Published:Updated:

`இனி இழப்பதற்கு எதுவுமில்லை!'- மேட்டுப்பாளையம் துயரத்திலும் பிள்ளைகளின் கண்களைத் தானம் செய்த தந்தை

டீக்கடை நடத்தி வரும் செல்வராஜுக்கு 20 வயதில் ஒரு மகள், 15 வயதில் மகன் உள்ளனர்.

தந்தை செல்வராஜ்
தந்தை செல்வராஜ்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி.காலனி கண்ணப்பன் நகர் இருக்கிறது. இங்கு சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவரது வீட்டைச் சுற்றி 15 அடிக்குக் கருங்கற்களாலான சுற்றுச்சுவரை சிவசுப்பிரமணியம் கட்டியிருந்தார். அவரின் வீட்டிலிருந்து தாழ்வான பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வந்துள்ளனர்.

உயிரிழந்த 17 பேர்
உயிரிழந்த 17 பேர்

இந்நிலையில், நேற்று அதிகாலை சிவசுப்பிரமணியத்தின் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று வீடுகளில் குடியிருந்த நான்கு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர் என 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் கொடூர விபத்தால் பல்வேறு குடும்பங்கள் நிர்கதி நிலைக்குச் சென்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையானவற்றை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

`15 பேர் மரணத்துக்குக் காரணமான 80 அடிநீள சுற்றுச் சுவர்!’- அதிர்ச்சி விலகாத மேட்டுப்பாளையம்

இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். டீக்கடை நடத்தி வரும் செல்வராஜுக்கு 20 வயதில் ஒரு மகள், 15 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர். மகள் நிவேதா கல்லூரியில் முதலாம் ஆண்டும் மகன் ராமநாதன் 11-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

செல்வராஜின் வீடு சிறியது என்பதால் அங்கு தூங்குவதற்கு வசதிகள் கிடையாது. இதனால் நிவேதாவும் ராமநாதனும் அருகில் சகோதரர் பழனிசாமி வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று பழனிசாமி வீட்டில் இருந்தபோதுதான் அந்தக் கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

நிவேதா - ராமநாதன்
நிவேதா - ராமநாதன்

இருவரது உடலும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது,` இருவருக்கும் சிறிய வயது என்பதால் அவர்களது கண்களை தானம் செய்ய முடியும். இதனால் சிலர் பயன்பெறுவார்கள்' என்று செல்வராஜிடம் எடுத்துச் சொல்லியுள்ளனர் மருத்துவர்கள். அதற்கு, ``எல்லாத்தையும் இழந்துட்டேன். இனி எதுவுமில்லை" எனக் கூறி கண் தானத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் செல்வராஜ்.

இவ்வளவு துயரமான நிலையிலும் செல்வராஜ் எடுத்த முடிவு அங்குள்ளவர்களை நெகிழவைத்தது.

`மழையில் நனைந்த சடலங்கள்; போராடியவர்கள் மீது தடியடி!' - மேட்டுப்பாளையம் பரபர