செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகேயுள்ள சாஸ்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். லாரி ஓட்டுநரான இவரின் மகன் பெயர் பிரதீப் (6). மணிகண்டன் நேற்று மாலை தன் வீட்டுக்குக் குடிநீர் பிடிக்க அருகிலுள்ள வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்துக்குத் தன்னுடைய மகனுடன் பைக்கில் சென்றிருக்கிறார்.
மணிகண்டன் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த மகனை திடீரென காணவில்லை. அதனால், மணிகண்டன் பதறியடித்துக்கொண்டு அருகில் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் பிரதீப் அங்கே மூடப்படாமல் கிடந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியுடன் தன் மகனை மீட்டவர், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.
அங்கு சிறுவன் பிரதீப்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலூர் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுவன் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வெங்கடாபுரம், ஊராட்சி மன்றச் செயலாளர், டேங்க் ஆபரேட்டர் ஆகிய இருவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.