Published:Updated:

உறங்கச் சென்றது ஒரு சிறுத்தை!

கார்த்தி

பிளாக் பேந்தரின் வெற்றி விழாவில், போஸ்மேன் சொன்னவை யதார்த்தமான அதே சமயம், வலி நிறைந்த சொற்கள்.

பிரீமியம் ஸ்டோரி

2016-ம் ஆண்டு வெளியான Gods Of Egypt படத்தில், அறிவின் கடவுளாக வந்திருப்பார் போஸ்மேன். “உங்களைத் தவிர பிற எகிப்துக் கடவுள்கள் ஏன் வெள்ளையாய் இருக்கிறார்கள்?” எனும் பத்திரிகையாளரின் கேள்விக்கு, “140 மில்லியன் முதலீடான அமெரிக்க டாலர்களைத் திருப்பி எடுக்க வேண்டாமா’’ என நக்கல் அடித்தார் ஆப்ரோ அமெரிக்கரான போஸ்மேன். ஆனால், இவர் நடித்த ‘பிளாக் பேந்தர்’ திரைப்படம்தான், ஆஸ்கர் பட்டியலில் சிறந்த படத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் இணைந்த முதல் மார்வல் படம். டி’சலா என அந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தின் பெயர் திரையரங்கில் உச்சரிக்கப்படும்போது உலகம் முழுக்கவே கைத்தட்டல்கள் பறந்தன.

பிளாக் பேந்தரின் வெற்றி விழாவில், போஸ்மேன் சொன்னவை யதார்த்தமான அதே சமயம், வலி நிறைந்த சொற்கள். ஆப்பிரிக்காவிலிருக்கும் புனைவு தேசமான வக்காண்டாவில் நடக்கும் கதை என்பதால், கதாபாத்திரங்கள் அனைவருமே ஆப்ரோ அமெரிக்கர்கள்தான். “நீங்கள் திறமையான, இளவயது நபராக இருந்தாலும் ஆப்ரோ அமெரிக்கர் என்றால், முதன்மைக் கதாபாத்திரம் உங்களுக்குக் கிடைக்காது. ஆனால் இப்போது நாங்கள் முழு மனிதர்களாக உணர்கிறோம்” எனச் சொன்னபோது அரங்கம் ஆர்ப்பரித்தது.

ஜேக்கி ராபின்சன், ஜேம்ஸ் பிரவுன், தர்குட் மார்ஷல் என பயோபிக் கதாபாத்திரங்கள் ஏற்றுவந்த போஸ்மேனுக்கு வந்தது பிளாக் பேந்தர் வாய்ப்பு. ஆனால், மார்ஷலின் (2016) போதே போஸ்மேனுக்கு மூன்றாம் நிலை குடல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. கீமோ தெரப்பிகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்குமிடையே முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடித்துவந்தார். ஆனாலும், தான் இப்படி பாதிக்கப்பட்டதாக எங்குமே அவர் பதிவு செய்ததில்லை.

உறங்கச் சென்றது ஒரு சிறுத்தை!

ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் என சமூக வலைதளங்கள் பலவும், Rest In power KING என்றே பதிவிட்டிருக்கின்றன. ‘அடிமைத்தனத்தைவிட மரணம் கொடியது அல்ல’ என்கிற பிளாக் பேந்தர் பட வசனம் ஏனோ நினைவுக்கு வருகிறது. ஒரு நாயகனின் பிம்பம் என்பது திரைக்கு வெளியேயும் வளரும் ஒன்று. #BlackLIvesMatters பற்றி எழுதுவது, புலம் பெயர்ந்தோருக்கு ஆதரவாகப் பேசுவது, கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஓட்டு கேட்பது, புற்றுநோயில் பாதித்த குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது என போஸ்மேன் ஒரு செயற்பாட்டாளராகவும் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார். பிளாக் பேந்தரைப் பார்க்க விரும்பிய புற்றுநோய் பாதித்த குழந்தைகள் படம் வருமுன்னரே இறந்தவிட்டதை எண்ணி உடைந்து அழுதார் போஸ்மேன். 43 வயதான போஸ்மேனின் மரணமும் அப்படியானதொரு பாதிப்பைத்தான் அனைவருக்குள்ளும் செலுத்தியிருக்கிறது.

ஆப்ரோ அமெரிக்க நடிகர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களாக இருந்தால் படம் ஓடாது என்பதை உலகம் முழுக்க மாற்றி எழுதியதற்காகவே என்றென்றும் நினைவுகொள்ளப்படுவீர்கள், REST IN POWER KING.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு