கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 4-வது தடவையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடவை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருமானமின்றி உணவில்லாமல் தவித்துவருகின்றனர். அதனால் தமிழகத்திலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்குத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்றுவருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் தமிழக முகாம்களில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர். அவர்களுக்காக தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. சில தினங்களுக்கு முன்புகூட திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பீகாருக்கும் ஒடிசாவுக்கும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்தச் சிறப்பு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பணிக்காக வந்த திருவள்ளூரைச் சேர்ந்த பரந்தாமன், சரக்கு ரயில் மோதி பலியானார். இதைப்போல சேலையூர் காவல் நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்த வெளிமாநிலத் தொழிலாளி விபத்தில் சிக்கி பலியானார். இந்தச் சூழலில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் தங்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் சிறப்பு முகாம்களில் தங்க ஏற்பாடு செய்தனர்.

இந்தச் சூழலில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகில் கிடந்த பையை போலீஸார் எடுத்து சோதித்துப் பார்த்தனர். அதில், ஒடிசாவைச் சேர்ந்த ராம்பிஸ்வாஸ் (42) என்ற ஆதார் அட்டை இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனால் இறந்தவர் ராம் பிஸ்வாஸ் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். ராம்பிஸ்வாஸ், கும்மிடிப்பூண்டியிலிருந்து தன்னுடைய சொந்த மாநிலத்துக்கு நடந்து சென்ற போது பசி மயக்கத்தில் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ராம்பிஸ்வாஸ், எங்கு வேலை செய்தார், அவருடன் தங்கியிருந்தவர்கள் யாரென்ற விவரங்களையும் போலீஸார் சேகரித்துவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சில தினங்களாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள், சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அவர்களிடம் காவல்துறையினரும் வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். ஆனால், சில தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தனர். அவர்களில் சிலரை தடுத்து நிறுத்தினோம். அதையும் மீறி சிலர் நடந்தும் சைக்கிளிலும் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவராக ராம்பிஸ்வாஸ் இருக்கலாம். கும்மிடிப்பூண்டியிலிருந்து ஓடிசாவுக்கு நடந்தே சென்ற ராம்பிஸ்வாஸ், திடீரென உயிரிழந்துள்ளார். அவரின் இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனையில் தெரியவரும். பசியால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது" என்றனர்.
இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.