Published:Updated:

கடல் அலையில் சிக்கி பலியான மில் தொழிலாளிகள்... திதி கொடுக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!

கடலில் மூழ்கி பலியான சோகம்!
கடலில் மூழ்கி பலியான சோகம்! ( சித்தரிப்பு காட்சி )

அரசு பேருந்தில் மாரியூர் கடற்கரைக்கு வந்தநிலையில், அங்கு தங்கள் முன்னோர்கள் நினைவாக திதி கொடுத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அனைவரும் கடலில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் கடல் அலையில் மூழ்கி அருப்புக்கோட்டையை சேர்ந்த மில் தொழிலாளிகள் இருவர் பலியாகினர். இறந்த உறவினருக்குத் திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த இந்த கதியால் உடன் வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கடல் அலையில் சிக்கி பலியானவர்
கடல் அலையில் சிக்கி பலியானவர்
உ.பாண்டி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் திருநாகாத்தைச் சேர்ந்த ராஜகுரு, வெள்ளக்கோட்டையை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் புளியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் தங்கள் உறவினர்களுடன் திதி கொடுப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தை அடுத்துள்ள மாரியூர் கடற்கரைக்கு இன்று காலை வந்திருக்கிறார்கள்.

கடலில் மூழ்கியவருக்கு சிகிச்சை
கடலில் மூழ்கியவருக்கு சிகிச்சை
உ.பாண்டி

அருப்புக்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்தில் மாரியூர் கடற்கரைக்கு வந்தநிலையில் அங்கு தங்கள் முன்னோர்கள் நினைவாக திதி கொடுத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அனைவரும் கடலில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள். அப்போது எழுந்த அலையில் சிக்கிய ராஜகுரு, கார்த்திகேயன், ராஜ்குமார் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதைக் கண்ட மற்றவர்கள் கூச்சலிடவே அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூவரையும் கடலிலிருந்து மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். கடலில் மூழ்கியதால் மயக்கநிலையில் இருந்த மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சாயல்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ராஜகுரு, கார்த்திகேயன் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திதி கொடுக்க வந்தவர்கள் பயணித்த பேருந்து
திதி கொடுக்க வந்தவர்கள் பயணித்த பேருந்து
உ.பாண்டி

மற்றொருவரான ராஜ்குமார் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக கடல் பகுதிகளில் நீராடுவதற்கு அரசு தடைவிதித்திருக்கிறது. இதனால் அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாள்களில்கூட ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல்களில் யாத்திரைவாசிகள் நீராட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிக பரபரப்பு இல்லாத மாரியூர் கடல் பகுதிக்கு திதி கொடுக்கச் சென்றிருக்கிறார்கள். இந்தநிலையில் திதி கொடுக்கச் சென்றவர்களில் இருவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களுடன் சென்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு