Published:Updated:

கி.ரா-வின் மாறா குறுஞ்சிரிப்பு!

கி.ரா
பிரீமியம் ஸ்டோரி
News
கி.ரா

1923-2021

‘‘வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டு கொண்டிருந்த காலத்தில், நாட்டு விடுதலைப் போரில் கலந்துகொண்ட முக்கியமானவர்கள் பேரில் பல ‘சதிவழக்குகள்’ போட்டு சிறையில் தள்ளுவது வழக்கம்... லாகூர் சதிவழக்கு, சிட்டகாங் சதிவழக்கு என்று. இவையெல்லாம் மிகப்பெரிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட சதிவழக்குகள்.

நாங்களோ ரொம்பவும் சாமானியப்பட்டவர்கள். எங்கள் பேரிலெல்லாம் அப்படிப் போட முடியுமா? ஏதோ எங்களுக்கு ஏத்த மாதிரி, ஏழைக்கேத்த எள்ளுருண்டை, குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம், விரலுக்குத் தக்கன வீக்கம் என்பதுபோல ‘கோவில்பட்டி தாலுக்கா சதிவழக்கு’ என்று போட்டார்கள்.

அரசியலில் எதிரிகளை எப்பவும் சும்மா விடப்படாதுன்னு சொல்லியிருக்கே... ஏதாவது ஒரு கேஸ் போட்டுக்கிட்டே இருக்கணும். பயல்களை உஸ்ஸுனு உக்கார விடப்படுமா!”

கி.ரா-வின் மாறா குறுஞ்சிரிப்பு!

நவீன தமிழ் இலக்கிய உலகின் ஆகப்பெரும் படைப்பாளியான கி.ராஜநாராயணன், தன்னுடைய சிறைவாச அனுபவங்களை இப்படித்தான் சொல்லத் தொடங்குவார். 1923-ல் பிறந்த கி.ரா., தன் 20-களின் பிராயத்தில் இடைசெவல் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரமான ஊழியராகச் செயல்பட்டவர். அவரை நாங்கள் நேரில் சந்திக்கும்போதெல்லாம் அந்த அனுபவங்களைக் கதை கதையாகச் சொல்லுவார். அவர் எழுதியதைவிட சொன்னது அதிகம். எழுதாதது அதைவிட அதிகம்.

அதிகாரத்துக்கு, மதவாதத்துக்கு, சாதியத்துக்கு எதிரான அவரது குரல், அவருடைய படைப்புகள் அத்தனையிலும் அடிநாதமாக எப்போதும் இருந்ததற்கு இந்த வாழ்க்கைப் பின்னணி ஒரு காரணம். பின்னர் அவர் கட்சியிலிருந்து விலகி நின்றாலும், அதன் சக பயணியாக இறுதிநாள்வரை இருந்தார். சமீபத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது, அவருடைய தொகுதியான கோவில்பட்டியில், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி ‘கரிசல் இலக்கியவாதிகள்’ கூட்டறிக்கை வெளியிட்டபோது, கி.ரா-வின் கையெழுத்தே முதல் கையெழுத்தாக இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் மீதான விமர்சனங்களை வெளிப்படையாக எப்போதும் பேசிவந்தார். அவையெல்லாம் அக்கறையின்பாற்பட்டவை.

அவருடைய சாதனை என எல்லோரும் மதிப்பிடுவது, மக்கள் மொழியை அவர் உயர்த்திப் பிடித்து நவீன இலக்கிய உலகில் அதற்கான இடத்தை உறுதிசெய்ததைத்தான். `கொச்சை மொழி’ எனப் பண்டிதர்கள் புறந்தள்ளிய பேச்சுவழக்கை அவர் விடாப்பிடியாகக் கைக்கொண்டதும், நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடித் தேடிப் பதிப்பித்ததும், அதன் நீட்சியாகப் பாலியல் கதைகளைப் புத்தகமாக்கியதும், கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதியை உருவாக்கியதும், வாய்மொழி வழக்காறுகளை ஆதாரமாகக்கொண்டு இரு வரலாற்று நாவல்களைப் படைத்ததுமாகிய இந்த எல்லாச் செயல்பாடுகளுக்குப் பின்னாலும் ஓர் அழுத்தமான பண்பாட்டு அரசியல் தெளிவு இருந்ததாகத் தோன்றுகிறது.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து, முசோலினியால் சிறைப்படுத்தப்பட்டு, சித்ரவதைகளை அனுபவித்த தோழர் அந்தோனியோ கிராம்ஷி கூறியதுபோல ‘நாட்டார் இலக்கியங்களில் வெகுமக்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் உறைந்திருக்கிறது’ என்பதை கி.ரா ஆழமாக உணர்ந்திருந்தார். ஆகவே, அவற்றை வேறு யாரும் செய்யாததால், தானே முன்வந்தார்.

1960-ல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கப்பட்டபோது, தோழர் ஜீவாவின் வழிகாட்டுதலின்படி, நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடிச் சேகரிக்க நா.வானமாமலை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சில தொகுப்புகளும் நா.வா-வால் பதிப்பிக்கப்பட்டன. பின்னர் அது இயக்கமாகத் தொடரவில்லை. ஆ.சிவசுப்பிரமணியன், ஆறு.ராமநாதன், அ.கா.பெருமாள் போன்றோரின் தனி முயற்சிகளில் மட்டுமே தொடர்ந்தது. அதே பணியை கி.ரா தானே ஓர் இயக்கமாகத் தன்னை வரித்துக்கொண்டு இடைவிடாமல் செய்தார். கழனியூரான், பாரததேவி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாரீஸ், உதயசங்கர், முருகன் போன்ற பலரது உதவிகளையும் கோரிப் பெற்றுக்கொண்டு அப்பணிகளைத் தொடர்ந்தார்.

ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணிகள் இவை. அசாத்தியமான உழைப்பைக் கோரும் இந்த வேலைகளை, ஒரு வறட்டு ஆய்வாளரைப்போலச் செய்யாமல், சில நாள் நூற்பழக்கமுள்ள எவரும் துய்த்துணரும் வண்ணம் சுவைபடச் செய்தார் என்பது முக்கியமான விஷயம். மக்கள் இலக்கியம் எனப்படும் இவை எளிய விவசாய மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றவை. அம்மக்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை அதன் அழகுகளோடும் மேன்மைகளோடும் கீழ்மைகளோடும் படைத்தளித்தார். இப்பயணத்தினூடாகத் தனக்கென ஓர் அழகியல் முறைமையை அவரே உருவாக்கிக்கொண்டார். ‘தமிழ் படித்த அழகு’ என்று எழுதாமல், கட்டுரைக்கு ‘தமிள்ப் படிச்ச அளகு’ என்று மக்களின் பேச்சுவழக்கையே இலக்கணமாக அங்கீகரித்து எழுதிச்செல்வார். பண்டிதத் தமிழின் மீது அவருக்கு அவ்வளவு ஆத்திரம். இது வெறும் மொழி அல்லது நடை சார்ந்த பிரச்னை அல்ல. மக்களிடமிருந்து அவர்களின் வாழ்க்கை துண்டிக்கப்பட்டதுபோலவே அவர்களது மொழியும் துண்டிக்கப்பட்டுவிட்டதே என்கிற கோபம்.

‘‘என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில், அவர்கள் சிந்திக்கிற மனோவியலில், அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துகளில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்’’ இதுதான் அவரது பிரகடனம். அவர் எழுத்தின் லட்சியம், நோக்கம் எல்லாம். அதுகாறும் வந்த இலக்கியங்கள் இதையெல்லாம் செய்ய வில்லை எனக் கருதினார் கி.ரா. அவரே மண்வெட்டி எடுத்து வாய்க்கால்களை வெட்டினார். எல்லா மடைகளிலும் தண்ணீரைத் திறந்துவிட்டார். அதிலிருந்து நாங்கள் கரிசல் இலக்கியப் படைப்பாளிகள் எனப் பெரும்படையாகக் கிளம்பி வந்தோம்.

கி.ரா-வின் மாறா குறுஞ்சிரிப்பு!

அவரைக் கரிசல் இலக்கியத்துக்கு மட்டுமான முன்னோடி - முன்னத்தி ஏர் என்று சுருக்குவதும் அரைகுறைப் பார்வையாகிவிடும். சங்க இலக்கியம் தொடங்கி, நீண்டு செல்லும் தமிழ் இலக்கியப் பரப்பில், ஒத்தையடிப் பாதையாக அவர் பாதங்கள் வரைந்த வழிகளிலெல்லாம் மக்கள் நடந்து நடந்து பெருஞ்சாலைகளை உருவாக்கினார்கள். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து பெருவெள்ளமாகப் புறப்பட்ட காலத்தில், இறுக்கமாக இருந்த மொழியைக் கட்டுடைத்து, பேச்சுமொழியில் எழுதும் ஒரு வாசலை அவர்களுக்காக அவர் திறந்துவைத்திருந்தார்.

ஏழாம் வகுப்பைக்கூடத் தாண்டாத அவர், புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக நியமனம் பெற்றதோடு, ஏராளமான முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கும், ஆய்வுக் கட்டுரைகளுக்கும் தேவையான ஆதார வளங்களை அள்ளித்தருபவராக இருந்தார். பள்ளிக்கூடத்தை ’ஜெயில்’ என்று கதையில் எழுதியதோடு நில்லாமல், பள்ளிக்கல்விக்கு வெளியே, தான் கற்றதே அசலான கல்வி என்று பறைசாற்றும் ஒரு வாழ்க்கையுடன், என்றும் மாறாக் குறும்புச் சிரிப்புடன், அவர் பிரசன்னமாகி நிற்கிறார். ஆசாரங்களுக்கும் அலட்டல்களுக்கும் எதிரான அக்குறும்புச் சிரிப்பின் இசை அவரது எழுத்துகளில் என்றும் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும்!