Published:Updated:

`இறுதிச் சடங்குக்குப் பணமில்லை!' -குப்பைத்தொட்டியில் தாயின் சடலத்தை வீசிய மகன்; தூத்துக்குடி சோகம்

இறுதிச்சடங்குக்குப் பணம் இல்லாததால் பெற்ற தாயின் உடலைக் குப்பைத்தொட்டியில் மகனே வீசிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் சடலம்
தாயின் சடலம்

தூத்துக்குடி மாவட்டம், தனசேகரன் நகர் பகுதியின் பிரதான சாலையில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் வயதான ஒரு பெண் சடலம் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் மற்றும் போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்தப் பெண் அதே பகுதியைச் சேர்ந்த முத்து லெட்சுமணன் என்பவரின் தாய் வசந்தி என்பது தெரியவந்தது.

சடலம் கிடந்த குப்பைத் தொட்டி
சடலம் கிடந்த குப்பைத் தொட்டி

முத்து லட்சுமணன் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்து வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் இவரின் தந்தை நாராயணசாமி சென்னையில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். உடல்நலக்குறைவான தன்னுடைய தாய் வசந்தியுடன் தனசேகரன் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் முத்து லட்சுமணன்.

இந்நிலையில், தாய் உயிரிழக்கவே, அவரைக் குளிப்பாட்டி சேலை அணிவித்து, பொட்டுவைத்து சடங்குகளைச் செய்துள்ளார். ஆனால், தாயை அடக்கம் செய்யக்கூட வழியில்லாத நிலையில் இரவோடு இரவாக அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அதிகாலையில் பூஜை செய்வதற்காகப் பாளையங்கோட்டைக்குச் சென்றுவிட்டார். அதிகாலையில் நடைப்பயிற்சிக்காகச் சென்றவர்கள், சடலத்தைக் கண்டதும் போலீஸாருக்குத் தகவல் கூறியுள்ளனர்.

ஹோட்டல் இடிப்பு; சோடா பாட்டில் வீச்சு! - கோவை அன்னபூர்ணா குழுமத்தோடு மோதிய கே.ஜி நிர்வாகம்

போலீஸாரிடம் முத்து லட்சுமணன் அளித்த வாக்குமூலத்தில், `வீட்டுக்கு நான் ஒரே பையன். அர்ச்சகர் வேலையில் கிடைக்கிற வருமானத்துல குடும்பத்தை நடத்த முடியலை. அதனால, மயிலாப்பூர்ல இருக்கிற முதியோர் இல்லத்துல அப்பாவை சேர்த்துட்டேன். அம்மாவோடு நான் இங்க இருந்தேன். ஒரு வருஷமாவே நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாத்தான் அவங்க இருந்தாங்க. ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தேன். ஆனாலும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்ல.

இந்த நிலையில, எட்டயபுரத்துல ஒரு கோயில் திருவிழாவில் அர்ச்சகர் வேலைக்காகப் போனேன். இரவு வந்து பார்த்தபோது அம்மா இறந்த நிலையில கிடந்தாங்க. அழுகையை அடக்க முடியலை. கூடப் பொறந்தவங்களும் யாரும் இல்ல. சொந்தக்காரங்க உதவியும் இல்லை. அதனால மனசைக் கல்லாக்கிட்டு அம்மாவைக் குளிப்பாட்டி, சேலைகட்டி பொட்டு வச்சு பெட்ஷீட்ல சுத்தி வீட்டுப் பக்கத்துல உள்ள இரும்பு குப்பைத் தொட்டிக்குள்ள போட்டுட்டேன். எனக்கு வேற வழி தெரியலை' எனக் கூறியிருக்கிறார்.

குப்பைத் தொட்டி
குப்பைத் தொட்டி

வசந்தியின் இறுதிச் சடங்குக்குப் பணம் தருவதாகப் போலீஸார் கூறிய நிலையில், முத்து லட்சுமணன் சார்ந்த சமுதாய சங்கமே உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ளது. இதையடுத்து, வசந்தியின் உடல் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியாக, தூத்துக்குடி மையவாடியில் வசந்தியின் சடலம் எரியூட்டப்பட்டது.