Published:Updated:

வீட்டுக்குள் புகுந்த மழைவெள்ளம்! - தூத்துக்குடியில் குளிரில் நடுங்கி மூதாட்டி உயிரிழந்த சோகம்

வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால் குளிரில் நடுநடுங்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை வைத்து அழக்கூட இடமில்லாமல், வேறு இடத்துக்கு தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்

கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகத் தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்திலேயே அதிகபட்சமான மழைப்பொழிவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவானது. கனமழையால் நகர்ப்பகுதிகள் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குளிரில் உயிரிழந்த மூதாட்டி
குளிரில் உயிரிழந்த மூதாட்டி

மழைநீர் தேக்கத்தால், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழக்கமான சாலை மூடப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருவதால் பேருந்துகள் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்கின்றன. பல பகுதிகளில் ஆங்காங்கே மரங்களும் நடுரோட்டில் சரிந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீர் வடியாததால் நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

`இடைவிடாது கொட்டும் மழை; 4 மாதத்தில் 3 -வது முறை!’ - மீண்டும் வெள்ளக்காடான நீலகிரி

பல பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர், இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள சூசைநகர் பகுதியில் வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு மழைநீர் புகுந்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள காஸ் சிலிண்டர், நாற்காலி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் மிதந்து காணப்படுகின்றன. இதனால் மக்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறி மேட்டுப்பகுதிகளில் தற்காலிகமாகக் கூடாரம் அமைத்து தஞ்சம் புகுந்துள்ளனர்.

தேங்கி நிற்கும் மழைநீர்
தேங்கி நிற்கும் மழைநீர்

இந்நிலையில், இப்பகுதியில் தனியாக வசித்து வந்த சொள்ளமுத்தம்மா என்ற 70 வயது மூதாட்டி, வீட்டுக்குள் புகுந்திருந்த தண்ணீரால் கட்டிலைவிட்டு கீழே இறங்க முடியாமல் தவித்து வந்த நிலையில் கடுங்குளிர் தாங்க முடியாமல் நடுநடுங்கி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகே உள்ள மேடான பகுதிக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ``எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கு. ரோடு வசதி, வடிகால் வசதி எதுவுமில்லை. இதனால, சின்ன மழைக்குகூட தாங்காது. ரெண்டு நாளா பெய்த மழையால இடுப்பளவு வரை குளம்போல மழைநீர் தேங்கி நிற்கிறது. வடிகால் அமைக்கப்பட்டிருந்தா இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

வீட்டுக்குள் புகுந்த மழைநீர்
வீட்டுக்குள் புகுந்த மழைநீர்

வீட்டுக்குள்ளே தேங்கி நின்ற மழைநீரால், கட்டிலை விட்டுக்கூட எழுந்திருக்க முடியாத பாட்டியம்மா பரிதாபமா உயிரிழந்துட்டாங்க. இதனால், பாட்டியம்மாவின் உடலை வீட்டுக்குள்ள வைச்சு சடங்கு செய்ய முடியாத நிலைமையில, வேற ஒரு காலி இடத்துல பந்தல் அமைச்சு தூக்கி வச்சு செஞ்சு முடிச்சோம்.

உடனடியா, தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றனர். மழைநீரை வெளியேற்றும் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதிகளில்தான் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது.

மூடப்பட்ட திருச்செந்தூர்  சாலை
மூடப்பட்ட திருச்செந்தூர் சாலை

தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், முழுமையாக வெளியேற்ற 2 முதல் 3 நாள்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.