ஊர்க்கட்டுப்பாடு; ஒதுக்கப்பட்ட குடும்பம்! -தாயின் சடலத்தை வீட்டின் அருகில் புதைத்த மகன்

'தாயின் இறுதிச் சடங்குக்கு யாரும் வரமாட்டார்கள். தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கமாட்டார்கள் ' என நினைத்திருக்கிறார் பழனிவேல்.
நாகை மாவட்டம் பூங்குடி கிராமத்தில், இறந்த தாயின் சடலத்தை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் தோட்டத்திலேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பூங்குடி கிராமம் உள்ளது. இங்கு வசித்த முருகேசன் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் மனைவி பேபி (வயது 80). தனியே குடிசை வீட்டில் வசித்து வந்தார். பக்கத்திலேயே கூலித் தொழிலாளியான மகன் பழனிவேல் தன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சென்ற வருடம் பழனிவேலின் மகள் மகாலட்சுமியைப் பக்கத்து கிராமமான சென்னியநல்லூரைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் காதல் திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். மாற்று இனத்தைச் சேர்ந்தவரை பழனிவேலின் மகள் திருமணம் செய்துகொண்டு சென்றதால் பூங்குடி கிராமப் பஞ்சாயத்தினர் பழனிவேலின் குடும்பத்தினரைப் புறக்கணித்து, ஊரைவிட்டே விலக்கி வைத்தனர்.
பழனிவேல் குடும்பத்தில் நடைபெறும் எந்த விசேஷங்களிலும் கிராம மக்கள் கலந்துகொள்வதில்லை. ஊர்க் கட்டுப்பாடு காரணமாக பழனிவேல் குடும்பத்தினருடன் யாரும் பேசுவதில்லை. இதனால் பழனிவேல் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த 6 மாதகாலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பழனிவேலின் தாய் பேபி, உடல் நலனின்றிக் கடந்த 19 -ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் இறந்திருக்கிறார். 'தாயின் இறுதிச் சடங்குக்கு யாரும் வரமாட்டார்கள். தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கமாட்டார்கள் ' என்று எண்ணிய பழனிவேல் வேறு ஏதும் செய்வதறியாது வீட்டுக்குப் பக்கத்திலேயே மனைவி சாந்தாவின் உதவியுடன் குழித் தோண்டி பொழுது விடிவதற்குள் தாய் பேபியைப் புதைத்துவிட்டார்.

இதனை அறிந்த கிராமத்தினர், கொள்ளிடம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீஸார் பழனிவேலிடம் விசாரணை நடத்தினர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ``ஊர்க் கட்டுப்பாடு காரணமாகவே பழனிவேல் இக்காரியத்தைச் செய்துள்ளார். மயானத்தில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று கிராமத்தினர் கூறுகிறார்கள். பேபி இயற்கையாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்றும் தெரியவேண்டும். எனவே, சீர்காழி தாசில்தார் முன்னிலையில் பேபியின் உடலைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனைக்குப்பின் மயானத்தில் அடக்கம் செய்யப்படும் " என்றனர்.