Published:Updated:

“மக்கள் மனதில் நிறைந்து நிற்கிறார் மதுரை ஆதீனம்!”

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

பிரீமியம் ஸ்டோரி

மதுரை ஆதீனம் 292-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 13.08.2021 வெள்ளிக்கிழமை இரவு பரிபூரணமடைந்துவிட்டார்கள். சென்னையில் மறுநாள் காலை 9:00 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்துசமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் சந்நிதானம் மறைவுக்கு புகழஞ்சலியும் மௌனப் பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டன.

27.05.1975-ல் இளைய பட்டம் சூட்டப் பெற்று, 14.03.1980-ல் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பேற்று, தம் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார் மதுரை ஆதீனம் சந்நிதானம். சரியாக 41 ஆண்டுக்காலம் ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பில் அருளாட்சி புரிந்து பொதுவாழ்வில் இடையறாது பணி செய்தார்கள். நமது குன்றக்குடி ஆதீனம், அவருக்குத் தாய்வீடாக இருந்தது. அது மட்டுமல்ல... தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் தன் ஆன்மிக வழிகாட்டி என்றும் அடிக்கடி சொல்வார்கள். குன்றக்குடி அடிகள் பெருமானின் சமய, சமூகப் பணிகள் மற்றும் தமிழ்ப் பணிகளைப் பார்த்த ஈர்ப்புதான் தன்னை துறவுப் பாதைக்கு அழைத்து வந்தது என்றும் மனப்பூர்வமாக சொல்வார்கள். மதுரை ஆதீனத்தின் பூர்வாசிரமத் தந்தையார் தியாகி குமாரசுவாமி பிள்ளையும், குன்றக்குடி ஆதீனத்தில் தொண்டாற்றியவர்.

“மக்கள் மனதில் நிறைந்து நிற்கிறார் மதுரை ஆதீனம்!”

மதுரை ஆதீனத்தில் இளைய பட்டமாகப் பொறுப்பேற்கும் முன்பு நம் மகாசந்நிதானத்திடம் ஆசிபெற்றார்கள். அதுபோலவே மதுரை ஆதீனம் சந்நிதானம் துறவு ஏற்கும் முன்பும் மதுரையில் நமது பூர்வாசிரம இல்லத்துக்கு அடிக்கடி வந்து, நமது பூர்வாசிரம தாத்தா, பூர்வாசிரமத் தந்தை ஆகியோரோடு அளவளாவி இல்லத்தில் உணவருந்திச் செல்வதுண்டு.

பள்ளிப்பருவத்தில் நாம் அடிக்கடி மதுரை ஆதீனத்துக்குச் செல்வதுண்டு. பூசை வழிபாடுகளில் கலந்துகொள்வதும், மதுரை ஆதீனத்தில் மாணவர்களுக்கு நடைபெறும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு அப்போதைய மதுரை ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருவருள் தவயோக சோமசுந்தர தேசிக பராமச்சாரிய சுவாமிகளிடம் பரிசு பெற்றுவிட்டு, பின்னர் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பராமச்சாரிய சுவாமிகளிடம் அளவளாவிவிட்டு வருவதுமுண்டு.

மதுரை ஆதீனம் குருமகாசந்நிதானம், தமிழ்மொழிப்பற்றுடன் ஆன்மிகப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றியவர்கள். தமிழ் அர்ச்சனை, தமிழ் வழிபாடு, தமிழ்வழி குடமுழுக்கு ஆகியவற்றில் நம்மோடு இணைந்து குரல் கொடுத்தவர். கம்பீரமான கணீர் குரலுக்குச் சொந்தக்காரர்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது


- என்ற குறளுக்கு இலக்கணமாக, சிறப்பாகப் பேசக்கூடிய நற்றமிழ் நாவலர். மேடையில் தேவாரம் திருமுறைகளை இனிமையாகப் பாடுவார். பிற சமயப் பாடல்களையும் பாடுவார். சமய நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து பிற சமயத் தலைவர்களோடு அன்பும் நட்பும் கொண்டிருந்தார். அனைத்து ஆதீனத் தலைவர்களிடமும் அவருக்கு நல்லிணக்கம் இருந்தது. பல அரசியல் தலைவர்களுடனும் நட்பு பாராட்டினார். உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று ஆன்மிகப் பணியாற்றினார். செய்தித்தாள், தொலைக்காட்சி முதலிய ஊடகங்களில் நேர்காணல் மற்றும் செய்திகளை தயக்கமின்றி வழங்கியவர். ஈழத் தமிழர்களுக்கு உரக்கக் குரல் கொடுத்தவர். மனதில்பட்ட கருத்தை அச்சமின்றி, தயக்கமின்றி கூறுவார்.

மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி, ஆதீனத்தின் வருவாயைப் பன்மடங்கு உயர்த்தியவர். ஆதீனத் திருமடத்தை மிக அருமையாகத் திருப்பணி செய்து பொலிவுபடுத்தியவர். ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கோயில்களுக்கும் மிகச் சிறப்பாகத் திருப்பணிகளைச் செய்து குடமுழுக்கு விழாக்களைச் சிறப்புற நடத்தியவர். எண்ணற்ற கோயில் குடமுழுக்கு விழாக்களில் கலந்துகொண்டு மேடைச் சொற்பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியவர். பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். இவ்வாறு எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர் எனப் பன்முகப் பரிமாணத்தோடு விளங்கிய மதுரை ஆதீனம் குருமகாசந்நிதானத்தின் மறைவு ஆன்மிகத் தளத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

“மக்கள் மனதில் நிறைந்து நிற்கிறார் மதுரை ஆதீனம்!”

ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகாசந்நிதானமாக ஆதீனத்தின் அருளாட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவர்களும் குன்றக்குடி ஆதீனத்தின் தம்பிரானாக சில காலம் அருள் தொண்டாற்றியிருக்கிறார். பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக சிறப்பாக அருள் தொண்டாற்றியிருக்கிறார். வாழையடி வாழை என வரும் ஆதீன மரபு தொடர்கிறது.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மிகத் தளத்தில் அருளாட்சி புரிந்த மதுரை ஆதீனம் 292-வது சந்நிதானம் பரிபூரணமடைந்தாலும் மக்கள் மனதில் நிறைந்து நிற்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு