யானை - மனித எதிர்கொள்ளல்: `வெற்றிலை வாங்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை!’ - கூடலூர் சோகம்

கூடலூரில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்கு பேர் வரை யானை தாக்கி, பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள ஸ்ரீமதுரை, ஓடக்கொல்லி கிராமத்தைச் சேர்ந்த மணி (52) என்பவர், கடந்த 8-ம் தேதி தனது காபித் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அங்கு திடீரென வந்த காட்டு யானை ஒன்று அவரைக் கடுமையாகத் தாக்கியது. இதில் உடல் சிதைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் மணி. இதையறிந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவலர்கள் மற்றும் வனத்துறையினர், மணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில்,சேரம்பாடிப் பகுதியிலுள்ள கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்துவந்த நாகமுத்து (65) என்பவர், நேற்று இரவு 9:30 மணிளவில் அருகிலுள்ள கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்கச் சென்றிருக்கிறார். வாங்கிவிட்டு வீடு திரும்புகையில், கடை வீதியிலேயே யானை தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டி நாகமுத்துவின் உடலை மீட்டனர். வனத்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
யானைத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் சகாதேவன்,``கூடலூரைப் பொறுத்தவரை யானை - மனித எதிர்க்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. யானை தாக்கி மக்கள் உயிரிழப்பதும், மனிதத் தவறுகளால் யானைகள் இறப்பதும் தொடர்கதையாகியிருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் வரை யானை தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள். கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள யானைகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களைப் பாதுகாத்து, அவற்றுக்குத் தேவையான உணவு, தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கையில் வனத்துறை தீவிரம் காட்டினால் மட்டுமே யானை - மனித எதிர்க்கொள்ளல்களை ஓரளவுக்குக் குறைக்க முடியும்’’ என்றார்.

இது குறித்து கூடலூர் வனத்துறையினர், ``காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க, இரண்டு கும்கி யானைகள் மூலம் வனத்துறை பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவிருக்கிறார்கள். உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று குறிப்பிட்ட காட்டு யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.