Published:Updated:

நெற்பயிர்கள் சேதம்; மனமுடைந்த விவசாயி ரயில் முன்பாய்ந்து தற்கொலை - நாகை அருகே சோகம்!

விவசாயி தற்கொலை
விவசாயி தற்கொலை

சாகுபடி செய்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் இருந்த ரமேஷ்பாபு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாயக் கடனை திருப்பி செலுத்த வழியின்றித் தவித்து வந்துள்ளார்

காவிரி கடைமடைப் பகுதிகளான டெல்டா பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. தை மாதம் 1-ம் தேதி அறுவடை செய்ய ஏதுவாக சாகுபடி செய்யப்பட்ட பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, நெல் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள மோகனாம்பாள்புரத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்பாபு என்பவர் 10 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தொடர் மழை காரணமாக இவர் பயிரிட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.

சாகுபடி செய்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் இருந்த ரமேஷ்பாபு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாயக் கடனையும் திருப்பிச் செலுத்த வழியின்றி தவித்து வந்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த விவசாயி ரமேஷ்பாபு, இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

விவசாயி ரமேஷ்பாபு
விவசாயி ரமேஷ்பாபு

வீட்டை விட்டு வெளியே சென்ற தந்தை வராத காரணத்தினால் அவரது மகன்கள் அவரைத் தேடிப் பார்த்துள்ளனர், இந்நிலையில் திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற எர்ணாகுளம் அதிவிரைவு ரயில் நாகை மாவட்டம் ஆவராணி அருகே வரும்போது விவசாயி ரமேஷ்பாபு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது.

`எந்தப் பொங்கலும் இப்படி இருந்ததில்ல!' - கனமழையால் டெல்டா விவசாயிகளுக்கு நேர்ந்த துயரம்

தகவலறிந்து சம்பவ இடத்திலிருந்து விவசாயி ரமேஷ்பாபுவின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார் நாகை அரசு மருத்துமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசு கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க ஆலோசித்து வருகிறது. இந்தசூழலில், விவசாயி ஒருவர் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகையில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி தனபாலன்
காவிரி தனபாலன்

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன், ``தமிழக அரசு, `உரிய இழப்பீடு கிடைக்கும் நிவாரணம் வழங்குவோம்’ என்று உறுதியளித்தார்கள்கள். ஆனால், காப்பீடு நிறுவனங்களின் விதிமுறைகளின்படி நீரினால் பாதிக்கப்படும் நெற்பயிர்களுக்குக் காப்பீடு வழங்க வழிவகை ஏதும் இல்லை. இதனால், தற்கொலை மரணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விவசாயி ரமேஷ்பாபு தற்கொலை சம்பவம் அவரின் குடும்பத்தினருக்கு பெரும் இழப்பு.இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு