Published:Updated:

சேலம்: `என்னோட முடிவுக்கு எஸ்.ஐ-தான் காரணம்!' - வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்த சாமியார்

சாமியார் சரவணன்
சாமியார் சரவணன்

`தேவூர் காவல் நிலைய எஸ்.ஐ அந்தோணி மைக்கேல், கடந்த 14-ம் தேதி சாமியார் சரவணனின் வீட்டுக்கு வந்து அடித்துத் துன்புறுத்தினார். அதையடுத்து சாமியார் சமூக வலைதளத்தில் தன் மனக் குமுறலைப் பதிவு செய்துவிட்டு காணாமல் போனார்.’

``எஸ்.ஐ அந்தோணி மைக்கேல், என்னை ரொம்ப அடிச்சு மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார். அதனால், என்னோட இந்த துரதிர்ஷ்ட முடிவுக்கு வேறு யாரும் காரணமில்லை; அந்தோணி மைக்கேல்தான் காரணம். அவர் அதிகார தோரணையில் எதை வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்கிறார். எப்படியாவது இந்த வீடியோவை எல்லா மக்களும் பார்க்கட்டும். அதிகாரத்திலிருக்கும் அத்தனை பேரையும் என் ஆன்மா இதுக்குமேல சும்மா விடாது.

என் சாபத்திலிருந்து நீ, உன்னோட குடும்பம் தப்பவே முடியாது. சிவன் மேல ஆணையாகச் சொல்கிறேன். என்னோட மனசு எப்படி பாடுபடும்... அப்பா உன்கிட்ட வரேன்ப்பா... சிவ சிவ... நமசிவாயா...’’ இப்படி ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துவிட்டு, எடப்பாடி அருகே ஒரு சாமியார் மரணமடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியார் சரவணன்
சாமியார் சரவணன்

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தேவூர் குண்டாங்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாமியார் சரவணன். இவரைக் கடந்த 15-ம் தேதியிலிருந்து காணவில்லை. அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில், நேற்று அவர் குடியிருப்புக்கு அருகேயுள்ள கரட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அதையடுத்து காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து சாமியார் சரவணனின் உறவினர் வடிவேல் நம்மிடம் கூறுகையில், ``சாமியார் சரவணன் எனக்கு மாமா முறை. அவருக்கு சுமார் 47 வயது இருக்கும். அவருடைய மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு கவிதா என்ற மகளும், சங்கர் என்ற மகனும் இருக்கிறார்கள். சரவணன் எப்போதும் காவி வேட்டி கட்டிக்கொண்டு தாடி வளர்த்துக்கொண்டிருப்பார். சாமியாடி, குறி சொல்லுவது, பேய் ஓட்டுவது என இருப்பார். வேறு எந்த வேலைக்கும் போக மாட்டார்.

அவர் வீட்டுக்குத் தண்ணீர்த் தொட்டி அமைக்க குழி வெட்டியிருக்கிறார்கள். அந்த இடத்துக்கு அருகில் ஒரு சிவன் போட்டோவைவைத்து, ருத்ராட்ச மாலையை வைத்துக் கொண்டு பேய் ஓட்டுவார். இவரைத் தேடி பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், தேவூர் காவல் நிலைய எஸ்.ஐ அந்தோணி மைக்கேல், கடந்த 14-ம் தேதி சாமியார் சரவணனின் வீட்டுக்கு வந்து அவரை அடித்துத் துன்புறுத்தினார். அதையடுத்து சாமியார் சமூக வலைதளத்தில், தன் மனக் குமுறலைப் பதிவு செய்துவிட்டு, காணாமல் போனார். நாங்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

சாமியார் சரவணன்
சாமியார் சரவணன்

இறுதியாக நேற்று அவர் வீட்டுக்கு அருகேயுள்ள கரட்டுப் பகுதியில் பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. அவரின் மரணத்துக்கு எஸ்.ஐ அந்தோணி மைக்கேல்தான் காரணம். சரவணனின் குழந்தைகள் தந்தையை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும். சாமியாரின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’’ என்றார்.

ஊட்டி: போலீஸ் ஸ்டேஷனில் டார்ச்சர்? - வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

இது குறித்து தேவூர் எஸ்.ஐ அந்தோணி மைக்கேலிடம் கேட்டோம். ``பெண்களைக் குழிக்குள்வைத்து நிர்வாண பூஜை செய்வதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதையடுத்து கடந்த 14-ம் தேதி அந்தப் பகுதிக்குச் சென்றேன். அங்கே ஒரு மறைவான இடத்தில் பறிக்கப்பட்டிருந்த குழிக்குள் குமாரபாளையத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சாமியார் சரவணனும் உட்கார்ந்திருந்தார்கள். மூன்று பேரும் தள்ளாடும் அளவுக்கு மது போதையில் இருந்தார்கள்.

பூஜை செய்யும் குழி
பூஜை செய்யும் குழி

கணவருக்குத் தெரியாமல் பேய் ஓட்டுவதற்காக வந்ததாக அந்தப் பெண்கள் தெரிவித்தார்கள். ` `சரக்கு அடித்தால் பேய் போய்விடும். இல்லையென்றால், பேய் உங்களைக் கொன்று விடும்’ என்ரு சாமியார் வற்புறுத்தியதால் குடித்தோம்' என்றார்கள் அந்தப் பெண்கள். பிறகு சாமியாரிடம், `நாளையிலிருந்து பெண்களைத் தனிமையில் குழிக்குள் அமரவைத்து பூஜை செய்யக் கூடாது. தாடியைச் சவரம் செய்துவிட்டு, வேலைக்குப் போக வேண்டும். தவறான செயலில் ஈடுபடக் கூடாது’ என்று கூறிவிட்டு வந்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

போலீஸ் துன்புறுத்தலால் சாமியார் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு, சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு