Published:Updated:

எப்போ போராடலையோ அப்போ செத்துட்டேன்னு அர்த்தம்!

- இரா.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி
சசிகலா முன்னால் அமர்ந்திருந்தார் டிராஃபிக் ராமசாமி. “ஜெயலலிதா ஒரு தடவை என்னை வந்து பார்க்கச் சொன்னார். நான் போகலை. மறுபடியும் முதல்வரா வந்தவுடனே அவரை வந்து பார்க்கச் சொல்லி ஒரு போலீஸ்காரரை அனுப்பினார். நான் என்னோட விசிட்டிங் கார்டை அந்த போலீஸ்காரர்கிட்ட கொடுத்து, ‘அந்தம்மாவை என்னைய வந்து பார்க்கச் சொல்லு’ன்னு திருப்பி அனுப்பினேன்.

அப்பேர்ப்பட்டவன் உங்களைப் பார்க்கிறேன்னா, நீங்க கவர்மென்ட் சர்வன்ட் இல்ல. அதனால அதிகார துஷ்பிரயோகம் பண்ணின குற்றச்சாட்டு உங்களுக்குப் பொருந்தாது. தெரிஞ்சோ தெரியாமலோ உங்களுக்குப் பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கு. அதை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்க. குற்றவாளிகளை நல்லவங்களா மாற்றத்தான் சட்டமும் தண்டனையும். நீங்க நல்லபடியா மக்கள்நலனில் அக்கறை காட்டினால், அதுதான் இந்தச் சட்டத்துக்குக் கிடைக்கிற வெற்றி. நாளைக்கே மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுங்க. உங்க பின்னால நிற்க நான் தயாரா இருப்பேன்” என்றபடி கிளம்பினார் டிராஃபிக் ராமசாமி.

மனதில் பட்டதைப் பலாப்பழம்போல் போட்டு உடைக்கிற போராளி. மூதறிஞர் ராஜாஜி மீதான பேரன்பால் பொதுவாழ்க்கைக்கு வந்தவர், பற்றற்ற வாழ்வைப் பற்றிக்கொண்டார். “குடும்பம் எப்போதுமே நம்மைப் பின்னோக்கி இழுக்கும்” எனச் சொல்லி, வெளியே கிளம்பினார். காவலர்கள்தான் சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்ய வேண்டும் என்கிற நிலையை மாற்றி, ஆர்வத்தோடு சாலையில் நின்றார்; போக்குவரத்தைச் சரிசெய்தார். அப்போதிருந்து ‘டிராஃபிக்’ என்கிற அடைமொழி அவரோடு ஒட்டிக்கொண்டது.

சமீபத்தில் தி.நகருக்குச் சென்றிருந்தேன். வழியில் போக்குவரத்தை கவனிக்காமல் போன் பேசிக்கொண்டிருந்த ஒரு காவலரோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்தார் டிராஃபிக் ராமசாமி. “88 வயதிலும் ஏன் இப்படிப் போராடுறீங்க?” என்றேன் அவரிடம். “வயசுக்கும் போராடுறதுக்கும் என்ன சம்பந்தம்? பிரச்னைகள் இருக்குற வரைக்கும் போராடிக்கிட்டுத்தான் இருக்கணும். இத்தனை வருஷ காலத்துல உட்காரணும், ஓய்வெடுக்கணும்னு நான் நினைச்சதே இல்லை. எப்போ நான் போராடலையோ, அப்போ நான் செத்துட்டேன்னு அர்த்தம்” என்றார்.

“கொரோனா பரவுகிற நேரம்… வெளியே வராமல் இருப்பதுதானே பாதுகாப்பு” என்றேன். “மாஸ்க் போட்டுக்கிறேன். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறேன். என் சுயநலத்துக்காக நான் வெளியே சுத்தலை. சோப்பு போட்டுக் கழுவி சுத்தமா இருக்கேன். எனக்கோ, என்னால அடுத்தவங்களுக்கோ கொரோனா வராதபடி கவனமா இருக்கேன்” என்றார். உடல்நிலை சரியில்லாமல் டிராஃபிக் ராமசாமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கொரோனா பாதிப்பு என்றுதான் நினைத்தேன். ஆனால், பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை எனத் தெரிந்தது.

கடந்த வாரம் அவருக்கு முழு நினைவும் தவறிப்போய்விட்டது. மருத்துவம் பலனளிக்காத நிலை. அவருக்கு உதவியாக நின்ற ஆகாஷ் என்பவர், “ஐயா எந்திரிங்க… ரிசல்ட் வந்துடுச்சு. ஜெயிச்சவங்க சென்னை முழுக்க ஃப்ளெக்ஸ் வெக்கிறாங்க…” எனச் சொல்ல, சட்டெனக் கண்விழித்திருக்கிறார் டிராஃபிக் ராமசாமி.

எப்போ போராடலையோ அப்போ செத்துட்டேன்னு அர்த்தம்!

“அவரோட எண்ண ஓட்டம் தெரிஞ்சு சென்னையில ஃப்ளெக்ஸ் வைக்கிறதா பொய்தான் சொன்னேன். அவர் கண் விழிச்சதைப் பார்த்து டாக்டர்களே ஆச்சர்யப்பட்டாங்க. ஆனா, மறுபடியும் அவருக்கு நினைவு தப்பிடுச்சு. சிகிச்சைக்காகக்கூட அவரை பெட்ல படுக்கவைக்க முடியலை. மூக்கில் இருந்த ட்யூபையெல்லாம் கழட்டி எறிஞ்சிட்டார். கையையும் காலையும் கட்டித்தான் ட்ரீட்மென்ட்டே பண்ண முடிஞ்சுது” என்கிறார் ஆகாஷ்.

ஃப்ளெக்ஸ், பேனர்களுக்கு எதிராக டிராஃபிக் ராமசாமி நடத்திய போராட்டங்களும் வழக்குகளும்தான் சென்னைக்கு விடிமோட்சத்தைக் கொடுத்தன. விபத்து, மிரட்டல் எனப் பலவகை அச்சுறுத்தல்கள்… ஆனாலும், போராட்டங்களை அவர் கைவிடவே இல்லை.

‘உட்கார்ந்து சாப்பிடுவதுகூட என் நேரத்தைத் தின்கிறது’ என்பார். சில வருடங்களாக உணவு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார். “இந்த அளவுக்கு உடலை வருத்திக்கணுமா?” என்றேன். “என் உழைப்புக்கு இரண்டு வேளை மோரும், ஒருவேளை காபியும் போதும். அதிகமா சாப்பிடுறதுதான் நம்ம உடம்புக்குச் சிக்கலைக் கொடுக்குது. சாப்பாடு இல்லாமல் அவதிப்படலாம். ஆனால், அதிகமா சாப்பிட்டுட்டு நாம அவதிப்படுறோம்” என்றார். எங்கே சென்றாலும் லிஃப்ட் வசதியைப் பயன்படுத்தவே மாட்டார். “படிகளில் ஏறுவது நல்ல பயிற்சி. தனியா நேரம் ஒதுக்கி உடற்ப யிற்சி செய்ய அவகாசம் இல்லை. மக்கள் பிரச்னைகளுக்காக அலையுற வகையிலேயே ஒரு நாளைக்கு அஞ்சு கிலோமீட்டர் தூரமாவது நடந்துடுவேன்” என்பார்.

குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல டிராஃபிக் ராமசாமி. “நிறைய பேர் உங்களைத் திட்டவும் செய்யறாங்களே?” என்றேன் ஒருமுறை. “ஒரு வழக்கை நாம நடத்துறப்ப ஒருத்தனுக்கு லாபம் இருக்கும், இன்னொருத்தனுக்கு நஷ்டம் இருக்கும். பாதிக்கப்படுறவன் எப்படி நம்மளைப் பாராட்டுவான்? எல்லார்கிட்டயும் நல்ல பெயர் வாங்கணும்னு நினைக்கிறதே பெரிய வியாதி. ஒரு அயோக்கியன், ‘ஐயா ரொம்ப நல்லவர்’னு என்னைப் பாராட்டினால், அதைவிட என்னைக் கேவலப்படுத்த வேற என்ன இருக்கு” என்றார்.

பொளேரென அறை வாங்கியதுபோல் இருந்தது எனக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு