Published:Updated:

புதுக்கோட்டை:`மறந்துபோன நீட் தேர்வு ஹால்டிக்கெட் ஐ.டி!' மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த மாணவி

மாணவி ஹரிஷ்மா
மாணவி ஹரிஷ்மா

என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்த ஹரிஷ்மா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள டி களபம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவரின் மகள் ஹரிஷ்மா (17). பட்டுக்கோட்டையிலுள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த ஹரிஷ்மா, இந்த ஆண்டு ப்ளஸ் டூ-வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே ஹரிஷ்மாவுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ப்ளஸ் டூ- விலும் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறார். நன்றாகப் படிக்கும் மாணவி. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டுக்கான ஐ.டி வந்திருக்கிறது.

தற்கொலை
தற்கொலை

அதன் மூலம் ஹால் டிக்கெட் எடுத்துக்கொண்டனர். ஆனால், ஹரிஷ்மாவுக்கு ஒதுக்கப்பட்ட ஹால் டிக்கெட் ஐ.டி-யை அவர் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் புலம்பித் தவித்திருக்கிறார். இதனால், ஹரிஷ்மாவைத் திட்டிய அவரது தாய், தானும் அழுது புலம்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலிலிருந்த ஹரிஷ்மா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்திருக்கிறார். அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

`அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ்' - `நீட்'டுக்கு வளையாத தமிழக அரசு ஓட்டுக்கு வளைந்துவிட்டதா?

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, ஹரிஷ்மாவின் தந்தை கணேசன் கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறுகையில்,``ஹால் டிக்கெட் ஐடி-யைத் தொலைத்துவிட்டோமே, ஹால் டிக்கெட் கிடைக்காமல், தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நன்றாகப் படிக்கும் மற்றுமொரு மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்.

ஹரிஷ்மா
ஹரிஷ்மா

தொடர்ந்து அரசியல் கட்சியினர் உட்பட, கல்வி ஆர்வலர்கள் பலரும் நீட் தேர்வைத் தடை செய்ய வலியுறுத்திப் போராடிவருகிறோம். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. ஆவணத்தாங்கோட்டை மாணவருக்கு திருநெல்வேலியில் தேர்வு, அறந்தாங்கி மாணவருக்கு டெல்லியில் தேர்வு என மாணவர்களை அலைக்கழிக்கின்றனர். ஹரிஷ்மா வயிற்றுவலியால் இறந்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்து வழக்கை முடித்திருக்கிறார்கள். இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். மாணவர்களின் உயிரைக் கொல்லும் நீட் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு