Published:Updated:

“மேலேயிருந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன்!” - பூவுலகிலிருந்து விடைபெற்றார் சாந்தா

சாந்தா
பிரீமியம் ஸ்டோரி
சாந்தா

சிகிச்சை மட்டுமன்றி, அதை உலகத்தரத்தில் ஆவணப்படுத்துவதிலும், பெரும் ஆய்வுகளை நடத்துவதிலும் சாந்தா அம்மா மாபெரும் முன்னோடி

“மேலேயிருந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன்!” - பூவுலகிலிருந்து விடைபெற்றார் சாந்தா

சிகிச்சை மட்டுமன்றி, அதை உலகத்தரத்தில் ஆவணப்படுத்துவதிலும், பெரும் ஆய்வுகளை நடத்துவதிலும் சாந்தா அம்மா மாபெரும் முன்னோடி

Published:Updated:
சாந்தா
பிரீமியம் ஸ்டோரி
சாந்தா

“ஒருவேளை நான் நாளை விடைபெறக்கூடும். யாரும் அழுது புலம்பி, இங்கே பணிகள் கெடக் கூடாது; நாளை எப்போதும்போல நம் கேன்சர் மையத்தில் பணிகள் நடக்க வேண்டும். நிறைய பேர் மாலைபோட வரிசையில் வரக் கூடாது. வேண்டுமானால், மாலைக்கான காசை நம் அறக்கட்டளையில் செலுத்தச் சொல்லுங்கள். அதைப் புற்று நோயாளியின் மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். எனக்கு மணி மண்டபம் கட்டுகிறேன்... நினைவகம் எழுப்புகிறேன்... என்று இந்த இடத்தையோ, பணத்தையோ வீணாக்கக் கூடாது. என் சாம்பலை இந்த மையத்தின் எல்லா பக்கமும் தூவுங்கள். இதையெல்லாம் நான் பார்க்க மாட்டேன் என்று நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் மேலேயிருந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன்...” - மென் புன்னகையுடன் ஆஞ்சியோ சிகிச்சைக்குச் சென்ற 93 வயதான பேராளுமை மருத்துவர் சாந்தா இப்படிச் சொன்னபடியேதான் நம்மிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றார்!

‘மருத்துவ அறம்’ என்ற சொல்லின் மறு வடிவம் பத்மவிபூஷண் மருத்துவர் சாந்தா. சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மற்றும் டி.ஜி.ஓ முடித்தவர். அடையாறு கேன்சர் மையத்தை மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் தொடங்கியபோது, அந்த மையத்தின் பொறுப்பேற்றவர், திருமணம் செய்துகொள்ளாமல் சுமார் 65 வருடங்களாகத் தொய்வின்றி உழைத்தார். சர் சி.வி.ராமன், சந்திரசேகர் என நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள் குடும்பத்திலிருந்து வந்தவர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சாந்தா அம்மா பணியாற்ற வந்தபோது, அவரது சம்பளம் 200 ரூபாய்.

அந்த மருத்துவமனை 30 சதவிகிதம் இலவசமாகவும், 30 சதவிகிதம் நடுத்தர, சாமானிய மக்களுக்கு சகாயக் கட்டணத்திலும், 40 சதவிகிதம் சரியான பணம் பெற்றும் சிகிச்சை அளிக்கிறது. சாதாரணமாக, மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் செலவாகும் மார்பக அறுவை சிகிச்சை மற்றும் கீமோ சிகிச்சையை ஒரு பைசா செலவின்றி பெற்றுத் திரும்பும் ஏழைப் பெண்ணை புன்னகையுடன் நீங்கள் அங்கு சந்திக்கக்கூடும். ஒரே காரணம், சாந்தா அம்மா. பெண்களுக்கு கர்ப்பப்பை, கழுத்து, மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சையிலும், கதிர்வீச்சு சிகிச்சையிலும், கீமோ சிகிச்சையிலும் இந்த மருத்துவமனையின் அனுபவங்கள் ஏராளம்.

சிகிச்சை மட்டுமன்றி, அதை உலகத்தரத்தில் ஆவணப்படுத்துவதிலும், பெரும் ஆய்வுகளை நடத்துவதிலும் சாந்தா அம்மா மாபெரும் முன்னோடி. இந்தியாவில் ‘கேன்சர் ரெஜிஸ்ட்ரி’ எனும் பெரும் ஆவணத்தைத் தொடங்கிய பெருமை அம்மாவையே சாரும். புற்றுநோய்க்கான உயர் படிப்பைத் தொடங்கியதும் இந்த நிறுவனம்தான். இவர்களின் முயற்சியால்தான் அரசுகள் புகையிலையை படிப்படியாக ஒழிக்க முன்வந்திருக்கின்றன. ‘ஆரம்பநிலையிலேயே புற்றை கணித்தல்’, ‘புற்றுநோய் வராமல் தடுக்க சமூகத்தின் அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது’ இவ்விரண்டும் சாந்தா அம்மாவின் பெரும் முன்னெடுப்புகள்.

“மேலேயிருந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன்!” - பூவுலகிலிருந்து விடைபெற்றார் சாந்தா

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் சாந்தா அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்து, நடக்க இயலாதபோதும் பிறர் உதவியுடன் வந்து மருத்துவம் பார்த்தார். நாடே கோவிட்டில் நிலைகுலைந்து நின்றபோதும், பணிக்கு வந்து மருத்துவர்களையும் செவிலியர்களையும் உற்சாகப்படுத்தினார். சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவத்தை ஆய்ந்தறிந்து, ஆவணப்படுத்தி புற்றுநோய் சிகிச்சையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற அவா சாந்தா அம்மாவுக்கு இருந்தது. சமீபத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, புற்றுநோயில் சித்த மருத்துவ ஆய்வைத் தொடங்கியதே இதற்கு சாட்சி.

‘இந்தியாவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ்’ என்று சொல்லக்கூடிய அடையாறு மருத்துவமனை ஆலமரத்தின் விழுதுகளால், வாழ்வோ அல்லது கூடுதல் வாழ்நாளோ பெற்றவர்கள் உலகெங்கும் உண்டு.

நீட் மூலம் பணமே பிரதானமாகிவிட்ட சூழலில், மருத்துவம் என்பது அறப்பணி என்கிற சொல்லே அகராதியில் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் சாந்தா அம்மாவை இழந்தது பெரும் வலியை ஏற்படுத்துகிறது. ஆனாலும், அம்மையாரின் கடைசி நிமிட வார்த்தைகளை ஏற்று, அவரது நிரந்தர பிரிவு நாளன்று அடையாறு மருத்துவமனையின் அத்தனை மருத்துவர்களும், செவிலியர்களும், ஊழியர்களும் ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு புன்னகையுடன் சிகிச்சை அளித்தது மருத்துவ அறத்தின்மீது நம்பிக்கையைத் தக்கவைக்கிறது. தான் ஆசைப்பட்டபடி, நிச்சயம் அதை மேலிருந்து பார்த்து வாழ்த்தியிருப்பார் சாந்தா அம்மா!