Published:Updated:

இயற்கையின் இயல்பானவன்!

பிரான்சிஸ் கிருபா
பிரீமியம் ஸ்டோரி
பிரான்சிஸ் கிருபா

- யூமா வாசுகி

இயற்கையின் இயல்பானவன்!

- யூமா வாசுகி

Published:Updated:
பிரான்சிஸ் கிருபா
பிரீமியம் ஸ்டோரி
பிரான்சிஸ் கிருபா

முதற்கட்டமாக, பிரான்சிஸ் கிருபா நம் மொழியின் தலைசிறந்த பெருங்கவிஞன். மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதில் சாத்தியமாகாத புதிய உரைநடை மொழியை பிரான்சிஸ் கிருபா உருவாக்கிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அத்தகைய சிறிய வயதில் அவர் செய்தளித்த அளப்பரிய சாதனை; அதனுடைய மகத்துவம் என்றென்றும் நம் தமிழில் நிலைத்திருக்கும்.

பிரான்சிஸ் கிருபா நடைமுறை வாழ்க்கையில் எதையும் பொருட்படுத்தவில்லை. பணம் கிடைத்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அவர் தன் இயல்பூக்கத்தை, மன எழுச்சியை அப்படியே கொண்டாடிக்கொண்டுதான் வருவார். உடைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியாது. ஒரு அலைபேசியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் இருக்காது. அவருடன் தொடர்புகொள்ள விரும்பக்கூடிய நண்பர்கள் அவருக்கு அலைபேசி வாங்கித் தருவார்கள். சில தினங்களில் அது தொலைந்து விடும். அந்த எண்ணுக்குத் தொடர்புகொள்ள முடியாது. அப்போது உடனே கிருபா எங்கிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்து இன்னொரு அலைபேசி வாங்கிக் கொடுப்பார்கள். அதுபோல பல அலைபேசிகள் அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவை எதையுமே பாதுகாத்து வைத்துக்கொண்டதில்லை. சாப்பாடு இருந்தால் நல்லது; இல்லையென்றாலும் பிரச்னை இல்லை. ஒரு வசிப்பிடம் இல்லாததுகூட வருந்தக்கூடிய பிரச்னையாக இல்லை. அவர் வேறு எதையுமே நாடவில்லை. அவரது நாட்டம் முழுக்க முழுக்கவும் கவிதை சார்ந்துதான் இருந்தது.

நான் போய்ப் பார்க்கும்போது சில சந்தர்ப்பங்களில், “இன்றைக்கு முழுதும் நான் சாப்பிடவில்லை” என்று சொல்வார். ஆனால் அப்போதும் அவர் பாக்கெட்டில் நான்கைந்து கவிதைகள் இருக்கும். பசியெல்லாம் ஒருபோதும் அவர் கவிதை எழுத்தைத் தடுத்ததில்லை. கவிதைக்கான ஊக்கத்தைப் பசி முறித்ததில்லை. வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் எவ்வளவு பெரிய வறுமையிலும் பெரும் வலி மிகுந்த நெருக்கடிகளில் இருந்தாலும், அவருக்கும் கவிதைக்குமான மிகுந்த ஆழங்கொண்ட உறவுப் பிணைப்பு நிலவிக்கொண்டுதான் இருந்தது.

அவர் கவிதைகளின் அற்புதங்களில் கவரப்பட்டு அதைத் தொகுப்பாக்கும் முயற்சிகள் நடந்தன. தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சி ‘மெசியாவின் காயங்கள்’ எனும் முதல் தொகுப்பை மிகச் சிறப்பாக வெளியிட்டார். அதே காலத்தில் நான் ‘குதிரைவீரன் பயணம்’ என்று ஒரு சிறுபத்திரிகை வெளியிட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இதழ் கிருபாவின் அட்டைப் படத்துடனும் உள்ளே அவரின் கவிதைகளுடனும் வெளிவந்தது. அதில் கிருபாவுக்குப் பெரும் மலர்ச்சி, உத்வேகம். ஊருக்குப் போகும்போது அதை அவர் அம்மாவிடம் காட்டியிருக்கிறார். “தம்பி, இந்தப் படத்துல நீ இயேசுபோல இருக்கிறாய்” என்று அவர் அம்மா சொன்னதாக, திரும்பி வந்து என்னிடம் சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கிருபாவின் இடர்ப்பாடான பொழுதுகளில், அவருக்கு ஏதொன்றும் பாதகம் ஏற்பட்டால் அதிலிருந்து அவரை விடுவிக்க நண்பர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கவின்மலர். கோயம்பேட்டில் இறந்துகிடந்த ஒருவருக்கு கிருபா உதவப்போய், பிறகு பெருஞ்சிக்கலில் மாட்டினார். அப்போது பெரும் ஆபத்து அவரை எதிர்நோக்கி இருப்பதாக எனக்குப் பதற்றம், கலவரம். ‘ஐயோ, என்ன செய்யப்போகிறாரோ... இப்படிப்பட்ட துன்பத்தில் சிக்கிக்கொண்டாரே’ என்று மிகவும் பயந்தேன். கிருபா வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்திற்கு நான் சென்று சேர்வதற்கு முன்பே, கவின்மலர் அவர்கள் நண்பர்களையெல்லாம் கூட்டி இயன்றவரை போராடி அந்த மகா பெரிய ஆபத்திலிருந்து, கொலைக்குற்றத்திலிருந்து கிருபாவைக் காப்பாற்றினார்.

இயற்கையின் இயல்பானவன்!

சமீபத்தில் கிருபாவுக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. அது அவருக்கு அதீத அச்சத்தைக் கொடுக்கக்கூடிய மனநிலையாக இருந்தது. பயந்து ஓடி எங்காவது ஒளிந்துகொள்ள முயற்சி செய்வது, அனைவரின் பார்வையிலிருந்தும் தன்னைத் தப்புவித்துக்கொண்டு மறைவாக இருக்க விரும்புவது... இதுபோல ஏற்பட்டது. அப்போது காவல் நிலையத்திற்குச் சென்று அவர் இருந்ததாகச் சொன்னார்கள். தற்செயலாக அங்கே கிருபாவைப் பார்த்த நண்பர் ஒருவர், “ஏன் இங்கே வந்து நிற்கிறீர்கள்?” என்று கேட்க, கிருபா “எனக்கு பயமாக இருக்கிறது. நான் பாதுகாப்புத் தேடித்தான் வந்தேன்” என்றிருக்கிறார். அப்போது அவருக்குத் திடமூட்டி அழைத்துக்கொண்டு வந்தார்கள். இதைக் கேள்விப்பட்டு கவின்மலர், கிருபாவை மருத்துவனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். வாசுதேவன் நிதி சேகரித்துக் கொடுத்தார். பிறகு கிருபா சற்று உடல் தேறி வந்தார். விமலாதித்த மாமல்லன், கிருபாவின் அறை வாடகையையும் சாப்பாட்டுச் செலவுகளையெல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று முன்வந்தார். இதற்கும் பல மாதங்கள் முன்பே படைப்புக் குழுமம் கிருபாவைத் தத்து எடுத்து அவருக்கு மாதச் செலவினம் கொடுத்து வந்தது.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த வியாபார உலகில், எதையும் சுயநலமாக அணுகக்கூடிய மிக இறுக்கமான இந்தப் பரப்பில், கிருபாவின் கவிதைகளைப் படித்து உணர்ந்த அந்தக் கணத்திலேயே அவற்றை ஆராதித்து, கிருபா செல்லக்கூடிய உயரத்தை முன்னுணர்ந்து, அவரின் புலமையின் ஆழத்தையும் கவித்துவத்தின் தீவிரத்தையும் தெரிந்துகொண்டு அரவணைத்து, அவரது ஆற்றலைத் தொடர்ந்து சுடர்விடச் செய்து, ‘கன்னி’ நாவல்வரை கொண்டு வந்த தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் அண்ணாச்சி கிருபாவுக்கு அளப்பரிய அர்ப்பணிப்பைச் செலுத்தியிருக்கிறார். கிருபா கவிதைகளின் சக்தி, அவர் இலக்கியத்தின் மகத்துவம் எண்ணற்ற நண்பர்களை கிருபாவுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அது அவரின் கவியாற்றலின், கட்டுக்கடங்காத உச்சக் கவிப்பெருக்கின் விளைவு.

மிகப்பெரிய பேரன்பான மனிதர், இவரைப்போன்ற ஒரு நண்பரை, உன்னதம் பொருந்திய, இயற்கையின் இயல்புகள் அத்தனையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு படைப்பாளியைப் பார்த்ததில்லை. அவரை இழந்த துயரம் அதிகரித்துவருகிறது. அவருக்கு என் அஞ்சலி.