அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய ‘கம்பன் விழா’வின்போது கதரி கோபால்நாத் பெற்ற விருது, வாழ்க்கையில் அவருக்கு முக்கியமானதொரு நிகழ்வாக இருந்திருக்கிறது. சென்ற வருடம் மார்ச் மாதம் கொழும்பில் கோலோகலமாக நடந்தது அந்த விழா. ஜிகுஜிகு உடை, கலர்ஃபுல் தலைப்பாகை என்று வித்தியாசமான கெட்டப்பில் ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டார் கதரி கோபால்நாத். உச்சபட்ச கௌரவத்தைக் கண்டு சற்றே கூச்சத்துடன் நடந்து வந்த சாக்ஸபோன் ராஜாவை சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்கள். அவருக்கு ‘கம்பன் புகழ்’ விருது வழங்கி கௌரவித்தார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“வாழ்நாளில் நான் பெறும் மிக உயர்ந்த விருது இது. இந்த ஒரு விருது மட்டுமே எனக்குப் போதும். இனி வேறு எந்த விருதும் எனக்கு வேண்டாம்...” என்று நாத்தழுதழுக்க கன்னடம் கலந்த தமிழில் பேசிக் கண்கலங்கினார் கதரி. அதற்குப் பிறகு வேறு பெரிய பட்டம் எதையும் பெறாமலேயே அண்மையில் தனது 69வது வயதில் மறைந்துவிட்டார் இந்த வசீகரக் கலைஞர்.

தந்தை தனியப்பா நாகஸ்வர வித்வான். மகனையும் அந்தத் துறையிலேயே தயார்படுத்த முனைந்தார். ஆனால், ஒருசமயம் மைசூர் அரண்மனையின் இசைக்குழுவில் வாசிக்கப்பட்ட சாக்ஸபோன், கோபால்நாத் கண்களில் பட்டிருக்கிறது. பளபளக்கும் கம்பீரமான அந்த இசைக்கருவி அவரைக் கவர்ந்திருக்கிறது. அதிலிருந்து வெளிப்பட்ட மெலடியால் கிறங்கடிக்கப்பட்டார்.அப்போதிலிருந்து, ‘தொட்டால் சாக்ஸபோன்தான்’ என்று தீர்மானித்துவிட்டார்.
60களில் சாக்ஸபோனின் விலை 800 ரூபாய். ஹைதராபாத்தில் ஆர்டர் கொடுத்து வரவழைக்க வேண்டும். கதரியின் மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு அது கட்டுப்படியாகாத விஷயம். விடவில்லை கோபால்நாத். அம்மாவிடம் அழுது அடம்பிடித்து நூறு ரூபாய் முன்பணம் அனுப்ப... கதரிக்கு சாக்ஸபோன் வீடு தேடி வந்தது!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வீட்டில் எந்நேரமும் கோபால்நாத் சாக்ஸபோனை வாசித்துக்கொண்டிருந்தது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லையாக இருந்திருக்கிறது. எனவே கதரியில் தேவி கோயிலுக்கு அருகிலிருந்த அத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். பிராக்டீஸ் தொடர்ந்தது. கோயிலில் சத்திய நாராயணா பூஜையின்போது வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வளர்ச்சியும் தொடர்ந்தது.
ஒரு சமயம் செம்பை இசை விழாவின்போது கதரி கோபால்நாத்தின் வாசிப்பு, சீனியர் இசைக் கலைஞர் டிவி கோபாலகிருஷ்ணனை ஈர்த்திருக்கிறது. கையோடு அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து தன் அரவணைப்பில் இசை பயிற்றுவித்திருக்கிறார் குரு டி.வி.ஜி.

சென்னையில் நாரத கான சபாவுடன் அதிகம் பாசப்பிணைப்பு கொண்டிருந்தார் கதரி கோபால்நாத். டிசம்பர் இசை விழாவில் காலை நேர ஸ்லாட்டில் வாசிக்கத் தொடங்கியவர். பின்னர் மாலை நேரத்துக்கு பிரமோஷன் கிடைக்கப் பெற்று, ஒவ்வொரு வருடமும் இசை விழா தொடக்க நாளன்று ‘இனாகுரேஷன் கச்சேரி’ கதரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் என்பது வழக்கமாகிவிட்டது.
ஒருமுறை டைரக்டர் கே.பாலசந்தர் கதரியின் சாக்ஸபோன் கச்சேரியைக் கேட்டிருக்கிறார் - அவரின் வாசிப்பில் அசந்துபோனவர், தமது ‘டூயட்’ படத்தின் கதாநாயகனை சாக்ஸபோன் கலைஞராக வடிவமைத்துவிட்டார். பின்னர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் கதரி கோபால்நாத் சாக்ஸபோனில் சங்கீத ஜாலம் செய்ய, அது பட்டி தொட்டிகளிலெல்லாம் பிரபலமாக... சென்னை சபாக்களில் சாக்ஸபோனுக்குத் தனி மரியாதை கிடைத்தது சரித்திரம்!
‘டூயட்’ படத்தில் சாக்ஸபோனில் கல்யாண வசந்தம் ராகத்தை கதரி இரண்டு நிமிடம் ஸோலோவாக ஆலாபனை செய்துவிட்டு, தொடர்ந்து தவிலுடன் தானம் வாசித்துவிட்டு, இறுதியில் அலைகளின் ஓசையுடன் வாசிப்பு நிற்கும் அந்தச் சாரலில் கல்யாணவசந்தம் என்றென்றும் குளிர்ந்துகொண்டிருக்கும்!