Published:Updated:

“என் பொண்டாட்டி, புள்ளைக நல்லாருக்கணும் சார்...”

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகன்

வீல் சேரில் முடிந்த ‘கொள்ளையன்’ முருகனின் வாழ்க்கை!

‘போலீஸுக்குத்தான் கொள்ளைக்காரன். சொந்த ஊர் மக்களுக்கோ பரோபகாரி...’ பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டாலும், ஊருக்குள் சில உதவிகளைச் செய்து ‘காட்ஃபாதர்’போலத் தன்னைக் காட்டிக்கொண்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனைப் பற்றி இப்படித்தான் சொல்ல வேண்டும். தான் கொள்ளையடித்து மறைத்துவைத்த பல திருட்டுப்பொருள்கள், நகைகள் எங்கேயிருக்கின்றன என்பதை யாருக்கும் சொல்லாமலேயே, அக்டோபர் 26-ம் தேதி பெங்களூரு அரசு மருத்துவமனையில் மரணமடைந்த முருகனின் வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. பல்வேறு ஆளுயர வாயிற்கதவுகளையும் காம்பவுண்டுகளையும் அநாயாசமாகத் தாண்டி, திருட்டில் ‘ஹை ஜம்ப்’ அடித்த முருகன், தன் கடைசிக் காலத்தில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியும் படுக்கையுமாகத்தான் இருந்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீடு... ஏ.டி.எம்... வங்கி... நகைக்கடை...

கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழகம் என ஐந்து மாநிலக் காவல்துறையினருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த திருவாரூர் முருகனின் க்ரைமை மையப்படுத்தி, சில சினிமாக்களுக்குக் கதையே எழுதிவிடலாம். திருவாரூரில் சீராத்தோப்பு, பேபி டாக்கீஸ் ரோடுதான் முருகன் வசித்த ஏரியா. அந்தப் பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய தன் உறவினர்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறான்.

சிறு வயதில் குடும்பத்தினரோடு சாலை போடும் பணியில் ஈடுபட்டுவந்த முருகன், அப்போதே வீடுகள் புகுந்து சின்ன அளவில் திருடத் தொடங்கியிருக் கிறான். 2005-ல் பெங்களூரில்தான் முருகன்மீது முதன்முதலாகத் திருட்டு வழக்கு பதிவாகியிருக்கிறது. அதன் பிறகு, ஐந்து மாநிலங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. கடந்த 2008-ம் ஆண்டு திருவாரூரிலிருந்து சென்னை வந்த முருகன், பூந்தமல்லி, மதுரவாயல் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறான். குறுகியகாலத்தில் பெரிய ஆளாக மாற முடிவெடுத்தவன், அதன் பிறகு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கத் தொடங்கினான்.

ஏடிஎம் மையங்களில், காஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்தி இயந்திரத்தை உடைப்பதில் கில்லாடியாகி ‘ஏடிஎம் முருகன்’ என்று போலீஸ் மத்தியில் பிரபலமடைந்தான். ‘சினிமா தயாரித்து, நடிகைகளை நெருங்கிவிட வேண்டும்’ என்ற தன் ஆசைக்கு ஏடிஎம் போதாது என்று முடிவெடுத்த முருகனின் பார்வை வங்கிகள், நகைக்கடைகள்மீது விழுந்தது. சுவரில் துளைகளைப் போட்டு கொள்ளைகள் நடந்தாலே, அது முருகனின் ஸ்டைல் என போலீஸார் முடிவுசெய்தனர். ஆனால் முருகனை நேரில் பார்த்தால், ‘இவனா இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டான்?’ என்று தோன்றும். ஒல்லியான தேகம், ஓட்டைப்பல் எனப் பார்ப்பதற்கு ‘ஒண்ணும் தெரியாத அப்பாவி’ ரேஞ்சில் இருப்பான் முருகன்.

“என் பொண்டாட்டி, புள்ளைக நல்லாருக்கணும் சார்...”

நான்கு மொழிகள்... ஐந்து மாநிலங்கள்... குவிந்த லட்சங்கள்

தமிழகத்தில், சென்னை அண்ணாநகர் வீடுகள் கொள்ளை, திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை, சமயபுரம் வங்கிக் கொள்ளை ஆகிய வழக்குகள்தான் முருகன் குறித்துப் பரபரப்பாகப் பேசவைத்தன. ஐந்து மாநிலங்களில் முருகன் கைவரிசை காட்ட, அவனின் மொழியறிவும் ஒரு காரணம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் சரளமாகப் பேசுவான் முருகன். திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமுள்ள முருகன், அவற்றில் கொள்ளையடிக்கும் காட்சிகள் வந்தால் அதை உன்னிப்பாக கவனித்து, அந்த யுக்திகளைத் தன் கொள்ளையில் பயன்படுத்திக்கொள்வான்.

முருகனின் கையில் லட்சங்கள் புரளத் தொடங்கின. லைஃப் ஸ்டைலும் மாறியது. தன் பெயரிலும், தன் தாயார் பெயரிலும் இரண்டு சினிமா தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கினான். சினிமா வட்டாரத்தில் தன்னை ஒரு ஜுவல்லரி ஷாப் ஓனர் என்றே அறிமுகப்படுத்திக்கொள்ளும் முருகன், தனக்குப் பிடித்த நடிகைகளை ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்க நகைகளை அன்புப் பரிசாகக் கொடுப்பான்.

பெங்களூரில் மஞ்சு என்கிற மஞ்சுளாவைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டான். குழந்தை பிறக்காததால், ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இருவரைத் தத்தெடுத்திருக்கிறான். இரு குழந்தைகளும் மாற்றுத் திறனாளிகள் என்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தும் செய்தி. திருவாரூரில் தான் வசித்த பகுதியில் பெரிய வீடு ஒன்றைக் கட்ட வேண்டும்; தன் அம்மா பெயரில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட வேண்டும் என்ற இரு ஆசைகளும் முருகனுக்கு நிறைவேறவில்லை.

“என் பொண்டாட்டி, புள்ளைக நல்லாருக்கணும் சார்...”

சீக்ரெட் லைஃப்... ஒன் டைம் சிம் கார்டு... வாக்கி டாக்கி

முருகனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர் சொன்ன தகவல்கள் நம் வியப்பைக் கூட்டின.

‘‘தன் கூட்டாளிகள் யாரையும் முருகன் நம்ப மாட்டான். திருட்டுக் கும்பலில் சேர்பவர்களுக்கு முதலில் மாதச் சம்பளம்தான். சோதனைக் கட்டங்களைத் தாண்டிய பிறகு, நம்பிக்கை அடிப்படையில் தன் கும்பலில் சேர்த்துக் கொள்வான். அப்போதும்கூட யாரிடமும் தன் தனிப்பட்ட வாழ்க்கை, எங்கே செல்கிறான் என்பதையெல்லாம் பகிர்ந்துகொள்ள மாட்டான். ஒரு திருட்டுக்குப் பயன்படுத்தும் சிம் கார்டை, அந்தத் திருட்டு முடிந்த பிறகு தூக்கியெறிந்து விடுவான்.

காவல்துறையினரின் அன்றாடப் பணிகள் அனைத்தும் முருகனுக்கு அத்துப்படி. மதியம் 2 மணி முதல் 4 மணி வரை போலீஸார் சற்று ஓய்வெடுப்பதுண்டு. அந்த நேரத்தில்தான் கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போடுவான். திருடத் திட்டமிட்ட வீடுகளில் பழைய ஜெய்சங்கர் பட டெக்னிக்கைப் பயன்படுத்துவான். நோட்டீஸ் விநியோகிப்பவன்போலப் போய் பூட்டிக்கிடக்கும் அந்த வீடுகளின் கதவிடுக்கில், அந்த பிட் நோட்டீஸைச் சொருகி வைத்துவிடுவான். அந்தச் சமயத்தில், காரை எங்கே பார்க் செய்வது என்று தீர்மானித்துக்கொள்வான். இரவு 10 மணிக்கு முன் அந்தப் பகுதிக்குள் வந்துவிடுவான். காருக்குள் வாக்கி டாக்கியுடன் கூட்டாளி இருப்பான். ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸார், இரவு 10 மணி முதல் 1 மணி வரை வாகனச் சோதனைக்காக ஒரே இடத்தில் குவிந்திருப்பார்கள். அந்த நேரத்தில் பிட் நோட்டீஸ்வைத்த வீடுகளுக்குள் சென்று பார்க்கும் முருகன், கதவிடுக்கில் இருக்கும் நோட்டீஸ் விழாமல் இருப்பதைவைத்து வீட்டில் ஆளில்லை என்று உறுதிப்படுத்திக்கொள்வான். வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் முருகனுக்கு காரிலிருக்கும் கூட்டாளி வெளியில் நடக்கும் தகவலை `லைவ்’வாகச் சொல்வான்.

பார்க்கிங் செய்ய முருகன் தேர்ந்தெடுக்கும் இடம், அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவனையாகவே இருக்கும். பொதுவாக மருத்துவமனைக்குள் நிற்கும் வாகனங்களைச் சந்தேகக் கண்கொண்டு யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதே காரணம். சுற்றுலா செல்வதைப்போல கொள்ளையடிக்கும் இடத்துக்கு மனைவி, குழந்தைகள், கூட்டாளி களுடன் காரில் செல்வான். காரிலேயே தங்கி, பிளாட்பாரங்களில் சமைத்துச் சாப்பிட்டதும் உண்டு.

போலீஸில் மாட்டிக்கொண்டால், விசாரணை நடத்தும் போலீஸார் ஆதாரங்களுடன் கேட்டால் மட்டுமே நகைகள் எங்கே என்பதைச் சொல்வான். ஆதாரங்கள் இல்லையென்று தெரிந்தால், ‘தெரியாது’ என்ற ஒற்றை பதில் மட்டுமே முருகனிடமிருந்து கிடைக்கும். “என் கொள்ளையைப் பற்றி ஊரே பேச வேண்டும். அதற்காகத்தான் நான் கொள்ளையடிக்கிறேன்!” என்று முருகன் அனைத்து மாநில போலீஸாரிடமும் கூறியிருக்கிறான்’’ என்றார்.

“என் பொண்டாட்டி, புள்ளைக நல்லாருக்கணும் சார்...”

படுக்கையில் கழிந்த கடைசி நாள்கள்...

முருகனின் வழக்கறிஞர் ஹரி பாஸ்கரிடம் பேசினோம்... ‘‘போலீஸிடம் மாட்டிக்கொள்ளும்வரை தனக்கிருந்த உயிர்க்கொல்லி நோய்க்காகப் பல்வேறு உயர்ரக மருத்துவமனைகளில் சிகிச்சையெடுத்து வந்தார் முருகன். லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் தேடப்பட்ட அவர், 2019 அக்டோபரில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட அவரை, சில மாதங்களுக்கு முன் பக்கவாதம் தாக்க, வலது பக்கம் முழுவதும் செயலிழந்தது. உயிர்க்கொல்லி நோய்க்கும் சரிவர சிகிச்சை எடுக்காததால் உடலுறுப்புகளும் செயலிழந்தன. நானும் முருகனின் மனைவியும் சிகிச்சையிலிருந்த அவரிடம் வீடியோ காலில் பேசியபோது, ‘எனக்கப்புறம் என் பொண்டாட்டி, குழந்தைகளுக்கு என்ன தேவையோ செஞ்சு கொடுங்க சார். அவங்க நல்லாருக்கணும்’ என்று உருக்கமாகச் சொன்னது இன்னமும் எனக்குள் ஒலிக்கிறது’’ என்றார்.

பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறைக் கண்காணிப் பிலேயே இருந்த முருகன், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்தான். பெங்களூரு போலீஸாரால் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட உடல், திருவாரூரில் தகனம் செய்யப்பட்டது.

“திருச்சி, திருவெறும்பூரில் காவிரி மணலில் முருகனால் புதைத்துவைக்கப்பட்ட தங்க நகைகள்போல இன்னும் எத்தனை தங்கப் புதையல்கள் எங்கெங்கே புதைந்துகிடக் கின்றனவோ?!” என்று பெருமூச்சோடு பேசிக்கொண்டிருக்கிறது போலீஸ் வட்டாரம்.