Published:Updated:

கருணைக்கொலை கோரி நீதிமன்றம் நாடிய தாய்; வீடு திரும்புகையில் மடியில் பிரிந்த மகனின் உயிர்!

court -representaional
court -representaional

தங்கள் மகனுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பைக் குணப்படுத்த முடியாது என்று அவனை சோதித்த மருத்துவர்கள் அனைவரும் தெரிவிக்க, அப்போதிலிருந்து அவர்கள் வாழ்க்கை சோகமே உருவாக மாறியது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிரிஜிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி - அருணா தம்பதி. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் இந்தத் தம்பதியின் 10 வயது மகன் ஹர்ஷ்வர்தன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுவன் ஹர்ஷ்வர்தன் வீட்டு மாடியில் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கிறான். அந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சிறுவனை அவனது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

மருத்துவமனையில் சில வாரங்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் ஹர்ஷ்வர்தனின் உடல்நிலை தேறியதை அடுத்து, பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். வீட்டுக்கு வந்ததும் சிறுவன் சிலகாலம் மீண்டும் பள்ளிக்கும் சென்று வந்திருக்கிறான். இந்நிலையில், விபத்து நடந்து சில மாதங்கள் கழித்து சிறுவனின் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளிலிருந்து மிகுந்த வலியுடன் ரத்தம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. அதையடுத்து, சிறுவனின் பெற்றோர் அவனை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவனுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரிக்கவே, உயர் சிகிச்சைக்காக ஆந்திரா தொடங்கி தமிழகத்தின் வேலூர் வரை 20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்குச் சிறுவனைத் தூக்கிக்கொண்டு அலைந்து திரிந்திருக்கின்றனர்.

கருணைக்கொலை #Euthanasia
கருணைக்கொலை #Euthanasia

ஆனால், தங்கள் மகனுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பைக் குணப்படுத்த முடியாது என்று அவனை சோதித்த மருத்துவர்கள் அனைவரும் தெரிவிக்க, அப்போதிலிருந்து அவர்கள் வாழ்க்கை சோகமே உருவாக மாறியது. துடிப்பாகத் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு சிறுவனின் கால்கள் வீட்டுக் கட்டிலில் வருடக்கணக்கில் முடங்கிக் கிடந்தன.
தன் மகன் ஹர்ஷ்வர்தனின் உடலில் தினம் தினம் ரத்தம் வழிவதைக் கண்டு பரிதவித்துப்போன அப்பா மணி, குழந்தையைக் குணப்படுத்த முடியவில்லையே என்று புலம்பிப் புலம்பி மனநலம் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

கணவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில், உயிருக்குப் போராடும் மகனை வைத்துக்கொண்டு பரிதவித்துக் கொண்டிருந்த அருணா செய்வதறியாது திகைத்துப் போய் இருந்துள்ளார். வருமானமும் இல்லை, மகனின் தவிப்புக்குத் தீர்வும் இல்லை, அரவணைக்க ஒருவருமில்லை என்ற கையறு நிலையில் அக்கம் பக்கத்தினரின் அறிவுரையைக் கேட்டு தன் மகனைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்ற வளாகத்தை நாடுவதென்று முடிவெடுத்தார் அருணா.

Death - Representational image
Death - Representational image

அதன்படி, நேற்றைய தினம் வீட்டிலேயே கண்ணீர் மல்க கனத்த இதயத்துடன் கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு மனு எழுதி எடுத்துக்கொண்டு, உடன் தன் மகன் ஹர்ஷ்வர்தனையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சித்தூர் மாவட்டம் புங்கனூர் நீதிமன்றத்திற்கு அருணா சென்றுள்ளார். ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கின் காரணமாக புங்கனூர் நீதிமன்றம் மூடப்பட்டிருந்துள்ளது. ஏமாற்றம் அடைந்துபோன அருணா மீண்டும் அதே ஆட்டோவில் தன் மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால், நீதிமன்ற வளாகத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றதுமே சிறுவன் ஹர்ஷ்வர்தனின் உயிர் ஆட்டோவில் தாய் அருணாவின் மடியிலேயே பிரிந்துவிட்டது. கருணைக்கொலைக்காக நீதிமன்றம் நாடிய அருணா தன் மடியிலேயே உயிரை விட்ட மகனின் சடலத்தை வாரி அணைத்தபடி கதறினார். சிறுவன் ஹர்ஷ்வர்தனின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மகன் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை அவன் தந்தைக்குத் தெரிவிக்க கிராம மக்கள் எவ்வளவோ முயன்ற போதிலும் அருணாவின் கணவர் மணி எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு