Published:Updated:

நூற்றாண்டைக் கடக்கும் சிவப்புப் புன்னகை!

சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
சங்கரய்யா

சங்கரய்யாவின் வாழ்வென்பது, தமிழக அரசியல் இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு.

நூற்றாண்டைக் கடக்கும் சிவப்புப் புன்னகை!

சங்கரய்யாவின் வாழ்வென்பது, தமிழக அரசியல் இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு.

Published:Updated:
சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
சங்கரய்யா

“நீங்க எந்த ஊருன்னு சொன்னிங்க..?’’

‘`திருவாரூர் மாவட்டத்துல அபிவிருத்தீஸ்வரம்னு ஒரு கிராமம் தோழர்…’’

“ஆமா… ஆமா தெரியுமே… அந்தப் பகுதில வீரய்யன்னு நம்ம இயக்கத் தோழர்… முக்கியமான தோழர் இருந்தாரே…’’

- எனது ஊரைச் சொன்னதும் நொடியில் சட்டென அங்கே ஒரு தோழரை நினைவுகூர்கிறார். அடுத்து நான் விகடனில் வேலை பார்த்ததைப் பற்றிப் பேச்சு வர, உடனே, ‘`1944-ல விகடன்ல முதல்தடவையா என்னைப் பத்தி எழுதினாங்க… அப்போ திருச்சில மாணவர் சங்கத்தோட மாநாடு நடந்துச்சு… அதைப் பற்றி ‘ஜிந்தாபாத் மாநாடு’ங்கற பேர்ல வந்த கட்டுரைல என்னோட பேச்சைப் பற்றியும் எழுதியிருந்தாங்க… சா.விஸ்வநாதன் எழுதினதா ஞாபகம்’’ என்கிறார். இப்படி, உரையாடல் எதைப் பற்றிச் சென்றாலும் தோழர்களையும் போராட்டங்களையும் தன்னியல்பாகக் குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். நூறு வயதிலும் சங்கரய்யா தோழரின் நினைவெல்லாம் சிவப்பும் தோழர்களுமே நிறைந்திருக்கிறார்கள்!

பலவருடங்களுக்கு முன்பு சிறுவனாக, வெண்மணியில் நடந்த கூட்டமொன்றில்தான் முதன்முதலில் சங்கரய்யா தோழரின் பேச்சைக் கேட்டேன். எளிய வெள்ளைச் சட்டையின் மேல் புரளும் சிவப்புத் துண்டு, மெலிந்த முகத்தில் சுடர்விடும் கண்கள், உண்மையின் ஆவேசம்போல உரத்து ஒலிக்கும் எஃகுக்குரல்… இவையெல்லாம் என்னைப்போல எத்தனையோ தோழர்களிடம் சோஷலிச நெருப்பைப் பற்ற வைத்திருக்கின்றன. பின்தொடர வைத்திருக்கின்றன. வெகுவருடங்களுக்குப் பிறகு 2017-ல் நடந்த நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா நிகழ்வில், அவரோடு ஒரே மேடையில் பேசும் வாய்ப்பு எனக்களிக்கப் பட்டது. அன்று சங்கரய்யாவும் நல்லகண்ணுவும் சேர்ந்து மேடைக்கு வந்தபோது மொத்த அரங்கமும் எழுந்து நின்று, ‘புரட்சி ஓங்குக… அப் அப் சோஷலிசம் டௌன் டௌன் கேப்பிட்டலிசம்…’’ என முழக்கமிட்டது. கொஞ்சம் தளர்ந்திருந்த சங்கரய்யாவால் நின்று பேச இயலவில்லை. உட்கார்ந்துதான் பேசினார். ஆனால் ஆவேசம் குறையாத அதே குரல்… அதே கோபம்… அதே அன்பு. அவர் பேசி முடித்ததும் சிவப்பு பனியன் அணிந்த ஒரு சிறுவன் ஓடிவந்து அவர் கையைப் பிடித்து, ‘லால்சலாம் தோழர்…’ என மழலைமொழியில் சொல்ல, தோழரின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. அது ஒரு நூற்றாண்டின் நம்பிக்கைப்புன்னகை. பாழ்பட்ட, அடிமைப்பட்ட ஒரு சமூகத்தை மாற்றிவிட முடியும் என்ற பெருங்கனவில், ஒட்டுமொத்த வாழ்வையும் மக்கள் பணிக்கு ஒப்புக்கொடுத்த தியாகத்தின் புன்னகை. மூன்று தலைமுறைகளைத் தாண்டியும் போராடும் அறத்தின் புன்னகை. மாற்றம் ஒன்றே மாறாதது என ஆழமாக நம்பும் சிவப்பின் புன்னகை!

நூற்றாண்டைக் கடக்கும் சிவப்புப் புன்னகை!

ஜூலை-15 சங்கரய்யா தோழரின் நூறாவது பிறந்தநாள். அதையொட்டி அவரைச் சந்திக்கும் விருப்பத்தைச் சொன்னபோது, உடனடியாகப் பேசி நேரம் வாங்கித் தந்தார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். குரோம்பேட்டை எளிய வீடொன்றின் கூடத்தில் தோழர்கள் சுர்ஜித், என்.வரதராஜனோடு நிற்கும் பெரிய புகைப்படம்… புத்தகங்கள்… மார்க்ஸ் ஏங்கெல்ஸின் முகங்கள் நடுவே, ‘`வாங்க…’’ என, குறித்த நேரத்தில் வரவேற்கிறார் சங்கரய்யா. வயதின் மூப்பும் உடலின் தளர்வும் அவரின் கண்களிலும் சொற்களிலும் இல்லவே இல்லை. அவரின் மகன் நரசிம்மன் தோழர், ‘`பிறந்த நாளையொட்டி தோழர்களும் தலைவர்களும் வருவாங்க… தன்னுடைய உடல்நிலைல ஏதாவது பிரச்னை வந்து அந்த நிகழ்வுகள் கெட்டுடக் கூடாதுன்னு மூணு நாளா ஒரு வேளை உணவைத் தவிர்த்துட்டாரு அப்பா…’’ என்றார். அந்த அர்ப்பணிப்புதான் தோழர் சங்கரய்யா!

சங்கரய்யாவின் வாழ்வென்பது, தமிழக அரசியல் இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு. இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் தியாகசரிதம். ‘ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு…’ என்பார்களே, அதுதான் அவரது இளமைக்காலம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவராக இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து வந்து கூட்டம் நடத்தியதற்காக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றிலிருந்து சிறையும் போராட்டங்களும் அவரது வாழ்வின் ஒரு பகுதியாகிப்போனது. நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், காமராஜரெல்லாம் அவரின் சிறைச்சாலை சகாக்கள். சீனிவாசராவிலிருந்து சீதாராம் யெச்சூரி வரை அவரின் அரசியல் சகாக்கள். மாறுவேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததில் தொடங்கி இப்போதும் பாசிசத்துக்கு எதிராக சமரசமில்லாமல் குரல் கொடுப்பது வரை போராட்டமே அவரது வாழ்க்கை. இதுபற்றிக் கேட்டால், ‘`ஓங்கிப் பிடித்தால் செங்கொடி, திருப்பி அடித்தால் தடியடி…’ன்னு ஒரு காலம் இருந்தது. எப்போ வேணும்னாலும் கொல்லப்படலாம்ங்கறதுதான் அன்றைய சூழல். எங்கள்ட்ட ஆயுதமா இருந்தது இந்த உடம்பும் சமத்துவ சிவப்புச் சிந்தனையும்தான்… ஆனாலும் உயிரைப் பத்தின கவலையே இருந்ததில்லை. அந்த தைரியத்தை எது குடுத்ததுன்னு கேட்டா, நா ஆழமா நம்பின மார்க்ஸிய தத்துவம்தான்னு சொல்லுவேன்… அந்தப் பாதையில ஏற்கெனவே மக்களுக்காக உயிரையே விட்ட தோழர்களோட தியாகம்தான்னு சொல்லுவேன். அதுதான் இன்னிக்கு வரைக்கும் என்னை இயக்கிக் கொண்டிருக்கு’’ என்பவர், ‘`நீங்க ஆத்தப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா, நீந்தணும்னா உள்ள குதிக்கணும்; கரையில நின்னுக்கிட்டு வர்றவங்க போறவங்கள்ட்ட கேட்டுட்டே இருந்தா சாகற வரைக்கும் குதிக்கவும் முடியாது நீந்தவும் முடியாது… அரசியலும் உரிமைப் போராட்டங்களும் அப்படித்தான். உங்க உரிமைகளை அடைய நீங்க துணிஞ்சு நிக்கணும். அநியாயம் பண்றவன்லாம் இங்கே துணிஞ்சு பண்ணும்போது நியாயங்களுக்காக நிக்கிறவன் ஏன் பயப்படணும்?! இதைத்தான் இளைஞர்களுக்கு எப்பவும் நான் சொல்லுவேன்’’ என்கிறார் உறுதி குறையாத குரலில்.

நூற்றாண்டைக் கடக்கும் சிவப்புப் புன்னகை!

1938-ல் மதுரை மாணவர் சங்கத்தின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா, அதன்பிறகு ஏராளமான இயக்கப் பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்திருக்கிறார். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார். இதைப் பற்றி நரசிம்மன் தோழர் சொல்லும்போது, “மாணவராகக் கைது செய்யப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறையில் இவர்களுக்கான சட்டப்படியான வசதிகளை சிறை நிர்வாகம் செய்து தரலை. அதைக் கேட்டுப் போராடியும் பயனில்லாதப்ப, அப்பா உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் மொட்டையடிச்சுட்டு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிச்சிருக்காங்க… உண்ணாவிரதம் ஆரம்பிச்சுப் பத்தாவது நாள் சிறை கான்ட்ராக்டர் வந்து பார்த்தப்போ அப்பா மாக்சிம் கார்க்கியோட ‘தாய்’ நாவலைப் படிச்சுட்டு உட்கார்ந்திருக்கார். அதைப் பார்த்து அந்த கான்ட்ராக்டர் ஆச்சர்யப்பட்டு, ‘பத்து நாள் சாப்பிடாம இருக்க… இப்பிடி உக்கார்ந்து புத்தகம் படிச்சுட்டிருக்கியேய்யா… எப்பிடிய்யா..?’ன்னு கேட்ருக்கார். அதுதான் அப்பா. இப்பவும் அப்படித்தான்… வெற்றி தோல்வி எதுவும் அவரை பாதிக்காது. எந்தச் சலனமுமில்லாம வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பார். சுதந்திரப் போராட்டம், எமர்ஜென்சின்னு பல நெருக்கடியான காலகட்டங்களை அவர் அப்படித்தான் கடந்து வந்திருக்கார். காமராஜர், கலைஞர் மாதிரியான சக தலைவர்களின் மரணங்கள் அவரை அதிகமா பாதிச்சிருக்கு. அந்த மாதிரி நேரங்களிலும், அதே மாதிரி பாபர் மசூதி இடிக்கப்பட்டது மாதிரியான சம்பவங்களின் போதும்தான் அவர் கலங்கிப் பார்த்திருக்கேன். இப்போ இந்தக் கொரோனாப் பெருந்தொற்று காலத்துல மக்கள் படற கஷ்டங்களும் அவரை ரொம்ப பாதிச்சது. நம்ம நாட்டோட கல்வி, மருத்துவக் கட்டமைப்பு பத்திதான் அவர் அதிகமா கவலைப்பட்டிருக்கார். கல்வியையும் மருத்துவத்தையும் முழுமையா அரசு ஏற்று நடத்தணும்ங்கறது எப்பவுமே அவரோட தீவிரமான கனவு…’’ என்கிறார்!

உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போதே ஜி.ஆர் தோழரும் அவர் மனைவி ரீடா தோழரும் வருகிறார்கள். அருகில் அமர்ந்து ஜி.ஆர் இயக்கம் சார்ந்த பழைய நினைவுகளைச் சொல்லச் சொல்ல, ‘`ஆமா… அப்போ கிருபாகரன் தோழர் இருந்தாருல்ல… சிவாஜி வந்துருந்தாருல்ல…’’ என ஒரு குழந்தையைப்போல உற்சாகமாக உரையாடலில் பங்கெடுக்க ஆரம்பிக்கிறார் சங்கரய்யா. ரீடா தோழரிடம் திரும்பி, ‘`பிள்ளைங்க எப்படி இருக்காங்க..? சுகாசினி எப்படி இருக்கு..?’’ என மறக்காமல் விசாரிக்கிறார். ‘`பொதுவா அரசியல் தலைவர்கள்… அதுவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் குடும்பத்தைக் கவனிக்க மாட்டாங்கன்னு சொல்லுவாங்க இல்லையா… அப்படி இல்லை. அப்பாவோட உடன்பிறந்தவங்க எட்டுப் பேர்; நாங்க பிள்ளைகள் மூணு பேர்; பேரன் பேத்திகள்னு எங்களோடது பெரிய குடும்பம்… ஆனா அப்பா எல்லாருக்கும் அன்பையும் அக்கறையையும் கொடுத்திருக்கார். அதே நேரத்துல உறவுகளுக்காகத் தன் கொள்கையையோ நெறிகளையோ ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார். அப்பாவா, ஆசிரியரா, தலைவரா அவர் எங்களுக்கு நிறைய கத்துக்கொடுத்திருக்கார்’’ என்கிறார் நரசிம்மன்.

அரசியல் பணிகளுக்கு அடுத்து சங்கரய்யா தோழருக்குப் பிடித்த விஷயங்கள் ஃபுட்பாலும் இசையும். அவரே ஒரு கால்பந்தாட்ட வீரர்தான். ‘`அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல… இந்த வாழ்க்கையை, போராட்டத்தை எதிர்கொள்வதற்கான ஒரு உந்துசக்தி… கடைசி வரைக்கும் கோல் போஸ்ட் மேல் வீரர்களின் கவனம் இருப்பது மாதிரிதான் லட்சியங்களின் மேல் நம் கவனம் இருக்கணும். அப்புறம் பொதுவாழ்க்கைக்கு, மக்கள் பணிக்கு வருகிற ஒருவருக்கு உடல் ரொம்ப முக்கியம்’’ என்பது சங்கரய்யா தோழர்களுக்கு அடிக்கடி சொல்கிற வார்த்தைகள். அதே மாதிரி இரவில் படுக்கைக்குச் சென்ற பிறகு, அவரது அறையில் ஏதேனும் ஓர் இசை மெலிதாக ஒலித்துக்கொண்டேயிருக்கும். ‘`பாரதி தேசக் கவி, பாரதிதாசன் தமிழ்க் கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பொதுவுடைமைக் கவி… இவங்க பாடல்களை தினம் ஒருதடவையாவது கேட்ருவேன்… இசையும் கவிதையும் உருவாக்குற உணர்வுகள் நம்மள சமன்படுத்தும்… உத்வேகமாக்கும். கலையை மக்களுக்கான அரசியல்மயப்படுத்தும் போது, சமூகம் மேம்படும்ங்கறது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தோட வளர்ச்சியில எத்தனையோ எழுத்தாளர்களோட, கலைஞர்களோட பங்கிருக்கே, அவங்கள மாதிரி இன்னும் நிறைய பேரை நாம வளர்த்தெடுக்கணும்…’’ என்கிற சங்கரய்யாவுக்கு மிகப் பிடித்த சினிமாப் பாட்டு, ‘ஊமைவிழிகள்’ படத்தின் ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா..!’

சங்கரய்யா தோழருக்கு எடுவர்டோ காலியானோ எழுதிய, ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’ என்ற புத்தகத்தைப் பரிசளித்தேன். ஒரு கண்டத்தின் 500 ஆண்டு ஆக்கிரமிப்பையும் விடுதலையையும் விவரிக்கும் அந்தப் புத்தகத்தில் வரும், ‘என்னதான் நடந்தாலும் தன்னைச்சூழ்ந்திருக்கும் இசை ஒருபோதும் நிற்பதில்லை என வாழ்வின் மரம் அறிந்திருக்கிறது’ என்ற சொற்களை நம் காலத்தின் மகத்தான தோழருக்கு சமர்ப்பிக்கிறேன். விடைபெறும் முன், ‘`இன்றைக்கு மலிந்துவிட்ட ஊழல், பிரிவினைவாத, பாசிச அரசியலில் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?’’ எனக் கேட்டதற்கு, புன்னகைத்தபடி சங்கரய்யா தோழர் சொன்னார், ‘`பாசிசத்தின் ஆதிக்கம் அதிகமானால் நியாயமான விடுதலை உணர்வு அதைவிட அதிகமாகும்… அந்த உணர்வு வராமலா இங்க இப்போ இவ்வளவு பெரிய விவசாயிகள் போராட்டம் நடந்துச்சு… குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரா இவ்வளவு நீண்ட போராட்டம் நடந்துச்சு? அச்சத்தைத் தவிருங்கள். தோழர்களின் இதயங்கள் இந்த உலகை வழிநடத்தும்… நம்புங்கள்… மாற்றம் ஒன்றே மாறாதது!”

நூற்றாண்டைக் கடக்கும் சிவப்புப் புன்னகை!

* சங்கரய்யாவின் தாத்தா ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே பெரியார், சிங்காரவேலர், ஜீவானந்தம் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார் சங்கரய்யா.

* 1938-ல் நடந்த முதல் மொழிப்போரான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தான் சங்கரய்யா கலந்துகொண்ட முதல் போராட்டம்.

*1941-ல் ஆங்கிலேய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா தடுப்புக்காவலில் சிறைவைக்கப்பட்டார். அவரது கல்லூரி வாழ்க்கையும் பாதியில் நின்றுபோனது.

* 1944-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சங்கரய்யாவின் வயது 22தான்.

* மதுரை சதிவழக்கில் கைதுசெய்யப்பட்ட சங்கரய்யா, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு முதல்நாள், 1947 ஆகஸ்ட் 14 அன்றுதான் விடுதலை செய்யப்பட்டார்.

* 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, சி.பி.ஐ தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறியவர்களில் இப்போது இருவர்தான் உயிருடன் இருக்கிறார்கள். ஒருவர் சங்கரய்யா, இன்னொருவர் கேரளாவைச் சேர்ந்த அச்சுதானந்தன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism