Published:Updated:

சிங்கப்பூரில் இறந்த இன்ஜினீயர்!-பெரம்பலூர் எம்.பி உதவியால் 13 நாள்களுக்குப் பின் சொந்த ஊர் வந்த உடல்

உடலைக் கொண்டுவர பரிதவித்த குடும்பம்
உடலைக் கொண்டுவர பரிதவித்த குடும்பம்

``கடைசி வரையிலும் உங்களின் முகத்தைப் பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன்" என்று கதறினர். இதைப் பார்த்த அனைவரின் மனமும் கலங்கியது.

``என் கணவர் உயிரிழந்து 13 நாள்கள் ஆகிறது. எப்படியாவது மீட்டுக்கொடுங்கள்" என்று பெரம்பலூரில் ஒரு குடும்பமே பரிதவித்தது. ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ உதவி செய்யாத நிலையில், எம்.பி-யின் முயற்சியால் சிங்கப்பூரில் உயிரிழந்த கப்பல் இன்ஜினீயரின் உடல் அவரது சொந்த ஊரான பெரம்பலூர் வந்தடைந்தது. ``கடைசி வரையிலும் உங்களது முகத்தைப் பார்க்கமுடியாமல் போய்விடுமோ" என்று மனைவி தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்தது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சிங்கப்பூரில் கப்பல் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம்தான் செந்தில்குமார் பெரம்பலூர் வந்துவிட்டு வேலைக்குச் சென்றார். கடந்த சில நாள்களுக்கு முன் மாரடைப்பால் செந்தில்குமார் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் சிங்கப்பூரிலிருந்து செந்தில்குமாரின் உடலைக்கொண்டுவர முடியாமல் பரிதவித்தது அவரது குடும்பம்.

`என் கணவரின் உடலை மீட்டுத் தாருங்கள்’ என ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம் செந்தில்குமார் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். அவர்களும் கொரோனா விவகாரத்தால் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இந்தத் தகவல் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தருக்குச் சென்றிருக்கிறது. அதைத்தொடர்ந்து மத்திய அரசிடம் தொடர்ந்து பேசிய பாரிவேந்தர், செந்தில்குமார் உடலைக் கொண்டு வர முயற்சி செய்தார். அதனடிப்படையில் உயிரிழந்த செந்தில்குமாரின் உடல் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து பெங்களூருக்கு நேற்று இரவு வந்தது.

உடலை கொண்டுவர பரிதவித்த குடும்பம்
உடலை கொண்டுவர பரிதவித்த குடும்பம்

பின்பு பெங்களூரிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக இன்று பெரம்பலூர் வந்தடைந்தது. செந்தில்குமார் உயிரிழந்து 13 நாள்களுக்குப் பிறகு அவரது உடல் பெரம்பலூர் வந்தடைந்தது. அவரது உடலைப் பார்த்ததும் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர், ``கடைசி வரையிலும் உங்களது முகத்தைப் பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று நினைத்தோம்" என்று கதறினர். இதைப் பார்த்த அனைவரின் மனமும் கலங்கியது. இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி செய்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர் குடும்பத்தினர்.

இதுகுறித்து பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தரிடம் பேசினோம். ``இந்தச் சம்பவம் எனது உதவியாளர் மூலமாக எனக்குத் தெரியவந்தது. உடனே அவர் எங்கு வேலை செய்கிறார். எப்படி இறந்தார் என்ற தகவலை வாங்கிக்கொண்டு டெல்லியில் உள்ள அமைச்சர்களிடம் பேசினேன். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு மெயிலும் அனுப்பினேன். அவர்கள் உதவியால் சிங்கப்பூரில் உள்ள கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உதவியை நாடினேன்.

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்
பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்

அவர்கள் ஒருசில பார்மாலிட்டிஸ் வேலைகளைச் செய்யச் சொன்னார்கள். அதையும் செய்துகொடுத்தேன். நான்கு நாள்கள் தொடர் முயற்சிக்குப் பிறகு அவர்கள் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக அனுப்பினார்கள். பின்பு பெங்களூரிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவந்தார்கள். அந்தக் குடும்பம் வாழ்த்தியதாக கேள்விப்பட்டேன். அவர்கள் என்னை வாழ்த்தத் தேவையில்லை. அவர்களுக்கு வேலை செய்யத்தான் என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள்’’ என்று கூறிய பாரிவேந்தர், ``என் தொகுதி மக்கள் எந்த உதவியாக இருந்தாலும் எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம்" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு