Published:Updated:

எந்தையின் கரங்கள்!

நெல்லை கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை கண்ணன்

- சுகா

எந்தையின் கரங்கள்!

- சுகா

Published:Updated:
நெல்லை கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை கண்ணன்

பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் என்னை நிறுத்தி, கடும் கோபத்துடன் ஆங்கிலத்தில் வாத்தியார் பாலுமகேந்திரா கடுமையாகத் திட்டித் தீர்த்தார். கோபம் வந்தால் அவருக்கு கலப்பில்லாத ஆங்கிலம்தான் வரும். ‘‘பாரதி சொல்லித்தான் எனக்குத் தெரியுது. நீ இத்தனை நாளா சொல்லாம இருந்தது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் தெரியுமாடா?’'

விஷயம் இதுதான். நான் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரியத் தொடங்கி நான்காண்டுகள் கழித்தே நான் இன்னாரின் மகன் என்பது அவருக்குத் தெரிய வந்தது. அதுவும் இயக்குநர் பாரதிராஜா சொல்லி அவருக்குத் தெரிய வந்ததில் வாத்தியாருக்கு அவமானம் கலந்த கோபம்.

‘‘யோவ் பாலு, எப்பேர்ப்பட்ட ஆளோட மகன் உன்கிட்ட இருக்கான் தெரியுமா?!'’ என்று சொல்லியிருக்கிறார். அந்தக் கோபத்தில்தான் எனக்கு அந்த ஆங்கிலத் திட்டு.

வாத்தியாருக்காவது நான்காண்டுகள் கழித்துத் தெரிய வந்தது. இளையராஜா அவர்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் கழித்தே தெரிந்தது. பெரியவர் ஆங்கிலத்தில் திட்டாமல் தமிழில் திட்டினார். நானாகப் போய் யாரிடமும் ‘நான் நெல்லை கண்ணனின் மகன்' என்று சொல்லிக் கொண்டதில்லையே தவிர, அவர்களாக அறிந்து கொண்டு கேட்டால் அதை மறைத்ததில்லை.

என் தகப்பனாரின் கம்ப ராமாயணச் சொற்பொழிவைக் கேட்டு வாத்தியார் மலைத்துப் போனதும், ‘‘Unbelievable. தங்குதடையில்லாம அதெப்படிப்பா இத்தனை பாட்டு சொல்ல முடியுது?! Unbelievable. Unbelievable'’ என்று வாய் ஓயாமல் வியந்ததும் பின்னர் நிகழ்ந்தது.

ஆரம்பக் காலத்தில் என் தகப்பனாரை ‘சொல்லின் செல்வர்' என்று குறிப்பிடுவார்கள். அமரர் ஈ.வி.கே.சம்பத்துக்குப் பிறகு அந்தப் பட்டத்தை அலங்கரித்த என் தந்தை பின்னர் ‘நாவுக்கரசர்' என்றழைக்கப்பட்டார்கள். நாளடைவில் ‘தமிழ்க்கடல்' என்று இன்னும் மரியாதையுடன் சொல்லத் தொடங்கினர்.

சட்டென்று யாரையும் சொல்லால் சுட்டுவிடும் குணமும், சொன்ன சொல்லை அன்பைப் பொழிந்து துடைத்தெறிந்துவிடும் இயல்பையும் கொண்ட அபூர்வமான பிறப்பாகவே அவரை நான் பார்த்திருக்கிறேன். இந்த குணங்கள் மகனாகிய என்னையும் பாதித்து, அசரடித்து வீழ்த்தியிருக்கின்றன. ஆனால் ஒருநாளும் என்னைக் கைநீட்டி அடித்ததில்லை. அவர்களது தகப்பனாரின் பெயரான சுப்பையா என்பதே என் இயற்பெயர். அதனாலேயே என்னை ‘ஐயா' என்பார்கள். திரைத்துறை நண்பர்களான சீமான், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா உட்பட பலர் இதனாலே என்னை ‘ஐயாமகன்' என்பார்கள். கடந்த பத்து பதினைந்தாண்டுகளாக ‘ஐயா' காணாமல்போய் ‘சுகா' என்றே தகப்பனாரால் அழைக்கப்பட்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் தென்காசி புத்தகத் திருவிழாவில் பேசினேன். கிளம்பும்முன் படுக்கையில் படுத்திருந்த என் தந்தையிடம் திருநீற்று மரவையை நீட்டி என் நெற்றியில் திருநீறு அணியச் சொன்னேன். கைகள் நடுங்க திருநீறு அணிவதற்கே சில நிமிடங்கள் பிடித்தன.

‘யார்க்கும் குடியல்லேன் யானென்ப

தோர்ந்தனன் மாயையே! - உன்றன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை - மாயையே!’

எந்தையின் கரங்கள்!

என்று பாரதியின் மாயையைப் பழித்தல் பாடலை மதுரை அரசரடி பாலத்தில் நிகழ்ந்த பட்டிமன்றத்தில் சொல்லும்போது மேடையில் கிழக்கும் மேற்குமாக வீசி உரைத்த கைகள்;

‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?’ என்கிற கம்ப ராமாயணப் பாடலை புதுவை நிகழ்வொன்றில் ஒரு நாட்டியம் போல நளினத்துடன் அசைத்து அசைத்து விளக்கிச் சொன்ன கைகள்;

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள் உறு புன்கண் தீர்த்தோன்’

எனப் பிரவாகமெடுத்துச் சிலம்பின் பாடலை ராணி அண்ணா கல்லூரியில் சொல்லி, கண்ணகியின் சிலம்பேந்திய கைகள் போலவே ஆவேசமாக அசைந்த கைகள்.

பார்க்கப் பிடிக்காமல் கண்களைத் திருப்பிக் கொண்டேன். ‘நல்லா பேசிட்டு வா’ என்றார்கள். அன்றைக்கு நான் நன்றாகப் பேசியதாக, கேட்டவர்கள் சொன்னார்கள். நான் பேசி முடித்தபின் நன்றியுரை கூறிய நூலகர் ‘நான் தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் மகன்’ என்பதை அறிவித்தபின் மேடையிலும் அரங்கிலும் அமர்ந்திருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். முகம் தெரியா குரலொன்று ‘அதானே பாத்தேன்!’ என்றது.

சென்னைக்குக் கிளம்பும் முன் தந்தையைச் சென்னைக்கு அழைத்தேன். முதலில் மறுத்தவர்கள், மீண்டும் நான் வற்புறுத்தியவுடன் ‘ஆடி இறுதி முடிந்து வருகிறேன்’ என்றார்கள். ஆடி இறுதி முடிந்ததும் குடும்ப நண்பரும், மருத்துவருமான ராமச்சந்திரன் மாமாவிடமிருந்து தமிழ்க்கடல் தாமிரபரணிக்குக் கிளம்பி விட்டதாகக் தகவல் வந்தது. நள்ளிரவில் நானும், சகோதரனும் வந்து சேர்ந்தோம்.

‘வாரேன்னு சொல்லியிருந்தேளே!’ என்று கதறினேன். ‘என் வீட்ல இருந்துதான் கிளம்புவேன். உன் வீட்லேருந்து கிளம்புவேனால?’ என்ற குரல் கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து கேட்டது. இந்த முறை கைகள் மார்போடு சேர்த்துக் கட்டப்பட்டி ருந்தன.

என் தகப்பனார் எனக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்தவை என்னவெல்லாம் என்றெண்ணிப் பார்க்கிறேன். ‘பேச்சுப் பெருங் கலைஞன் மறைந்தான்' என்று அழுது அஞ்சலி செய்த சகோதரனையும், மாற்று அபிப்ராயத்தின் தீவிரத்தின் காரணமாக என் தந்தையின் மறைவுச் செய்தியைக்கூடக் கொண்டாடிய சகோதரனையும் இரு கரங்களினால் ஒருசேர ஆரத்தழுவிக்கொள்ளச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதை எப்போதும் செய்வேன். அப்போது என் கரங்கள், என் தகப்பனாரின் கரங்களோடு சேர்ந்து நான்காகி யிருக்கும்.