Published:Updated:

காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் பூர்வாசிரமத் தந்தை காலமானார்!

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பூர்வாசிரமத் தந்தை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நேற்று காலமானார்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பூர்வாசிரமத் தந்தை பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.

ஜெயேந்திரருடன் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
ஜெயேந்திரருடன் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

வேதத்தையே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்துவந்தவர் முக்கமல்ல கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். யாரிடமும் கடிந்துபேசாமல் வேதத்தைத் தன் வாழ்வியலாகக் கொண்டவர். இவரின் மகனாகப் பிறந்த சங்கரநாராயணனே பின்னாளில் , மகாபெரியவா அவர்களால் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளாக நாமகரணம் செய்யப்பட்டு காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய பீடாதிபதி ஆனார்.

ஆறாம் வகுப்பு முடித்த சங்கரநாராயணன் தன் தந்தை, ஆசிரியராகப் பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள கைங்கர்ய சபை வேத பாடசாலையில் வேதம் பயில்வதற்காகச் சேர்ந்தார். தந்தையும் குருவுமாக கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளே சங்கரநாராயணனுக்கு ரிக்வேதம் பயிற்றுவித்து மூன்றே ஆண்டுகளில் பண்டிதராக்கினார்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அவர் மனைவி அம்பாலட்சுமியுடன்
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அவர் மனைவி அம்பாலட்சுமியுடன்

காலமுழுவதும் வேத பாராயணத்திலும் வேதம் கற்றுக்கொடுப்பதிலுமே தன் வாழ்வைச் செலவிட்டு ஞான சூரியனாகத் திகழ்ந்த கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருடைய மனைவி அம்பாலட்சுமி 2017-ம் ஆண்டு காலமானார். இவருக்கு எம்.கே.ஸ்ரீதரன், எம்.கே.குமார், எம்.கே.பிரபாகர், எம்.கே.ரகு ஆகிய மகன்களும், எம்.ராதா, பி.உமா, பி.வரலட்சுமி ஆகிய மகள்களும் உள்ளனர்.

இதுதொடர்பாகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில்,``கற்றறிந்த வேத பண்டிதரான கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் மறைவு, காஞ்சி பக்தர்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

இன்று, கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் பூத உடல் அவரது சொந்த ஊரான தண்டலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனகிரியைகள் நடைபெறுகின்றன.