Published:Updated:

`அப்பா முகத்தையாவது வீடியோகாலில் அவன் பார்க்க முடியுமா?' -லண்டனிலிருந்து கலங்கும் முருகனின் அக்கா

முருகன்
News
முருகன்

``அப்பாவின் உடல் அடக்கத்துக்கான காரியங்களை அம்மா தனியாகத்தான் செய்துகொண்டிருக்கிறார்.’’

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 29 வருடங்களாக சிறையில் இருக்கிற ஸ்ரீகரன் என்கிற முருகனின் அப்பா வெற்றிவேல் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முருகனின் அப்பா
முருகனின் அப்பா

கடந்த வருடம் மகள் ஹரித்ராவின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று நளினி பரோலில் வந்தபோதே, முருகன் அப்பாவின் உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. இதன் காரணமாகவே முருகனின் அம்மாவால் கணவரைவிட்டு இந்தியாவுக்கு வந்து மருமகள் நளினியைப் பார்க்க முடியவில்லை. தவிர, ஹரித்ராவும் தன் மேற்படிப்பு காரணமாக லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலைகளால் நளினி, மகளின் திருமணத்தை நடத்திமுடிக்க முடியாமலேயே பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது முருகனின் தந்தை தவறிவிட்ட நிலையில், லண்டனில் இருக்கிற முருகனின் மூத்த சகோதரி ராஜேஸ்வரியை வாட்ஸ்அப் காலில் தொடர்புகொண்டோம். ``கடந்த மூன்று நாள்களாக அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகத்தான் இருந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் அப்பா எங்களைவிட்டுப் போய்விடலாம் என்கிற நிலைமையால் தூக்கமே இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். இப்போது எங்கள் அப்பா இல்லை. அவர் முகத்தைக் கடைசியாக எங்களால் நேரில் பார்க்கவும் முடியாது.

முருகனின் அக்கா ராஜேஸ்வரி
முருகனின் அக்கா ராஜேஸ்வரி

அப்பா உடல்நலமில்லாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தபோதே, `வீடியோ காலில் ஒருமுறையாவது என் அப்பாவின் முகத்தைப் பார்க்க வேண்டும்' என சிறையிலிருக்கிற என் தம்பி போராடிக்கொண்டிருந்தான். அவன் வேண்டுதலை அரசு காது கொடுத்துக் கேட்கவே இல்லை. இப்போது எங்கள் அப்பாவின் இறந்த உடலையாவது வீடியோ காலில் பார்க்க அவனுக்கு அனுமதி கொடுக்கச் சொல்லுங்கள் ப்ளீஸ்'' என்றவரின் குரல் உடைந்து அழுகையில் கரைய ஆரம்பித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்கள் பெற்றோருக்கு நாங்கள் 8 பிள்ளைகள். தற்போது நாங்கள் எல்லோருமே வெளிநாடுகளில் இருக்கிறோம். அம்மா மட்டும்தான் அப்பாவைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவின் அடக்கத்துக்கான காரியங்களை அம்மா தனியாகத்தான் செய்துகொண்டிருக்கிறார். பக்கத்தில் அப்பாவின் சகோதரர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போதைக்கு இது மட்டும்தான் நிம்மதி" என்றார்.

நளினியின் அம்மா
நளினியின் அம்மா

நளினியின் அம்மா பத்மா பேசுகையில், ``காலையில நளினியோட நாத்தனார் ராஜீ லண்டன்ல இருந்து போன் பண்ணி தகவல் சொன்னாங்க. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சும்மா. என் சம்பந்திக்கு நாலு ஆண், நாலு பெண்ணுன்னு 8 குழந்தைங்க. ஒருத்தர் சுவிஸ்ல இருக்கார். மத்தவங்க எல்லாரும் லண்டன்ல இருக்காங்க. `லாக்டெளன் காரணமா யாராலுமே இலங்கைக்குப் போக முடியாது'ன்னு ராஜீ அழுதாங்க. ஆறுதல் சொன்னேன். என் பேத்தி ஹரித்ராவுக்கு அப்பாவைப் பெத்த தாத்தா-பாட்டி மேலே பாசம் அதிகம். அவங்க முன்னாடிதான் தன் கல்யாணம் நடக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டா. அது நடக்காமலே போயிடுச்சு'' என்றார் வருத்தத்துடன்.