Published:Updated:

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்!

சுதாங்கன்
சுதாங்கன்

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை (செப்.12) காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுதாங்கன். இளம் வயதிலேயே வாசிப்பு மற்றும் எழுத்து மீது ஆர்வம் கொண்ட சுதாங்கன், படிக்கிற காலத்தில் ’வானவில்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். பி.யூ.சி படித்துவிட்டு சென்னைக்கு வந்தார். 1978-ம் ஆண்டு ‘திசைகள்’ வார இதழிலில் எழுதத் தொடங்கியதன் மூலம் பத்திரிகைத் துறையில் அடியெடுத்துவைத்தவர். இவரது இயற்ப்பெயர் ரங்கராஜன். ‘திசைகள்’ இதழில் ஆறு மாதங்கள் பணியாற்றினார்.

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்!

‘திசைகள்’ பணிக்குப் பிறகு, சில காலம் ‘குமுதம்’ இதழில் ஃப்ரீலான்ஸராக எழுதிவந்தார். பின்னர், ‘ஜூனியர் விகடன்’ இதழில் நிருபராகச் சேர்ந்தார். அப்போது, புதுமையான ‘ரிப்போர்ட்டிங்’ முறைகளை அறிமுகப்படுத்தினார். தலைமைச்செயலகம், கட்சிகளின் தலைமை அலுவலகங்கள், மேல்மட்ட அரசியல் ஆகியவற்றை சுற்றியே இருந்த செய்தி முறையை மாற்றி, அரசியல் மற்றும் அரசாங்கத்தில் கீழ்மட்ட அளவிலும் என்ன நடக்கிறது என்பதை செய்தியாக்கும் முறையைக் கொண்டுவந்தார். 1992-ம் ஆண்டுவரை, ஜூனியர் விகடனின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர், ‘தினமணி’ நாளிதழில் இணைந்து அதன் ஆசிரியர் பொறுப்பை வகித்தார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சிகள் தோன்றிய பிறகு, அச்சு ஊடகத்திலிருந்து காட்சி ஊடகத்தில் காலடியெடுத்துவைத்த சுதாங்கன், ‘மின் பிம்பங்கள்’ நிறுவனத்தில் இணைந்து தேர்தல் மற்றும் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் நெறியாளராக இருந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். ஜெயா தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ‘ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் விருதைப் பெற்றவர். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே அளவுக்கு சினிமா மீதும் இலக்கியம் மீதும் நாட்டம் கொண்டவர். 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர் கதை எழுதியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் ஒரு பதிவாக ‘சுட்டாச்சு.. சுட்டாச்சு’ என்ற தொடரை தினமணி கதிரில் எழுதி, அது நூலாக வெளிவந்துள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘அந்திமந்தாரை’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஆகாஷ் என்கிற மகன் இருக்கிறார். சுதாங்கனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு