Published:Updated:

நூற்றாண்டைக் கடந்த போராளி!

கே.ஆர்.கெளரி
பிரீமியம் ஸ்டோரி
கே.ஆர்.கெளரி

எமர்ஜென்சி காலத்தில் கம்யூனிச சித்தாந்தத்துக்காகத் தங்கள் இதயங்களைத் திறந்துவைத்தவர்கள் ஆலப்புழா மக்கள்.

நூற்றாண்டைக் கடந்த போராளி!

எமர்ஜென்சி காலத்தில் கம்யூனிச சித்தாந்தத்துக்காகத் தங்கள் இதயங்களைத் திறந்துவைத்தவர்கள் ஆலப்புழா மக்கள்.

Published:Updated:
கே.ஆர்.கெளரி
பிரீமியம் ஸ்டோரி
கே.ஆர்.கெளரி

“போலீஸ் லத்திக்குக் குழந்தை கொடுக்கும் சக்தி இருந்திருந்தால், நான் ஓராயிரம் லத்திக் குழந்தைகளைப் பெற்றிருப்பேன்'' - எமர்ஜென்சி காலத்தில் சிறை வாசம் அனுபவித்த கே.ஆர்.கெளரியம்மா, போலீஸ் அராஜகம் பற்றி இப்படிக் கூறியிருந்தார். பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்த காலகட்டத்தில், புரட்சிப்பெண்ணாக வெடித்து, பல இடர்களுக்கு மத்தியில் அரசியல் ஆச்சரியமாக மாறியவர் கே.ஆர்.கெளரி.

எமர்ஜென்சி காலத்தில் கம்யூனிச சித்தாந்தத்துக்காகத் தங்கள் இதயங்களைத் திறந்துவைத்தவர்கள் ஆலப்புழா மக்கள். கயிறு திரிக்கும் தொழிலுடன் கம்யூனிசத்தையும் சேர்த்துப் பிணைத்து வார்த்தெடுத்த ஆலப்புழாவின் சேர்த்தலா பட்டணங்காடு பகுதியில் 1919 ஜூலை 14-ம் தேதி கெளரி அம்மா பிறந்தார். தனது 102-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மே 11-ம் தேதி மரணம் அடைந்தார்.

கே.ஆர்.கெளரியம்மா, முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது ஒரு விபத்து என்றே சொல்லலாம். 1948-ல் ஜனவரி மாதம் நடந்த திருக்கொச்சி சமஸ்தான சட்டசபைத் தேர்தலில், கெளரியம்மா சேர்த்தலாத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அன்றைய சி.பி.ஐ மாநிலச் செயலாளர் பி.கிருஷ்ணபிள்ளை கூறினார். இதுபற்றி பிற்காலத்தில் கெளரியம்மா இப்படிக் கூறினார், ``நான் வீட்டுக்குச் சென்றபோது பி.கிருஷ்ணபிள்ளை, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்துவ தாக கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் முடிவு செய் ததாகத் தெரிவித்தனர். நான் போட்டியிட மாட்டேன் எனத் தீர்மானமாகக் கூறினேன். `பயப்பட வேண்டாம். சி.கே.குமார பணிக்கர் தான் உண்மையான வேட்பாளர். அவர் சிறையில் இருக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு முன் சி.கே.குமார பணிக்கர் சிறையிலிருந்து விடுதலை ஆகி வந்தால், கெளரி போட்டியிட வேண்டாம்' என்றார் கிருஷ்ணபிள்ளை. நானும் சம்மதித்தேன். ஆனால், சி.கே சிறையிலிருந்து விடுதலை ஆகவில்லை. நான் போட்டியிடும் நிலை ஏற்பட்டது'' என்றார்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்த காலம் அது. அந்தத் தேர்தலில் கெளரியம்மாவின் தேர்தல் கமிட்டிச் செயலாளராகக் கிருஷ்ணபிள்ளை செயல்பட்டார். போலீஸ் கெடுபிடி காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண் நிர்வாகிகள் பலரும் வெளியில் வரமுடியாத சூழ்நிலை. கிருஷ்ணபிள்ளையின் மனைவி தங்கம்மா, வயலார் ரவியின் அம்மா தேவகி கிருஷ்ணன் உள்ளிட்ட பெண்கள்தாம் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டனர். அந்தத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரைவிட 13,000 வாக்குகள் குறைவாகப் பெற்று, தோல்வியடைந்தார் கெளரியம்மா. அன்று மொத்தம் இருந்த 108 தொகுதிகளில், 40 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கூட்டணி போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. அதில், கெளரியம்மா உள்ளிட்ட 4 பேருக்கு மட்டுமே டெபாசிட் கிடைத்தது.

நூற்றாண்டைக் கடந்த போராளி!

முதல் தேர்தலில் தோற்ற கெளரியம்மா, 1952-ல் துறையூர்த் தொகுதியில் வெற்றிச் சரித்திரத்தைத் தொடங்கினார். அதன்பின் 42 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதில் சுமார் 20 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். கேரளத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமை கொண்டவர். அவர் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த காலத்தில், ஆறடி மண் இல்லாமல் இறந்தவர்களின் உடலைப் பாயில் சுற்றி ஆற்றில் மூழ்கடிக்கும் சமூகக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தார். அனை வருக்கும் ஆறடி மண்ணுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்ததில் முக்கியப் பங்காற்றியவர் கே.ஆர்.கெளரியம்மா. `உழுபவருக்கே நிலம் சொந்தம்' என முழங்கியவர், `ஒருவர் இவ்வளவு நிலம்தான் வைத்திருக்க வேண்டும்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிலச் சீர்திருத்த சட்டத்தைக் கொண்டுவந்தார்.

பட்டியலினமான ஈழவச் சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் என்பது போன்ற பல சரித்திரப் பக்கங்களுக்குச் சொந்தக்காரர் என்றாலும், கெளரியம்மா தனது சொந்தக் கட்சி நிர்வாகியான டி.வி.தாமஸைத் திருமணம் செய்துகொண்டதும் புரட்சிகர சரித்திர நிகழ்வுதான். கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டங்களில் பங்கேற்று பூஜப்புரா சிறையில் இருந்தபோது கெளரியம்மாவுக்கும் டி.வி.தாமஸுக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ளும்போது இருவரும் அமைச்சர்களாக இருந்தனர். அமைச்சர்கள் இருவர் காதல் திருமணம் செய்துகொண்ட சரித்திர நிகழ்வும் அதுதான். அமைச்சர்கள் இருவர் கலப்புத் திருமணம் செய்த வரலாற்று நிகழ்வாகவும் அது அமைந்தது.

1964-ம் ஆண்டு சி.பி.ஐ உடைந்து, சி.பி.எம் கட்சி தனியாக உருவெடுத்தது. அப்போது சி.பி.எம் பக்கம் சென்றார் கெளரி அம்மா. அவரது கணவர் டி.வி.தாமஸ் சி.பி.ஐ-யிலேயே இருந்தார். சி.பி.ஐ-யை விட்டுப் பிரிந்தவர், பின்னர் கணவரை விட்டும் பிரிந்துவிட்டார். பிற்காலத்தில் சி.பி.எம் கட்சியிலிருந்தும் பிரிந்தவர், ஜனாதிபத்ய சம்ரக்‌ஷண சமிதி என்ற கட்சியைத் தொடங்கினார். காங்கிரசுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையிலும் அங்கம் வகித்தார். ஆனாலும் இடதுசாரி சித்தாந்தத்திலேயே இயங்கினார்.

குழந்தைகள் இல்லாத கெளரி அம்மாவுக்கு அரசியலே வாழ்வானது. சகாக்கள்தான் எல்லாமுமாக இருந்தனர். தன் சகாக்களுக்கு ஒரு தாயாக இருந்து வழிகாட்டிய கெளரியம்மா என்ற விளக்கு அணைந்துவிட்டது.