Published:Updated:

மின்சாரத்துறையின் அலட்சியம்; மின்கம்பம் முறிந்து முதியவர் உயிரிழப்பு; மற்றொருவருக்கு சிகிச்சை!

முறிந்து விழுந்த மின் கம்பம்

கோயில் அருகே படுத்திருந்த முதியவர்கள் மீது, பயன்பாடற்ற மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஒரு முதியவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரத்துறையின் அலட்சியம்; மின்கம்பம் முறிந்து முதியவர் உயிரிழப்பு; மற்றொருவருக்கு சிகிச்சை!

கோயில் அருகே படுத்திருந்த முதியவர்கள் மீது, பயன்பாடற்ற மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஒரு முதியவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
முறிந்து விழுந்த மின் கம்பம்

விழுப்புரம் - புதுவை சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ளது அம்மன் சன்னதி. இந்தக் கோயில் வாசலில் இருந்த மின் கம்பம் ஒன்று பழுதாகி காணப்பட்டதால், அதன் அருகிலேயே புதிய மின் கம்பம் வைக்கப்பட்டு, மின் இணைப்பும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பழுதாகிய மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டுச் சென்றுள்ளனர் மின்சாரத்துறை ஊழியர்கள். ஆகவே, இந்த மின்கம்பம் கால ஓட்டத்தில் மேலும் சிதிலமடைந்திருக்கிறது. இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (62, புதுவையைச் சேர்ந்த ராமலிங்கம் (70) ஆகிய முதியவர்கள் நேற்று (31.05.2022) இரவு அந்தக் கோயில் வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

பழுதடைந்த மின்கம்பம் - மாதிரி படம்
பழுதடைந்த மின்கம்பம் - மாதிரி படம்

மிகவும் அபாய நிலையில் இருந்த அந்த மின்கம்பம், நள்ளிரவு 11.45 மணியளவில் திடீரென முறிந்து இருவர் மீதும் விழுந்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, முதியவர் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது கிடந்துள்ளார். மற்றொரு முதியவர் ராமலிங்கம், இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த கோரச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் விழுப்புரம் நகர காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், உயிரிழந்தவர் மற்றும் பாதிப்புக்குள்ளானவரையும் உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பலத்த காயமடைந்த ராமலிங்கம் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் குறித்து 304A, 338 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கும் நகர காவல்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து ஏற்படுவதற்கு காரணம் மின்சாரத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே என்று குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

இது குறித்து விளக்கம் கேட்க மாவட்ட மின்சாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் மதனகோபாலிடம் பேசினோம். "விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, ரிப்போர்ட் வழங்கும்படி அதிகாரிகளிடத்தில் கேட்டிருக்கிறோம். அது கிடைத்ததும் தங்களிடம் கூறுகிறேன். மாவட்டம் முழுவதிலும் பயன்பாடின்றி இருக்கும் மின்கம்பங்கள் குறித்து ஆய்வு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக, விழுப்புரம் நகரத்தில் பயன்பாடற்று இருக்கும் மின் கம்பங்களை கண்டறிந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்" என்றார். 'பழுதடைந்த அந்த மின்கம்பத்தை ஏன் இதுநாள் வரை அகற்றவில்லை' என்று கேட்டதற்கு... "அதற்காகத்தான் ரிப்போர்ட் கேட்டிருக்கிறோம்" என்று முடித்துக் கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism