Election bannerElection banner
Published:Updated:

மதுரை: ஒரு நொடியில் எடுத்த முடிவு - குழந்தைகளுக்குத் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

கார்த்திகைசெல்வி குழந்தையுடன்
கார்த்திகைசெல்வி குழந்தையுடன்

மதுரை அருகே பரவையில் குடும்பத் தகராறு காரணமாகக் குழந்தைகளுக்குத் தீவைத்து தாய் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருக்கிறது.

``அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்துட்டாளே... நெருப்பில் எரியும்போது அந்தப் பச்சப் புள்ளைங்க என்ன துடி துடிச்சிருக்கும்’’ என்று பரவையிலுள்ள மக்கள் பரிதவித்துப் பேசுகிறார்கள்.

குடும்பப் பிரச்னையில் இரண்டு குழந்தைகளை நெருப்பு வைத்துக் கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை அருகே பரவையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தையுடன் கார்த்திகைசெல்வி
குழந்தையுடன் கார்த்திகைசெல்வி

பரவை மேலவெளி வீதியில் வசித்துவருபவர் லோடுமேன் வேல்முருகன். இவரின் மனைவி கார்த்திகைச்செல்வி. நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு மூன்று வயதில் பெண், ஒன்றரை வயதில் ஆண் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். வேல்முருகன் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால், அவருக்கும் கார்த்திகைசெல்விக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், நேற்று உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் செல்வதற்குப் பணம் கேட்ட கார்த்திகைசெல்வியிடம் வேல்முருகன் தகராறு செய்து கடுமையாக நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், மிகவும் மனம் சோர்வடைந்த நிலையில் கார்த்திகைசெல்வி இருந்திருக்கிறார். திடீரென்று விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை ஓர் அறையில்வைத்து மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தவர், பின்பு தனக்கும் நெருப்புவைத்திருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

நெருப்பின் வலி தாங்காமல் கார்த்திகைசெல்வியும் குழந்தைகளும் கதறியிருக்கிறார்கள். அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தபோது கதவைத் திறக்க முடியவில்லை. பின்பு காவல்துறையினருக்குத் தகவல் சொல்லி, அவர்களுடன் சேர்ந்து கதவை உடைத்து நெருப்பிலிருந்து அவர்களை மீட்கப் போராடியிருக்கிறார்கள்.

அதற்குள் குழந்தைகள் இருவரும் கருகி பலியாகியிருந்தனர். பலத்த காயத்துடன் கார்த்திகைசெல்வி மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சொல்லப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மிகவும் துயரமான இந்தச் சம்பவத்தால் பரவை நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

குடும்பத் தகராறில் திடீரென்று எடுத்த தற்கொலை முடிவால் ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகளுடன் தாயும் மரணமடைந்திருக்கிறார்.

செல்வகோமதி
செல்வகோமதி

இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் சமயநல்லூர் காவல்துறையினர், ``தொடர்ந்து விசாரித்துவருகிறோம். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆகியிருப்பதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெறவிருக்கிறது. இதில் தற்கொலைக்கான உண்மை தெரியும்" என்றனர்.

இது போன்ற சம்பவங்களைத் தடுக்க என்ன வழி என்று சமூகச் செயற்பாட்டாளர் சோக்கோ அறக்கட்டளை செல்வகோமதியிடம் கேட்டோம். ``வாழ்க்கையில் பல பிரச்னைகளைச் சந்திப்பவர்கள், தற்கொலை முடிவை எடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் எங்களைப் போன்ற அமைப்பினர் ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

ஆனாலும், மக்களிடம் விழிப்புணர்வு போய்ச் சேரவில்லை. பல்வேறு வகையில் பிரச்னைகளைச் சந்திக்கும் பெண்கள், தங்களுக்கு ஆதரவாக சிலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தாலே இது போன்ற தற்கொலை முடிவை எடுக்க மாட்டார்கள். கிராமப்புறங்களில் இது போன்ற விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு