Published:Updated:

`இசைத்துறைக்கு பெரும் இழப்பு!’ - சாக்ஸபோன் கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்!

பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

கத்ரி கோபால்நாத்
கத்ரி கோபால்நாத்

சாக்ஸபோன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இவரது பெயராகத்தான் இருக்கும். வெளிநாட்டுக் கருவியைத் தன் கை விரல் மற்றும் உதட்டுக்கு அடிமையாக்கி இவர் வாசிக்கும் இசையின் பெருமை கர்நாட்டிக் இசையை ரசிக்கும் பலருக்குத் தெரியும். புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

கத்ரி கோபால்நாத்
கத்ரி கோபால்நாத்

கர்நாடக மாநிலம் மங்களூர்தான் கத்ரி கோபால்நாத்தின் சொந்த ஊர். இவரின் தந்தை நாதஸ்வர கலைஞராக இருந்தவர். ஒருமுறை மைசூர் அரண்மனையில், வெளிநாட்டு இசைக்குழு ஒன்று சாக்ஸபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தானும் சாக்ஸபோன் கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டு, கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபால கிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்ஸபோன் வாசிப்பைக் கற்றார்.

பின்னர் சென்னையில் உள்ள பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி.கோபாலகிருஷ்ணனிடம் முழு இப்பயிற்சியையும் பெற்றார். உலகம் முழுவதும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கலிபோர்னியாவின் இசைக் கலைஞரான ஜாஸ், இவரின் இசையால் ஈர்க்கப்பட்டார். கோபால்நாத்தும் ஜாஸும் இணைந்து செய்த இசைக் கச்சேரி கோபால்நாத்தின் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கத்ரி கோபால்நாத்
கத்ரி கோபால்நாத்

இயக்குநர் கே.பாலசந்தரின் முயற்சியால் ‘டூயட்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றினார் கத்ரி கோபால்நாத். அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் சாக்ஸபோன் இசை இடம் பெற்றிருக்கும். டூயட் படம் இவரைத் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து பெரிய பெருமை தேடித் தந்தது.

கர்நாடக கலாஸ்ரீ, பத்மஸ்ரீ, கலைமாமணி, சாக்ஸபோன் சாம்ராட், நாத கலாநிதி, சங்கீத வாத்திய ரத்னா, சங்கீத கலாசிகாமணி போன்ற பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார் கத்ரி கோபால்நாத். 69 வயதான கத்ரி கோபால்நாத், மங்களூரில் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்துவந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகாந்த் கத்ரி, இசையமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் வேலை செய்துவருகிறார்.

கத்ரி கோபால்நாத்
கத்ரி கோபால்நாத்

இந்நிலையில் , உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்ரி கோபால்நாத் இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் வந்தவுடன் கோபால்நாத்துக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கோபால்நாத்தின் மறைவுக்கு இசை உலகம் உட்பட மொத்த இந்திய திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.