சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இப்போது இல்லை அந்த இடைவிடாத போராளி!

டிராபிக் ராமசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
டிராபிக் ராமசாமி

கொரோனா காலகட்டத்திலும் இடைவிடாது தெருவில் இறங்கிக் களமாடிய டிராபிக் ராமசாமி, இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

"எந்த அளவுக்கு மன உறுதிமிக்க மனிதரோ அதே அளவுக்கு நெகிழ்ச்சியான மனிதர் அவர். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் வாய்விட்டு அழுதிடுவார். யாரையும் அப்படியே முழுமையா நம்பி ஏத்துக்குவார். இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் இத்தனை வயதுகாலம் வாழ்ந்த அந்த மனிதரோட மரணம், துயரமிக்கதா மாறினதுதான் வருத்தமாயிருக்கு...” சஞ்சலத்தோடு பேசுகிறார் ஆகாஷ் சுதாகர். திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் சுதாகர், டிராபிக் ராமசாமியுடன் இணைந்து நெடுங்காலம் இயங்கியவர். இறுதிக்காலத்தில் உடனிருந்தவர்.

இப்போது இல்லை அந்த இடைவிடாத போராளி!

கொரோனா காலகட்டத்திலும் இடைவிடாது தெருவில் இறங்கிக் களமாடிய டிராபிக் ராமசாமி, இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர், மே 4 அன்று காலமானார்.

மக்கள் பாதுகாப்புக் கழகம், சமூக சேவகர்கள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளை நடத்திய டிராபிக் ராமசாமி, இந்தத் தேர்தலில் சோழிங்க நல்லூர்த் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். தமிழ்நாடு முழுக்கப் போட்டியில் இறங்கிய ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவரை அழைத்தனர். அதற்காக தான் போட்டியிடும் திட்டத்தைக் கைவிட்டு கன்னியாகுமரி, கோவை உட்பட தமிழகமெங்கும் சென்று பிரசாரமும் செய்தார். இடையில் சென்னை வந்தவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

“அய்யா, அவர் பொண்ணு மேலயும், பேத்தி மேலயும் உயிரையே வச்சிருந்தார். ஆனாலும் குடும்பத்தைவிட பொதுச்சமூகத்தைப் பத்தித்தான் அதிகம் கவலைப்பட்டார். நாம ஒவ்வொருவருமே ஏதோ ஒரு விதத்துல அவரால பலனடைஞ்சிருப்போம். ஒரு விபத்துல ஹெல்மெட் போட்டதால தலை அடிபடாமப் பிழைச்ச யாரோ ஒரு மனுஷன், அய்யாவுக்கு மறைமுகமா நன்றிக்கடன் பட்டிருக்கான். எவ்வளவு வழக்குகள்... இந்தக் கொரோனா நேரத்துலகூட 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டிருந்தார். தினமும் காலையில ஃபைல்களை ரெடி பண்ணிக் கையில் வச்சுக்கிட்டு வழக்கறிஞர் களுக்காகக் காத்திருப்பார். வழக்கறி ஞர்கள் வந்தவுடன் ஆளுக்கொரு கட்டை எடுத்துக்கொடுத்து அனுப்புவார். வழக்கறிஞர்கள் வழக்கை ஃபைல் பண்ணிப் பதிவு எண் அனுப்பணும். அதுவரைக்கும் ஃபாலோ பண்ணுவார். அவர் வாழ்ந்த வீட்டுல ஆயிரக்கணக்கான நீதிமன்ற உத்தரவுகள் மொத்தமா இருக்கு. அய்யாவோட வழக்குகளை நீதிபதிகளும் கவனத்தோடவும் அக்கறையோடவும் எடுத்துக்கிட்டாங்க.

இப்போது இல்லை அந்த இடைவிடாத போராளி!

இவ்வளவு காலம் எந்த எதிர்பார்ப்புமில்லாம சமூகத்துக்காக உழைச்ச ஒரு மகத்தான மனுஷனோட மரணம் ரொம்பக் கொடுமை யானதா மாறிப்போச்சு. ஒருநாள் முழுவதும் மருத்துவமனையில மலக்கழிவுக்கு மத்தியில அவரைப் போட்டு வச்சிருந்தாங்க அங்கிருந்த ஊழியர்கள். அந்த அளவுக்கு ஆதரவற்ற மனிதரா போய்ச் சேர்ந்திருக்கார்...” கலங்குகிறார் ஆகாஷ்.

“2007-08 காலகட்டத்தில சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்கணும்ன்னு காங்கிரஸ் கட்சி சார்பா ஒரு போராட்டம் நடந்துச்சு. அதில்தான் அய்யாவை முதன்முதலா பார்த்தேன். அப்போ இருந்து எனக்கும் அவருக்கும் தொடர்பு. என் பையன் ஆகாஷ் ரத்தப் புற்றுநோயால 2014-ல இறந்துபோனான். பையன் இறந்த துக்கத்துல இருந்து மீள முடியாம இருந்த என்னைக் கூப்பிட்ட அய்யா, ‘உனக்கும் பையன் இல்ல, எனக்கும் பையன் இல்ல. நான் உன்னையும் நீ என்னையும் தத்தெடுத்துக்குவோம்’ன்னார். ‘எல்லாரும் அப்பாவோட பேரதான் தன் பேரோட சேர்த்துக்குவாங்க. நீ உன் புள்ளையோட பேர சேர்த்துக்க’ன்னு சொன்னார். அந்த நிமிடத்துல இருந்து அவர் சொன்னதை அப்படியே வேதவாக்கா கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன்.

அய்யா மாதிரி எதுக்குமே ஆசைப்படாத மனிதரை நான் சந்திச்சதேயில்லை. மாநகராட்சி வாங்கிப் பயன்படுத்துற பேட்டரி வாகனங்களுக்குப் பதிவே இல்லைன்னு தெரியவந்துச்சு. அந்த வாகனங்கள் யாரையாவது மோதி விபத்துக்குள்ளானா இன்ஷூரன்ஸ் யாருகிட்ட கேக்குறதுன்னு கேட்ட அய்யா, இதை நீதிமன்றத்துக்கு எடுத்திட்டுப் போனார். அந்த வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி பெரிய பேரம் நடந்துச்சு. அய்யா அசைஞ்சே கொடுக்கலே. பணம் கொடுக்க வந்தவங்களைக் கேவலமாப் பேசி விரட்டியடிச்சதையெல்லாம் நான் பாத்திருக்கேன். அந்த அளவுக்கு சமரசமில்லாத மனுஷன். சில நேரங்கள்ல தன் கொள்கைக்கு நேரெதிரானவங்ககிட்டகூட சேர்ந்து நிப்பார். ‘ஏங்கய்யா’ன்னு கேட்டா, ‘பிரச்னையின் தன்மைதான் முக்கியம். தனிப்பட்ட நபர்களோட கொள்கையைப் பத்திக் கவலைப் படக் கூடாது’ன்னு சொல்வார்.

கொரோனா காலகட்டத்திலும் அவருடைய செயல்பாடுகளில் தொய்வு ஏற்படல. பத்திரிகையாளர், வியாபாரிகள், நடைபாதை மனிதர்கள்னு எல்லாரோட பிரச்னை களுக்காகவும் முன்னால நின்னார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு சமயத்துல விதிகள மீறுனதா போலீஸ் கைப்பற்றுன 6 லட்சம் வண்டிகள எந்த அபாரதமும் இல்லாம திருப்பி வழங்கணும்ங்கிற அரசு அறிவிப்புக்குக் காரணம் அய்யாதான். ஊரடங்கு போடப்பட்ட ஆரம்ப நாள்கள்ல பத்திரிகையாளர்கள் வாகனங்களையும் தடுத்து நிறுத்துறாங்கன்னு தகவல் வந்துச்சு. அப்போ கமிஷனரா இருந்த விஸ்வநாதன் சாருக்கும் டி.ஜி.பி திரிபாதி சாருக்கும் உடனடியா போன் பண்ணி இது தப்புன்னு சொன்னார். அடுத்த நிமிடமே தமிழகம் முழுக்க அடையாள அட்டை உள்ள பத்திரிகையாளர்களைத் தடுக்கக் கூடாதுன்னு உத்தரவு போட்டாங்க. லாக்டௌன் காலகட்டத்துல எளிய மக்கள் பட்டினியால தவிக்கிறதைச் சுட்டிக்காட்டி அவங்களுக்கு மாநகராட்சி தொடர்ந்து உணவு கொடுக்கக் காரணமா இருந்ததும் அய்யாதான். இதெல்லாம் யாருக்கும் தெரியாது.

அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் அனைவரிடமும் அய்யாவுக்குத் தொடர்பு இருந்தது. சமீபத்தில் அவசரமாக ஊருக்குப் போகவேண்டிய சூழல். திமுக முக்கியத் தலைவர் ஒருவருக்கு போன் செய்தார் அய்யா. அவர் இனோவா அனுப்பி வைத்தார். அதில் திமுக கொடி பறந்துகொண்டிருந்தது. அதை எடுத்துவிட்டு, சமூக சேவகர் கூட்டமைப்புக் கொடியை மாட்ட முயன்றேன். தடுத்துவிட்டார்.

இப்போது இல்லை அந்த இடைவிடாத போராளி!

‘தம்பி அனுப்பின வண்டி... அவங்க கொடிதான் பறக்கவேண்டும். இதெல்லாம் தப்பு’ என்றார். திருநெல்வேலியை ஒட்டிச் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு வீட்டில் ஏதோ ஒரு விழா... திமுக தலைவரின் படம் போட்டு பிளக்ஸ் வைத்திருக்கிறார்கள். வண்டியை நிறுத்தி ‘அதையெல்லாம் எடுக்கவேண்டும்’ என்று அதிரடியாக சண்டை போடுகிறார். திமுக கொடி கட்டிய ஒரு காரில் வந்து திமுக தலைவரின் படம் போட்ட பிளெக்ஸை எடுக்கச் சொல்லும் அய்யாவை அந்தக் குடும்பத்தினர் மட்டுமன்றி அதிகாரிகளுமே விசித்திரமாகப் பார்த்தார்கள். எப்போதும் தன் கருத்தில் தெளிவாக நிலையாக இருப்பார் அய்யா.

இறுதிச்சடங்குக்காக கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு அவரது உடலைக் கொண்டு சென்றபோது அங்கு பணியாற்றும் இளைஞன் ஒருவன், ‘போனமாசம் இவரு இங்கே வந்து, யூனிபார்மெல்லாம் போட்ருக்கியா, மாஸ்க் தர்றாங்களா... பாதுகாப்பா இருன்னு சொல்லி எல்லாத்தையும் செக் பண்ணிட்டுப் போனாரே...’ன்னு கலங்கினார். அதுதான் அய்யா... தன்னைச்சுற்றி எல்லாமும் சரியாக நடக்கவேண்டும் என்று நினைத்தார். இனி இன்னொரு டிராபிக் ராமசாமி பிறக்கப் போவதில்லை...” கண்கலங்குகிறார் ஆகாஷ்.