Published:Updated:

`கொள்கைகளில் உறுதி; பத்திரிகை உலகில் 35 ஆண்டுகள்!’ - மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் காலமானார்

இரா. ஜவஹர்

விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்த ஜூனியர் போஸ்ட் உள்பட பல முன்னணிப் பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் இன்று (மே 28) இயற்கை எய்தினார்.

`கொள்கைகளில் உறுதி; பத்திரிகை உலகில் 35 ஆண்டுகள்!’ - மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் காலமானார்

விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்த ஜூனியர் போஸ்ட் உள்பட பல முன்னணிப் பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் இன்று (மே 28) இயற்கை எய்தினார்.

Published:Updated:
இரா. ஜவஹர்

மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட இரா.ஜவஹர், இளம் வயதிலேயே சென்னையில் குடியேறிவிட்டார். எழுத்தின் மீதான ஆர்வத்தால், 1977-ம் ஆண்டு பத்திரிகை பணியில் சேர்ந்தார். தினமணி, ஜூனியர் போஸ்ட், தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், 35 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர்.

இரா. ஜவஹர்
இரா. ஜவஹர்

இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் விளங்கினார். கம்யூனிஸ்ட் கொள்கைகளில் உறுதிமிக்கவரான அவர், கொள்கையில் துளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில் உறுதியுடன் இருந்த காரணத்தால், பத்திரிகை துறையில் பல முக்கிய வாய்ப்புகளை இழந்தவர். அவரின் மனைவி சம்பூரணம் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தார். இவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாகவே உயிரிழந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை கொட்டிவாக்கம் பத்திரிகையாளர்கள் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் இரா.ஜவஹரை ஓராண்டுக்கு முன்பாக சந்தித்தேன். தனது 35 ஆண்டு கால பத்திரிகையுலக அனுபவங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். குறிப்பாக, விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்த ‘ஜூனியர் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றிய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

“புலனாய்வுக்கு ‘ஜூனியர் விகடன், பொழுதுபோக்குக்கு ‘ஆனந்தவிகடன்’, அறிவுத் தளத்துக்கு ‘ ஜூனியர் போஸ்ட்’என்று விகடன் குழுமத்தின் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் சொல்வார். அவர், எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து நன்றாக ஊக்குவித்தார். ஜூனியர் போஸ்ட்டின் எடிட்டராக ஞாநி இருந்தார். நான், சப் எடிட்டர். கட்டுரைகளுக்கான ஆதாரங்களைத் தேடி அலைவது, இரவுபகலாக எழுதுவது என்று இருப்பேன். பகலும் இரவும் உற்சாகமாக வேலைபார்ப்போம்.

இரா. ஜவஹர்
இரா. ஜவஹர்

நிறைய புத்தகங்களை வாசித்துக் குறிப்பெடுத்து கட்டுரை எழுதுவது என் வழக்கம். அந்த மாதிரி ஆய்வுகள் செய்து நிறைய கட்டுரைகள் எழுதினேன். பெரும்பாலும், என் கட்டுரைகள்தான் கவர் ஸ்டோரியாக வெளிவரும். அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், சட்டம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பாக எழுதினேன். அதற்கு முன்பாக பல பத்திரிகைகளில் நான் பணியாற்றியிருந்தாலும், இரா.ஜவஹர் என்ற பெயர் ஜூனியர் போஸ்ட் மூலமாகத்தான் பிரபலமானது.

ஜூனியர் போஸ்ட்டில் நான் பணியாற்றிய காலத்தில்தான், தி.மு.க-வுக்குள் வைகோ பிரச்னை வளர்ந்துவந்தது. பெரும்பாலான பத்திரிகைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கலைஞரைத் தாக்கி எழுதின. ‘ஸ்டாலினை ஊக்குவிக்கிறார், வைகோவை மட்டம்தட்டுகிறார்’ என்று எழுதினார்கள். இதனால் கலைஞர், ‘தன்னுடைய கருத்துக்களை சரியான முறையில் பத்திரிகைகள் பிரசுரிக்கவில்லை; எதிரான கருத்துகளைத்தான் பிரசுரிக்கிறார்கள்’ என்ற கோபத்தில் இருந்தார்.

ஒரு கட்டத்தில், ‘இனி பேட்டியே கொடுக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். எனக்குத் தெரிந்து கலைஞர் தன் வாழ்க்கையில், பேட்டி தரமாட்டேன் என்று நிறுத்தியது அதுதான் முதலும் கடைசியும். ஏறத்தாழ ஒரு மாதம், பிரஸ்மீட்டே இல்லை. வழியில் பார்த்து யாராவது கேள்விகேட்டாலும், இல்லை என்று சைகையாலேயே சொல்லிவிட்டுப் போய்விடுவார். டெல்லியில் இருந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா உட்பட பல பத்திரிகைகள் அவருடைய பேட்டிக்கு முயற்சி செய்தன. முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

இரா. ஜவஹர்
இரா. ஜவஹர்

‘கலைஞர் பேட்டிக்கு நான் முயற்சிசெய்து பார்க்கவா?’ என்று ஞாநியிடம் கேட்டேன். ‘சரி’ என்றார். குத்தூசி சார் மூலமாக கலைஞரிடம் கேட்டேன். ‘வரச்சொல்லுங்கள்’ என்று கலைஞர் சொல்லிவிட்டார். நான் போனதும், ’என்ன விஷயம்?’ என்றார். ‘பேட்டி வேண்டும்’ என்றேன். ‘நான்தான் பேட்டி தரமாட்டேன்னு சொல்லிட்டேனே’ என்றார். ‘உங்களுக்கு எதிரான கருத்துகள் எல்லாம் பத்திரிகைகளில் வருது. உங்கள் தரப்பு வாதங்கள் என்ன என்பது பொதுமக்களுக்கத் தெரியாது. அதுவும் சேர்ந்துபோனால்தானே நல்லது’ என்று சொன்னேன். ‘பேட்டி வேண்டாம். சும்மா பேசிக்கொண்டிருப்போம்’ என்றார். ‘சரி’ என்று டேப்ரெக்கார்டரை எடுத்து டேபிளில் வைத்தேன்.

‘பேட்டியே வேண்டாம் என்கிறேன். டேப்ரெக்கார்டரை வைக்கிறீங்க?’ என்றார். ‘நீங்க பேசுங்க. பேட்டியைப் போடுறதா, இல்லையா என்பதை அப்புறம் சொல்லுங்க. அப்படியே செய்யுறேன்’ என்று சொல்லிவிட்டு, கேள்விகள் கேட்டேன். எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். ஜூனியர் போஸ்டில் இரண்டு வாரங்கள் கலைஞர் பேட்டி வந்தது. பல பத்திரிகைகள் அந்தப் பேட்டியை எடுத்துப் பிரசுரித்தன.

1992, 1993 ஆண்டுகளில் ஜூனியர் போஸ்ட்டில் பணியாற்றினேன். அங்கு, இரண்டு ஆண்டுகள் கான்ட்ராக்ட் முடிந்தது. அந்த சமயத்தில், தினமணி நாளிதழில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனைச் சந்தித்து, ‘உங்களோட குட்விஷஸ் வேண்டும்’ என்று சொன்னேன். உடனே அவர், ‘பெஸ்ட் விஷஸ்’ என்று என்னை அன்போடு வாழ்த்தி அனுப்பினார்...” என ஜூனியர் போஸ்ட்டில் பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்த முக்கியமான தருணங்களை இரா.ஜவஹர் பகிர்ந்துகொண்டார்.

இரா. ஜவஹர்
இரா. ஜவஹர்

1971-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகப் பணியாற்றத் தொடங்கிய இரா.ஜவஹர், சென்னை அம்பத்தூர் பகுதியில் தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். 1977-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகுதான், பத்திரிகைத்துறையில் நுழைந்தார். கம்யூனிசம் தொடர்பாக எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் ‘கம்யூனிசம்: நேற்று இன்று நாளை’என்று தலைப்பில் அவர் எழுதியிருக்கும் நூல் முற்போக்கு வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

இப்படி பத்திரிகை உலகில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் இன்று (மே 28) இயற்கை எய்தினார்.