Published:Updated:

விஞ்ஞான கேமராமேன்!

கே.வி.ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
கே.வி.ஆனந்த்

- செல்லத்துரை, ஒளிப்பதிவாளர

விஞ்ஞான கேமராமேன்!

- செல்லத்துரை, ஒளிப்பதிவாளர

Published:Updated:
கே.வி.ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
கே.வி.ஆனந்த்

மனம் முழுக்கக் கனவுகளைச் சுமந்து திரிந்த ஓர் அற்புதமான கலைஞனை, காலம் இவ்வளவு சீக்கிரத்தில் பறித்திருக்கக் கூடாது. புகைப்படக்காரராகக் களத்தில் நுழைந்து, ஒளிப்பதிவாளராக உயர்ந்து, இயக்குநராக உச்சம் பெற்றவர் கே.வி.ஆனந்த். அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற பெருமை இரண்டு தமிழர்களுக்குத்தான் உண்டு. ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னொருவர் கே.வி.ஆனந்த். கனவுகளோடு நுழைந்த கே.வி.ஆனந்துக்கு ‘தேன்மாவின் கொம்பத்து’ என்கிற முதல் படமே ஒளிப்பதிவுக்காகத் தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

சூர்யா, ஜோதிகா, விஷால், சிநேகா, சித்தார்த் என கே.வி.ஆனந்த் அறிமுகத்தால் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர்கள் அதிகம். மதிப்பதில், அணுகுமுறையில், அன்பைத் தொடர்ந்து பேணுவதில் அவரை அடித்துக்கொள்ளவே முடியாது. அதனால்தான் ‘தேன்மாவின் கொம்பத்து’ படத்தில் நட்பான மோகன்லால், ‘காப்பான்’ படம் வரை அவரை ‘ஆனந்தா… ஆனந்தா...’ என அழைத்தபடியே இருந்தார். அந்த வார்த்தையைக் கேட்கவே அப்படியிருக்கும்!

விஞ்ஞான கேமராமேன்!

கேமரா நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்தவர் கே.வி.ஆனந்த். ‘விஞ்ஞான கேமராமேன்’ என்றுதான் நாங்கள் அவரைச் சொல்வோம். ‘கதைக்குத்தான் கேமரா’ என்பதில் தெளிவானவர். இயக்குநர்களின் கதையை அப்படியே மனதில் ஏற்றி, காட்சிகளுக்கு கம்பீரம் சேர்ப்பார். கதைக்கும் சூழலுக்கும் ஏற்றபடிதான் வெளிச்சத்தை அமைப்பார். அதேநேரம் லைட்டையே பயன்படுத்தாமல் ‘முஸ்தபா’, ‘காதலிக்கும் ஆசையில்லை’ பாடல்களைக் காலத்துக்குமான பாடல்களாக மாற்றினார். தேடித் தேடி நல்ல உணவுக் கடைகளைக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு ஆர்வமானவர். குக்கிராமங்களில் இருக்கும் ஹோட்டல்களைக்கூட அவருக்குத் தெரியும். ‘நாயக்’ ஷூட்டிங் நேரத்தில் ராணி முகர்ஜி, அனில் கபூர் போன்றவர்களையெல்லாம் தென்காசியிலுள்ள `விநாயகா மெஸ்’ என்ற சின்னக் கடைக்கு அழைத்து வந்து சாப்பிடவைத்தார். இரண்டு பெஞ்ச் மட்டுமே இருந்த அந்தக் கடையில் பிரபலமான ஆட்களை அமரவைத்து அழகு பார்த்தார். சாப்பிட்ட நிறைவோடு சமையல்காரர்களை அழைத்து மனமுருகப் பாராட்டுவார். ‘வயிற்றுக்கு உணவு கொடுப்பவர்கள்தான் வணங்கத்தக்கவர்கள்’ என்பார்.

பகத் சிங் வாழ்க்கையை இந்தியில் படமாக்கியபோது அந்தக் கதைக்காக அவ்வளவு உழைத்தார். அந்தப் படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்ய வேண்டுமெனச் சொல்லிக்கொண்டே இருப்பார். கடந்த மாதம்கூட, ‘ரீமேக் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. டப் செய்தாவது தமிழில் பகத் சிங் வரலாற்றைச் சொல்லிடணும்’ என்றார். கடைசிவரை அவருடைய கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் பெயருக்காகக்கூட சாமி கும்பிட மாட்டார். ஆனால் வயல்வெளி, இயற்கைப் பாங்கான பகுதிகள் என்றால், அப்படியே கும்பிட்டு நிற்பார். விவசாயத்தின் மீதும், இயற்கை மீதும் அவருக்கு அவ்வளவு ஆர்வம்.

அதனால்தான் அந்த இயற்கை அவ்வளவு சீக்கிரத்தில் அவரை அழைத்துக்கொண்டதோ என்னவோ!