Published:Updated:

புதுச்சேரி: 1985 முதல் பா.ஜ.க பொருளாளர் - நியமன எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்!

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ சங்கர்
பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ சங்கர்

புதுச்சேரி பா.ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவரும், அக்கட்சியின் மாநிலப் பொருளாளருமான சங்கர் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

30 உறுப்பினர்களைக்கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று எம்.எல்.ஏ-க்களை நியமன உறுப்பினர்களாக நியமித்துக்கொள்ளலாம். அவர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யலாம். புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி, உட்கட்சிப் பூசல் காரணமாக ஒரு வருடம் கடந்தும் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்காமல் இருந்தது.

கிரண் பேடியுடன் நியமன எம்.எல்.ஏ சங்கர் (இடது ஓரம்)
கிரண் பேடியுடன் நியமன எம்.எல்.ஏ சங்கர் (இடது ஓரம்)

அதைப் பயன்படுத்திக்கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, தங்கள் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், பா.ஜ.க ஆதரவாளர் செல்வகணபதி உள்ளிட்ட மூன்று பேரையும் மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது. தொடர்ந்து அவர்கள் மூன்று பேருக்கும் இரவோடு இரவாக ரகசியப் பதவி பிரமாணம் செய்துவைத்தார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு நியமித்த எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லாது என்று புதுச்சேரி அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தை நாடினார் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆனால், நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட அவசியம் இல்லை என்றும் கூறிவிட்டது.

Vikatan

அதையடுத்து மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தொடங்கினர். இந்தநிலையில்தான் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சங்கர் இன்று காலை 5 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 70 வயதான இவர், 1985 முதல் புதுச்சேரி மாநில பா.ஜ.க-வின் பொருளாளராகப் பதவி வகித்துவந்தார். இவருக்கு மேட்டுப்பாளையத்தில் சொந்தமாக ரசாயனத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கிவருகிறது. இன்று மாலை 4:30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத பா.ஜ.க., இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை வைத்துதான் `ஆட்சி மாற்றம்’ என்று காய் நகர்த்திவந்தது. தற்போது அந்த எண்ணிக்கை இரண்டாகக் குறைந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு