Published:Updated:

குருவின் குரல்...

பிரதாப் போத்தன்
பிரீமியம் ஸ்டோரி
பிரதாப் போத்தன்

- சுகா

குருவின் குரல்...

- சுகா

Published:Updated:
பிரதாப் போத்தன்
பிரீமியம் ஸ்டோரி
பிரதாப் போத்தன்

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனை வாத்தியார் பாலு மகேந்திராவின் மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களில் ஒருவராகத்தான் பார்த்திருக்கிறோம். ஏற்கெனவே பத்மராஜனின் திரைக்கதையில், பரதனின் இயக்கத்தில் ‘தகரா’ மலையாளத் திரைப்படத்தில் நல்ல சினிமாவுக்கான ஆரம்ப அறிமுகம் பிரதாப்புக்குக் கிடைத்திருந்தாலும், பின்னாள்களில் அவர் வேறு அவதாரங்கள் எடுப்பதற்கான பாலபயிற்சியும், தன்னம்பிக்கையும் வாத்தியார் பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ மற்றும் ‘மூடுபனி’ திரைப்படங்களின் வாயிலாகக் கிடைத்தன. அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களான கே.பாலச்சந்தர், மகேந்திரன் போன்றவர்களின் படங்களில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து, ‘ஏ பிரதாப்பு’ என்று தமிழ்நாட்டின் கடைக்கோடி ரசிகன் வரைக்கும் எளிதாக அடையாளம் காண்கிற முகமாக அவர் மாறினார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலான வயது வித்தியாசம் இருந்தாலும் ‘பாலு’ என்று அன்புடனும் உரிமையுடனும் தன் குருமார்களில் ஒருவரான வாத்தியாரை அழைத்து, அவரின் இளைய நண்பராகவே பிரதாப் பழகி வந்தார். வாத்தியாரின் மகன் ஷங்கி மகேந்திராவை கொடைக்கானல் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்க்கும் அளவுக்கான பந்தம் அவர்கள் இருவருக்கிடையே இருந்தது. ‘‘அழியாத கோலங்கள் பண்றப்போ கேமராவையும், சில குறிப்புகளையும் கைல வச்சுக்கிட்டுதான் ஷூட்டிங்குக்குக் கிளம்பிப்போனேன். கூடவே ஷோபாவும், பிரதாப்பும் இருக்காங்கங்கற தைரியம்தான், துணிஞ்சு தமிழ்ல என்னோட முதல் படத்தை டைரக்ட் பண்ண வச்சது’’ என்பார் வாத்தியார்.

குருவின் குரல்...

வாத்தியாரின் அடுத்த படமான மூடுபனி தொடங்கும்போது மலையாளத்தில் சங்கரன் நாயர் உட்பட இன்னும் சில இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தார் பிரதாப். அவற்றில் பிரதாப் போத்தனுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த பரதனின் ‘சாமரம்’ திரைப்படமும் அடக்கம். ஜான் பால் திரைக்கதை எழுதிய ‘சாமரம்’ படத்தை அழியாத கோலங்களின் தொடர்ச்சியாகவே நான் நினைக்கிறேன். தனது கல்லூரிப் பேராசிரியையைக் காதலிக்கும் மாணவனின் கதை அது. அழியாத கோலங்களிலும் மூடுபனியிலும் பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருந்தவர் ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா. வாத்தியார் போன பிறகு அவரது குரலாக பிரதாப் எங்களுடன் வாழ்ந்து வந்தார். அந்தக் குரலும் வாத்தியாரிடமே போய்ச் சேர்ந்து விட்டது.