்சை ஆனது. அதேபோல் ஆனந்தவிகடன் அட்டைப்படத்தில் இடம்பெற்ற ஜோக்குக்காக, அப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்தார் பி.ஹெச்.பாண்டியன். மக்களின் ஆதரவாலும் நீதிமன்ற உத்தரவாலும் விடுதலை ஆனார் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். சட்டமன்றத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇப்படிப் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்தாலும் அ.தி.மு.க-வில் முக்கியமான தலைவராக விளங்கினார் பாண்டியன். குறிப்பாக எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்தபோது பாண்டியன், ஜானகி அணியில் இருந்தார். 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அணியில் நின்று வெற்றி பெற்றார். இரண்டு அணிகளும் ஒன்றாகி, ஒன்றுபட்ட அ.தி.மு.க உருவானபோது, ஜெயலலிதா தலைமையை ஏற்று அ.தி.மு.க-வின் அமைப்புச்செயலாளராக இருந்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தில் பிறந்த பாண்டியன், மூன்றுமுறை சேரன்மாதேவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ‘சேரன்மாதேவி’ என்ற பெயரைக் கேட்டவுடனே பி.ஹெச்.பாண்டியனின் பெயர் நினைவுக்கு வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜானகி அணியில் இருந்தவர், கட்சி பிளவுபட்டபோது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பதவிகளைப் பறித்த சபாநாயகர் என்றபோதும் பின்னாள்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனுக்கு நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வாய்ப்பையும், நாடாளுமன்றத் தேர்தலின்போது தூத்துக்குடித் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் ஜெயலலிதா வழங்கினார். பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க எம்.பி.யாக இருந்தார்.
சட்டசபை வரலாற்றை நினைவுகூரும் யாரும் பி.ஹெச்.பாண்டியனின் பெயரைத் தவிர்க்க முடியாது.