Published:Updated:

`சோகத்திலிருந்து மீளவில்லை... துரத்திய வறுமை..'- ஊட்டியை உலுக்கிய தாய், மகள் தற்கொலை!

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

ஊட்டி ஏரியில் தனது 5 வயது மகளை துப்பட்டாவில் பிணைத்தபடி தாய்சடலமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nirmala and Haritha
Nirmala and Haritha

நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்ல ஏரியில் இறந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை இன்று காலை படகு இல்ல ஊழியர்கள் பார்த்தனர். உடனே காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஊட்டி ஜி1 காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் படகு இல்லத்துக்கு வந்து பார்த்ததில் சிவப்பு நிற உடையணிந்திருந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை உறுதி செய்தனர்.

Nirmala and Haritha
Nirmala and Haritha

உடலை மீட்க முயன்றனர். சடலத்தை மீட்க முயன்றபோது அருகிலிருந்த அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்தப் பெண் சடலத்துடன் பள்ளிச் சீருடை அணிந்திருந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலமும் துப்பட்டாவில் பிணைக்கப்பட்டிருந்ததுதான்.

இரண்டு சடலத்தையும் மீட்ட காவல்துறையினர் இறந்தவர்கள் தாய் மற்றும் மகளாக இருக்கக்கூடும் என முடிவுக்கு வந்தனர். கொலையா தற்கொலையா என்ற குழப்பத்தில் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் இறந்த பெண் 25 வயதான நிர்மலா மற்றும் அவரது மகள் ஹரிதா (5) என்றும் ஊட்டி நொண்டி மேடு பகுதியில் வசித்துவந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

Nirmala
Nirmala

இது குறித்துக் காவல் துறையினர் கூறுகையில் " நேற்று மாலை பைக்கராவில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் செல்வதாகக்கூறி தனது மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் மாமியார் வீட்டுக்குச் செல்லவில்லை.

இரு வீட்டார்களும் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்த நிலையில் எங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் வந்து பார்த்தபோது இருவரும் இறந்திருப்பது தெரியவந்தது. உடல்நலக்குறைவால் கணவர் இறந்த நிலையில் விரக்தி மற்றும் வறுமை காரணமாகத் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. `வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” என்று போலீஸார் கூறியுள்ளனர்.

 Haritha
Haritha

தாய் மகள் தற்கொலை குறித்து உறவினர் ஒருவர் கூறுகையில் “கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் நிர்மலாவின் கணவர் மலர் வண்ணன் இறந்துவிட்டார். அதிலிருந்து ஆழ்ந்த துக்கத்தில் இருந்துவந்தார் நிர்மலா. தனது மகளை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கவைத்தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்திருக்கலாம்'' என்றார்.