Published:Updated:

மதநல்லிணக்க மடாதிபதி!

மதுரை ஆதீனம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஆதீனம்

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பிரச்னை என்றால், முதல் குரல் அவரிடமிருந்துதான் வரும்

மதநல்லிணக்க மடாதிபதி!

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பிரச்னை என்றால், முதல் குரல் அவரிடமிருந்துதான் வரும்

Published:Updated:
மதுரை ஆதீனம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஆதீனம்
“நாங்கள் எங்கள் முறைப்படி அவருக்குப் பிரார்த்தனை செய்யலாமா?” என்று அங்கிருக்கும் மடாதிபதிகளிடம் உலமாக்கள் அனுமதி கேட்கிறார்கள். அனுமதி கிடைத்ததும், மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்காக இறைவனிடம் அரபியில் பிரார்த்திக்கிறார்கள். அந்த இடமே அமைதியாகிறது. அதைத் தொடர்ந்து கிறிஸ்துவ அமைப்பினர் பிரார்த்தனை செய்கிறார்கள். பெரியாரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், 40 வருடங்களாக ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்திகளைத் தந்துவந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 14-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டார்.

‘‘மதுரை ஆதீனத்தோட பெருமையே, அவர் உருவாக்கிய நல்லிணக்கம்தான். ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு மரபு உண்டு. ஆனால், மக்களை விட்டு விலகி நிற்கும் அதுபோன்ற மரபுகளை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்தான் உடைத்தார். கூன் பாண்டிய மன்னனால் சமண மதத்தின் கீழ் பாண்டிய நாடு சென்று கொண்டிருந்தபோது, சைவ மத நம்பிக்கையுள்ள பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியின் வேண்டுதலால் சோழ நாட்டிலிருந்து மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர், ஆதீன மடத்தைத் தொடங்கி சமணத்தை வென்று சைவத்தை நிலைநாட்டினார். அன்று முதல் சைவத்தையும் தமிழையும் பரப்பும் முக்கிய மடமானது மதுரை ஆதீனம்.

பல ஆதீனங்கள் பொறுப்பு வகித்த இம்மடத்தில், சீர்காழியில் பிறந்த அருணகிரிநாதர் பொறுப்பேற்ற பின்புதான் மதுரை ஆதீன மடம் என்ற ஒன்று இருப்பது உலகத்துக்கே தெரிந்தது. சசிகலா கணவர் எம்.நடராசனோடு தொடர்பு, நித்யானந்தா விவகாரம், அ.தி.மு.க-வுக்குத் தேர்தல் பிரசாரம் செய்தது போன்ற விமர்சனங்கள் மட்டும் இல்லையென்றால், அருணகிரிநாதரைப் போன்ற புரட்சிகர ஆன்மிகவாதியை எங்கும் பார்க்க முடியாது’’ என்றனர் ஆதீனத்தின் தீவிர பக்தர்கள்.

தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட முக்கியமான ஆதீன மடங்கள் இருந்தாலும், எப்போதும் செய்திகளில் இடம்பெற்று வந்தது மதுரை ஆதீனமடம். காரணம், ஆன்மிக விஷயங்கள் மட்டுமல்லாமல் அரசியல், சமூகப் பிரச்னை தொடர்பாக ஆதீனம் தன் கருத்துகளைக் கூறுவார். அவர் செய்தி கொடுப்பார், அல்லது அவரே செய்தி ஆவார்.

இறைப்பணியுடன் சமூகப் பணிகளைக் குன்றக்குடி மடம் உட்பட சில மடங்கள் செய்து வந்தாலும், அரசியல் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். ஆனால், எது செய்தாலும் அதை அதிரடியாகச் செய்தவர்தான் மதுரை ஆதீனம். அதனால் எழும் விமர்சனங்களை அவர் கண்டுகொண்டதில்லை. ஆதீன மடத்தின் வாசலை அனைத்து சாதி மதத்தினர் வருவதற்கும் திறந்து விட்டவர்.

அஞ்சலி செலுத்த வந்தவர்கள் ஆதீனத்தைப் பற்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்தார்கள். ‘‘ஆரம்பக்காலத்தில் திராவிட இயக்கங்களோடு நல்ல நட்புடன் இருந்தவர் அருணகிரிநாதர். சைவத்திருமுறைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். மற்ற மத நூல்களையும் அதன் மூல மொழியில் படித்து அர்த்தம் சொல்வார். அது மட்டுமல்லாமல், கம்யூனிசம் உட்பட பல்வேறு தத்துவங்கள், இலக்கியம், வரலாறு என்று அவர் தெரிந்துகொள்ளாத சப்ஜெக்டே இல்லை. ஆங்கிலம், இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளும் தெரிந்தவர்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பிரச்னை என்றால், முதல் குரல் அவரிடமிருந்துதான் வரும். ‘மடாதிபதிகளின் பணி இறைவனுக்கு சேவை செய்வது மட்டுமல்ல; மொழிக்காக, இனத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டும்’ என்று களத்தில் இறங்கியவர். இலங்கையில் இனப்படுகொலை தொடங்கிய 82-களில், ஈழ விடுதலைக்கு ஆதரவாகப் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். இதனால், இவரை மத்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஆதீனங்களுக்குத் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அருணகிரிநாதரும் துப்பாக்கி வைத்திருந்தார். வாகனங்கள்மீது அதிக பிரியம் கொண்டவர். சைவ சித்தாந்தம் படிப்பதற்கு முன் மாலை நாளிதழில் க்ரைம் ரிப்போர்ட்டராக சென்னையில் பணி செய்த காலத்தில், புல்லட்டில் பறப்பாராம். அதன் நினைவாக, மடத்தின் போர்ட்டிகோவில் புல்லட்டை வைத்திருந்தார். கூடவே பழைய மாடல் ஃபியட் கார், அம்பாஸடர் என வகை வகையான கார்கள் வைத்திருந்தார். அனைத்து வாகனங்களின் பதிவு எண்ணும் ஒரே மாதிரியாக இருக்கும்.

நாகூர் ஹனிபாவின் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்பார். சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களும் அவருக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக, ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...’ என்று அவர் பாடிய பாடலைத்தான் ரிங் டோனாக வைத் திருந்தார். திரைத் துறை அப்டேட்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார்.

மதநல்லிணக்க மடாதிபதி!

லேட்டஸ்ட் மொபைல்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர், கம்ப்யூட்டர் இயக்குவதிலும் இணைய தளங்களில் தேடுவதிலும் படுவேகம்.

எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, கி.வீரமணி, பழ.நெடுமாறன், வைகோ, ஆர்.நல்லகண்ணு உட்பட பலருடன் நட்பு வைத்திருந்தாலும், சமீப காலங்களில் தேர்தலில் அ.தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

நினைக்கும்போதெல்லாம் இளைய ஆதீனமாக யாரையாவது நியமிப்பது; மடத்தின் மரபை மீறி இரண்டு இளம் பெண்களை நிர்வாகம் செய்ய வைத்தது ஆகியவை சர்ச்சையானது. இளைய ஆதீனமாக சர்ச்சைக்குரிய நித்யானந்தாவை நியமித்ததால், இவரும் சர்ச்சைக்குரியவராக மாறினார். பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தியபின் அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். ‘நான்தான் இளைய ஆதீனம்’ என்று நித்யானந்தா தாக்கல் செய்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. ஆதீன மடத்தின் சொத்துகளைப் பலருக்கும் லீசுக்கு விட்டு அதில் பிரச்னை ஏற்பட்டு, அந்த வழக்குகளும் நடந்துவருகின்றன.

1,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள மிகப் பெரிய ஆதீனத்தின் அசைக்க முடியாத மடாதிபதியாக இருந்து மறைந்த அருணகிரிநாதருக்கு, தமிழர்கள் வாழும் நாடுகளில் பெரும் செல்வாக்கு இருக்கிறது. சர்ச்சைகளைக் கடந்து பார்த்தால், ஆன்மிகத்தில் புரட்சி செய்தவராகத்தான் மதுரை ஆதீனம் என்றழைக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகளை நினைவுகூர முடிகிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism