Published:Updated:

`இதயங்கள் சுக்குநூறாக உடைந்துவிட்டன!'- சீக்கிய அதிகாரி சந்தீப் சிங்குக்காக வருந்தும் ஹூஸ்டன் மக்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த காவல்துறை அதிகாரி சந்தீப் சிங் தலிவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Sandeep Singh Dhaliwal
Sandeep Singh Dhaliwal

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் சந்தீப் சிங் தலிவால். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2015-ம் ஆண்டு முதல் டெக்சாஸ் காவல்துறையில் பணியாற்றி வந்தார். டெக்சாஸின் முதல் சீக்கிய காவல் அதிகாரி என்ற பெருமைக்குரியவர். டர்பன் மற்றும் தாடியுடன் இவர் காவல்துறையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். இதனால் இவருக்கு நட்பு வட்டம் அதிகம். பெருமையுடன் இந்தப்பணியை செய்துவந்தார்.

Sandeep Singh Dhaliwal
Sandeep Singh Dhaliwal

ஹூஸ்டன் நகரில் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொன்டார். பின்னர் அங்கிருந்து தனது வாகனத்தை நோக்கி திரும்பி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய நபர் சந்தீப் சிங் தலிவாலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்தது. சாலையிலே தலிவால் சரிந்து விழுந்தார். துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனடியாக இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தலிவால் பரிதாபமாக உயிரிழந்தார்.

சந்தீப் சிங்கை மீது துப்பாக்கி சூடு நடத்திய ராபர்ட் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் முன்னாள் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தீப் சிங் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் தலிவால் அந்த நபரிடம் விசாரனை மேற்கொள்கிறார். இருவரிடமும் பெரிதாக எந்த வாக்குவாதமும் இல்லை. தலிவால் தனது வாகனத்தை நோக்கி நடந்து வருகிறார். காரில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அதில் பதிவாகியுள்ளது.

Sandeep Singh Dhaliwal
Sandeep Singh Dhaliwal

“சந்தீப் சிங் தலிவால் கலகலப்பான மனிதர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். காது கேளாத என் மகனுக்கு ஒரு பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்தினார்” என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தீப் சிங் தலிவாலுக்கு இப்படி நடக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. எங்கள் இதயங்கள் சுக்கு நூறாக உடைந்து விட்டது. எங்களது வருத்தத்தை பதிவு செய்ய வார்த்தைகளே இல்லை. என சக காவல்துறையினர் தங்களது வருத்ததை பதிவு செய்துள்ளனர்.