Published:Updated:

விஷவண்டு கடியால் உயிரிழந்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர்! - சோகத்தில் புதுச்சேரி தொண்டர்கள்

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளரும் மணவெளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமானபுருஷோத்தமனை விஷ வண்டு கடித்து உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜெயலலிதாவுடன் புருஷோத்தமன்
ஜெயலலிதாவுடன் புருஷோத்தமன்

புதுச்சேரி மணவெளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளருமான புருஷோத்தமன் அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்திருக்கும் சிறுவள்ளிக் குப்பத்தில் பூர்வீக விவசாய நிலங்கள் இருக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் புருஷோத்தமன்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் புருஷோத்தமன்

தினமும் புதுச்சேரியில் இருந்து கிளம்பிச் சென்று நிலங்களை பார்வையிடுவதோடு, அதில் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதும் இவரது வழக்கம். அதன்படி இன்று காலை சுமார் 11.30 மணியளவில் தனது நிலத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மழை பெய்திருக்கிறது.

அதற்கான நிலத்தின் ஓரம் இருந்த மரத்தின் கீழ் ஒதுங்கியிருக்கிறார் புருஷோத்தமன். அப்போது அங்கிருந்த விஷ வண்டு கடித்ததால் மயங்கி விழுந்தவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

புருஷோத்தமன்
புருஷோத்தமன்

ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து உடல்கூறாய்வு செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொந்தளிக்கும் பி.ஜே.பி… போர்க்கொடி தூக்கும் அ.தி.மு.க… புதுச்சேரி இடைத்தேர்தல் லைவ் ரிப்போர்ட்!

70 வயதான புருஷோத்தமன் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க `ஜெ’, `ஜா’ என இரு அணிகளாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா பக்கம் நின்றார். அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமானவர் இவர். இடையில் ஜெயலலிதா இவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், இரண்டு முறை சுயேச்சையாக பானை சின்னத்தில் போட்டியிட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், மீண்டும் அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். 2011 புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அ.தி.மு.க, இவரை மணவெளி தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்ததுக்கு புதுச்சேரி வந்த ஜெயலலிதாவிடம், இவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். அதற்கு,``புருஷோத்தமனை எனக்கே அறிமுகப்படுத்துகிறீர்களா?” நக்கலாகக் கேட்ட ஜெயலலிதா, ``எப்படி இருக்கீங்க புருஷோத்தமன்?” என்று நலம் விசாரிக்க வாயடைத்துப் போனார்கள் உள்ளூர் நிர்வாகிகள்.

புருஷோத்தமன்
புருஷோத்தமன்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளைக் கைப்பற்றிய அ.தி.மு.க கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் தோல்வியைத் தழுவியது. அதில் அதிருப்தியடைந்த ஜெயலலிதா இந்த மூன்று மாவட்டச் செயலாளர்களின் பதவியைப் பறித்தார். அப்போது, புதுச்சேரி மாநிலச் செயலாளராக புருஷோத்தமனைத்தான் நியமித்தார் ஜெயலலிதா. `அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லும்போது தோளில் இருக்கும் துண்டை எடுத்துவிட்டுச் செல்லும்போது, பச்சைக்கலர் துண்டை தோளின் இருபுறமும் போட்டுக் கொண்டு ஜெயலலிதாவின் பக்கத்தில் நிற்கும் ஒரே தொண்டர் இவர் மட்டும்தான்' என்கின்றனர் கட்சிக்காரர்கள்.