Published:Updated:

`பெரியாரின் முரட்டுத் தொண்டர்; கறுப்புச் சட்டைப் போடாத கொள்கைவாதி!'- யார் இந்த ஆசிட் தியாகராஜன்?

ஆசிட் தியாகராஜன்
ஆசிட் தியாகராஜன்

தனது செயல்களால் பெரியாரின் இயக்கத்துக்குக் கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதாலே கழகத்தில் உறுப்பினராகாமலே இருந்திருக்கிறார். 90 வயதைக் கடந்த ஆசிட் தியாகராஜன் தஞ்சையில் இன்று காலமானார்.

`இது பெரியார் மண்' என்று தமிழ்நாட்டைப் பலரும் குறிப்பிடுவதற்குக் காரணம் பெரியாரின் சிந்தனைகளும் களச் செயல்பாடுகளும் மட்டும் காரணமல்ல. பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள், தங்கள் வாழ்வின் முக்கியப் பகுதியாக நினைத்து பெரியாரின் வழிகாட்டலைப் பின்பற்றியதும்தான். அப்படியான தொண்டர்களில் முற்றிலும் மாறுபட்டவர்தான் 'ஆசிட்' தியாகராஜன். அவர் இறுதிவரை பெரியாரிய அமைப்புகள் எதுவொன்றிலும் இல்லை. ஆனால், பெரியாரையும் அவரின் கருத்துகளையும் யாரேனும் பழித்துச் சொன்னால் முதல் ஆளாய் நின்று தட்டிக்கேட்பவராகத் திகழ்ந்தார்.

பெரியார்
பெரியார்

'ஆசிட்' தியாகராஜன் எனும் பெயரைத் தெரியாத பெரியார்வாதிகள் இருக்க மாட்டார்கள். அதென்ன பெயரோடு 'ஆசிட்' என்று இன்று கேட்பவர்களுக்கு, ஆனந்த விகடன் பேட்டியில் அவரே பதில் சொல்லியிருக்கிறார்.

1957-ம் ஆண்டில் பெரியார் மீதான வழக்கு ஒன்றில், பெரியார் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் விவரிக்கையில், `பெரியார்... பெரியார்' என்று சொன்னதற்கு, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சீனிவாசாச்சாரி, `ராமசாமி நாயக்கர்' எனச் சொல்லச் சொல்லியிருக்கிறார். இது பெரியாரிய தொண்டரான தியாகராஜனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வழக்கில் பெரியாருக்குத் தண்டனை கிடைத்ததும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் மீது ஆசிட் வீசியிருக்கிறார்.

தனது இதுபோன்ற செயல்களால் பெரியாரின் இயக்கத்துக்குக் கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதாலேயே கழகத்தில் உறுப்பினராகாமலே இருந்திருக்கிறார். 90 வயதைக் கடந்த ஆசிட் தியாகராஜன் தஞ்சையில் இன்று காலமானார்.

ஆசிட் தியாகராஜன்
ஆசிட் தியாகராஜன்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் `ஆசிட்' தியாகராஜன் பற்றிக் கேட்டபோது, ``பெரியாரின் மனைவி நாகம்மை இறந்த ஓரிரு நாளில் பெரியார் நடத்தி வைத்தது தியாகராஜனின் அண்ணன் திருமணத்தைத்தான். அந்தளவுக்குப் பெரியார் மீதும் அக்குடும்பமும், அக்குடும்பத்தின் மீது பெரியாரும் அளவில்லா அன்பு வைத்திருந்தனர்.

`ஆசிட்' தியாகராஜன், பெரியாரின் கண்களில் படாமல்தான் தன் வேலைகளைச் செய்தார். ஏனென்றால், அவரின் செயல்முறை அப்படி. வக்கீல் மீது ஆசிட் ஊற்றியது மட்டுமல்ல, பல முரட்டுத்தனமான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, திராவிடக் கழகத்துக்கு எதிரான கருத்துகொண்ட ஒருவர், பெரியாரின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு செருப்பால் அடித்துக்கொண்டே மேடைகளில் பேசுவது வழக்கம். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தியாகராஜனுக்குக் கடும்கோபம் வந்தது. ஆனால், அந்தக் கூட்டங்களில் இவர் சென்றுவிட முடியாதபடி ஏகப்பட்ட காவல் இருந்தது. அதனால், சோடா விற்பவரைப் போலக் கைலி, முண்டாசு கட்டிக்கொண்டு கூட்டத்துக்குச் சென்று, அந்தப் பேச்சாளர் பெரியாரின் படத்தைச் செருப்பால் அடிக்கும்போது சோடா பாட்டிலை வீசி அடித்திருக்கிறார்.

`பெரியாரின் முரட்டுத் தொண்டர்; கறுப்புச் சட்டைப் போடாத கொள்கைவாதி!'- யார் இந்த ஆசிட் தியாகராஜன்?

`ஆசிட்' தியாராஜனைப்போல முரட்டுத்தனமான பெரியார் தொண்டரைப் பார்ப்பது அரிது. அவரை நான் 1976-ம் ஆண்டு வாக்கில் சந்தித்ததோடு சரி, பின்னாளில் அவர் என்னவானார் என்பது தெரியவில்லை. பலரிடம் விசாரித்தும் சரியான பதில் இல்லை. 2007-ம் ஆண்டில் நாங்கள் சாதி ஒழிப்பு மாநாட்டின்போது, ஆந்திராவில் சர்ச் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அவரை அழைத்து வந்தோம். அப்போதுதான் அவர் கறுப்புச் சட்டையே அணிந்துகொண்டார்.

பெரியாரின் கருத்துகளை முழுமையாக உள்வாங்கியவர். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காதவர். கடைசி வரைக்குமே அவரின் குடும்பம் கஷ்டத்தோடுதான் இருந்தது. சில பெரியாரியவாதிகள் உதவினார்கள்" என்றார்.

பெரியாரைச் சந்தித்ததைப் பற்றி `ஆசிட்' தியாகராஜனின் வார்த்தைகளிலேயே...

பெரியார்
பெரியார்

``பெரியார் ஜெயில்ல இருந்து வெளியே வந்ததும் என்னைக் கூப்பிட்டுவிட்டாரு. ஆசிட் பட்டு வெந்துபோன என் கைகளைக் கொஞ்ச நேரம் வருடிக் கொடுத்துக்கிட்டே இருந்தாரு. எனக்கு நெக்குருகிப் போச்சு. நான் வெளியே வந்த கொஞ்ச நேரத்துல, ஐயா வீட்டு வேலைக்காரர் அழுதுகிட்டே வந்தார். 'என்னவோ ஏதோ'ன்னு நான் வீட்டுக்குள்ளே எட்டிப் பார்த்தேன். கைத்தடி மேல ஐயா தலை சாஞ்சிருந்தது. அவர் முதுகு குலுங்கிட்டு இருந்தது. என்னை நினைச்சு அன்னிக்கு ஐயா அழுதாரு. அதுக்கு மேல என்ன வேணும்?"

அடுத்த கட்டுரைக்கு