Published:Updated:

`துண்டிக்கப்பட்ட தலை; எலும்புக்கூடாக கிணற்றில் மிதந்த மாணவி உடல்!’ - சேலத்தில் பயங்கரம்

2 மாதங்களுக்கு முன்பு மாயமான கல்லூரி மாணவி, கிணற்றில் எலும்புக்கூடாக மீட்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

சேலம் காரிப்பட்டியை அடுத்த மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவர் தன்னுடைய தோட்டத்தில் உள்ள கிணற்றை சுத்தம் செய்வதற்காக நேற்று தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது தலையில்லாத பெண் சடலம் ஒன்று சிதைந்து போய் எலும்புக்கூடாக கிணற்றில் மிதந்திருக்கிறது. இதனைப்பார்த்து அதிர்ந்துபோன காசி விஸ்வநாதன் உடனே காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த காரிப்பட்டி போலீஸார், கிணற்றில் எலும்புக் கூடாக மிதந்த அந்த பெண் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிணற்றில் சடலமாகக் கிடந்த பெண் யார்? என சம்பவ இடத்தில் விசாரணை செய்ததோடு, சுற்றுவட்டாரத்தில் பெண் காணாமல் போயுள்ளதாக ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரணையில் இறங்கினர்.

கிணற்றில் சடலமாக மிதந்த மாணவி உடல்
கிணற்றில் சடலமாக மிதந்த மாணவி உடல்

அதில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மின்னாம்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கண்மணி என்பவரது 19 வயது மகள் தித்மிலா மாயமாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒருவேளை கிணற்றில் சடலமாக மிதந்தது தித்மிலாவாக இருக்கலாம் எனக் கருதிய போலீஸார், தித்மிலாவின் பெற்றோரை வரவழைத்து சடலத்தைக் காட்டி விசாரித்துள்ளனர். தித்மிலா அணிந்திருந்த சுடிதாரை வைத்து, அது தங்களது மகள் தான் என பெற்றோர் கதறியிருக்கின்றனர்.

`இளைஞர் தலை துண்டித்துக் கொலை' - ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரம்!

விசாரணையில், ``சேலம் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த தித்மிலா, கொரோனா ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி பாட்டி வீட்டிற்கு போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியவர், வீடு திரும்பவில்லை. அப்போதே என்னுடைய மகளைக் காணவில்லை என காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம். எப்படியாவது என் மக கிடைச்சிடுவான்னு நினைச்சிட்டு இருந்தோமே!... இப்படி எலும்புக் கூடா அள்ளிட்டு வந்து கையில கொடுப்பாங்கன்னு நினைச்சுக் கூட பார்க்கலையே!’ என கண்ணீர் விட்டிருக்கின்றனர்.

கொலை
கொலை

தித்மிலா மாயமாகி இரண்டரை மாதத்திற்குப் பிறகு தலை இல்லாத நிலையில் எலும்புக் கூடாக மீட்கப்பட்டிருப்பது போலீஸாரையே அதிர வைத்திருக்கிறது. தித்மிலாவை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டுச் சென்றார்களா அல்லது தித்மிலாவே தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``முதற்கட்டமாக இறந்தது தித்மிலா தானா என்பதனை உறுதிசெய்யும் வகையில் மரபணு சோதனை நடத்தப்பட இருக்கிறது. சம்பந்தப்பட்ட கிணறு கடந்த பல மாதங்களாகவே தண்ணீரில்லாமல் தான் இருந்திருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் கிணற்றில் தண்ணீர் நிறைந்து, கிணற்றிலிருந்த சடலம் மிதந்து மேலே வந்திருக்கிறது. சடலம் கிணற்றிலேயே கிடந்ததால் தலை துண்டாகி தனியாக விழுந்திருக்கலாம். இளம்பெண்ணின் தலையைத் தேடும் பணி நடக்கிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் தித்மிலா எப்படி இறந்தார் என்பது தெரியவரும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு