Published:Updated:

நீதிக்காக உயிர் நீத்தவர்!

ஸ்டேன் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டேன் சுவாமி

இளம் வயதிலிருந்தே சமூகப் பிரச்னைகளை ஆழமாக அறிந்துகொள்வது, ஆய்வு செய்வது, கேள்வி எழுப்புவது மற்றும் தீர்வுகளைத் தேடுவதில் ஆர்வம் காட்டினார்.

“சின்ன வயதிலிருந்தே ஒரு போராட்ட குணமுள்ள இளைஞனாக வளர்ந்த ஸ்டேன் சுவாமி, தன்னுடைய இறுதி மூச்சுள்ளவரை நீதிக்காகப் போராடிய மனிதராகத் தடம் பதித்துச்சென்றிருக்கிறார்” என்கிறாா், அவருடைய தம்பி தாமஸ் ஆல்பர்ட். ஸ்டேன் சுவாமி, திருச்சி மாவட்டத்தில் விரகலூர் என்ற குக்கிராமத்தில் 1937-ம் ஆண்டு பிறந்தாா். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, இயேசு சபையென்னும் சர்வதேச அமைப்பில் சேர்ந்து சமூக சேவை செய்யத் தன்னை அா்ப்பணித்துக்கொண்டாா்.

வடமாநிலங்களில் பழங்குடியினா் மற்றும் தலித் மக்கள் மத்தியில் பணிபுரிய முன்வந்தவா். இயேசு சபையில் பயிற்சி பெறும் சூழலில், பழங்குடியினர் அதிகமாக வாழும் கிராமங்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தச் சமயத்தில், அவா்களுடைய வாழ்க்கை முறை, உலகக் கண்ணோட்டம், கள்ளங் கபடமற்ற உள்ளம், எளிமை, இயற்கையோடு கொண்டுள்ள உறவு அனைத்தையும் இவா் உற்றுக் கவனித்தாா். ‘பழங்குடிகள் வாழும் நிலம் பல கனிம வளங்களைக் கொண்டுள்ளது. ஆனால், ஏன் இவா்கள் இன்னும் ஏழைகளாக இருக்கிறாா்கள்’ என்ற கேள்வியை எழுப்பினாா். இப்படித்தான் பழங்குடியினருக்கான ஸ்டேன் சுவாமியின் பணி ஆரம்பித்தது.

நீதிக்காக உயிர் நீத்தவர்!

இளம் வயதிலிருந்தே சமூகப் பிரச்னைகளை ஆழமாக அறிந்துகொள்வது, ஆய்வு செய்வது, கேள்வி எழுப்புவது மற்றும் தீர்வுகளைத் தேடுவதில் ஆர்வம் காட்டினார். இந்திய ஜனநாயகம், அரசியல் சாசனம், மனித உரிமைகள், தலைமைத்துவம் ஆகிய தலைப்புகளில் ஆழமான பயிற்சி பெற்றார். அதன் பிறகு பெங்களூரில் இந்திய சமூக நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியபோது, பல குழுக்களுக்கு அவரே பயிற்சி வகுப்புகள் நடத்தினார். அவாிடம் பயிற்சி பெற்ற செபமாலை ராசா, ``அவர் சமூகப் பகுப்பாய்வு வகுப்பு நடத்தினால் எல்லோருக்கும் எளிதில் புரியும். அதே நேரத்தில் ஆழமான சிந்தனைக்கும், சமூக ஈடுபாட்டிற்கும் உந்தித் தள்ளுகின்ற வகையில் அந்த வகுப்பு இருக்கும்” என்றாா்.

2001-ம் ஆண்டு பீகாாிலிருந்து பிாிந்த ஜாா்கண்ட் மாநிலம் பழங்குடியினருக்கென்று ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது. அது முதல் அங்குள்ள மக்களின் மேம்பாட்டிற்கும் வளா்ச்சிக்கும் துணைநிற்கிற வகையில் அரும்பாடுபட்டாா். இந்திய அரசியல் சாசனத்தில் பழங்குடியினாின் மேம்பாட்டிற்காக என்னென்ன உட்கூறுகள், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைப் படித்து அதன்மூலமாக அவா்களின் உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டுமென்பதற்காக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். மேலும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி இளைஞா்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பதைக் கண்டு கொதித்தெழுந்த ஸ்டேன் சுவாமி, அவா்களை விடுவிக்க வேண்டுமென்பதற்காக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தாா். இறுதியில் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் இவரே ஒரு விசாரணைக் கைதியாக ஒன்பது மாதங்கள் சிறையில் துன்பத்திற்குள்ளாகி ஏழைகளின் இறைவாக்கினராக மறைந்திருக்கிறார். சிறைக்குள் இருக்கும்போது கைநடுக்கம், கால்வலி, வயிற்றுவலி என்று பல பிரச்னைகள் இருந்தாலும், அதை ஒருபோதும் வெளியில் காட்டியதில்லை. மாறாக, தன்னைப்போல் பொய் வழக்குகளில் சிறைக்குள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளவா்களுடன் ஏற்பட்ட தோழமையைப் பொிதாக நினைத்தார். ஒரு முறை தன்னோடு இருக்கின்ற சக கைதிக்கு போதுமான உடை இல்லாததைக் கண்டு வருந்தியவர், வெளியிலிருந்து தன்னுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்ட நண்பர் ஜோ சேவியாிடம், `நீ கிறிஸ்துமஸ் சமயத்தில் எனக்கு ஒரு புதிய பேண்ட், சர்ட் மற்றும் கைலி வாங்கித்தர முடியுமா?’ என்று கேட்டுள்ளாா். அவற்றை அந்தக் கைதிக்குக் கொடுத்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினாா்.

கடைசி நாள்களில் மருத்துமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரின் நண்பா் பிரைசா் தினந்தோரும் அவருடன் உரையாடியிருக்கிறாா். ‘‘ஸ்டேன் சுவாமி ஒரு போதும் வன்முறையை விரும்பியதில்லை. அமைதியான, சட்ட ரீதியிலான, ஜனநாயக வழியிலேதான் போராட்டங்களை முன்னெடுத்தாா். சாதி, மதம், இனம், மொழியைக் கடந்து எல்லோரையும் பாரபட்சமின்றி நேசித்ததோடு, அவா்களை `தோழா்கள்’ என்றழைத்தாா். சாகும் தறுவாயில்கூட தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளாா்’’ என்கிறார் பிரைசர்.

அவருடைய வாழ்க்கை முழுவதும் நீதி, உண்மை, உரிமைக்கான போராட்டத்தால் நிரம்பியுள்ளது. அவா் விடுமுறையில் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பழங்குடியினரின் வாழ்க்கையைப் பற்றியும், அவா்களுடைய வாழ்வியல் மதிப்பீடுகளைப் பற்றியுமே அதிகம் பேசியிருக்கிறாா். ‘`அவா்களைப் பிாிந்து வாழ்வது கடினமாக இருக்கிறது. என்னைச் சிறையிலிருந்து விடுவித்தால், அல்லது பிணை வழங்கினால் நான் மிகவும் நேசித்த அந்த மக்களோடு வாழ்ந்து இறந்துவிடுவேன்’’ என்று அவருடைய அண்ணன் மகன் குமாா் அலெக்ஸிடம் கூறியிருக்கிறார்.

நீதிக்காக உயிர் நீத்தவர்!

அவருடைய பணி வாழ்வில் வெளிப்படுத்திய துணிச்சலையும், தனிப்பட்ட வாழ்வில் காட்டிய எளிமையையும் பலரும் கண்டு வியந்துள்ளனர். அவருடைய பேத்தி லின்ஸி, ``தாத்தா ரொம்பவும் தைரியசாலி. எதற்கும் பயப்படமாட்டாா். கைதாவதற்கு முன், காவல்துறை அதிகாரிகள், மாவோயிஸ்ட்களோடு உங்களுக்குத் தொடர்புள்ளதா என்று கேட்டபோது, அவா்களோடு எந்தத் தொடா்பும் இல்லை என்று துணிச்சலுடன் பேசினார் என்பது என்னை வியக்க வைத்தது. அவா் 2019-ம் ஆண்டு டிசம்பா் மாதம் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, ‘நான் வீட்டிற்கு வருவது இதுதான் கடைசியாக இருக்கும். ஒரு வேளை என்னைக் கைது செய்தால், என்னுடைய எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்’ என்று துணிச்சலுடன் சொன்னாா்” என்கிறார் துக்கம் தொனிக்க.

ஒரு முறை, பெங்களூரில் இருந்தபோது, ஜோ சேவியா் அவருக்கு ஏசி பெட்டியில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தபோது, அதை ஏற்க மறுத்திருக்கிறாா். ‘`ஏழை மக்கள் பயணிக்கிற சாதாரணப் பெட்டியில் பயணிக்கவே விரும்புகிறேன். தனிப்பட்ட தேவைக்கென்று எனக்குப் பணம் எதுவும் வேண்டாம். போகிற இடத்திலெல்லாம் மக்கள் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறாா்கள்’’ என்று கூறியிருக்கிறாா். இன்று உலகமே அவரை ஒரு பேசுபொருளாக மாற்றியுள்ளது. ஆனால் மரணத்துக்குமுன் அவருக்குப் பிணைகூட வாங்க முடியவில்லை என்பது வேதனையானது.