Published:Updated:

பெயரற்ற ஒற்றை மனிதரின் மரணம்!

பூர்வகுடி
பிரீமியம் ஸ்டோரி
பூர்வகுடி

பூர்வகுடிகளின் பாதுகாப்பு அமைப்பான ஃபுனாய், பிரேசிலில் தனிமையில் வாழும் 114 பூர்வகுடிக் குழுக்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார்கள்.

பெயரற்ற ஒற்றை மனிதரின் மரணம்!

பூர்வகுடிகளின் பாதுகாப்பு அமைப்பான ஃபுனாய், பிரேசிலில் தனிமையில் வாழும் 114 பூர்வகுடிக் குழுக்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார்கள்.

Published:Updated:
பூர்வகுடி
பிரீமியம் ஸ்டோரி
பூர்வகுடி

ஒருவர் இறந்துபோயிருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் அன்றாட நிகழ்வுகளுக்கு மத்தியில் ஓர் உயிரின் இழப்பு நம்மைப் பெரிதாய் என்ன செய்துவிடும்? பிரேசிலில் யாரோ ஒருவர் இறப்பதற்கும், நமக்கும் என்ன தொடர்பு?

இப்போது இறந்துபோன மனிதருக்குப் பெயர்கூட கிடையாது. பெயர் இல்லாமல் இல்லை. செடி கொடிகளைப் போல, அவருக்கு அவர் குழுவில் என்ன பெயர் வைத்தார்கள் என்பதை நம்மால் அறிய முடியாததால், அவர் ‘The Man of the Hole’ என்றே பதிவுகளில் குறிப்பிடப்பட்டு வந்தார். பிரேசிலின் ரொண்டோனியா மாநிலத்தில் இருக்கக்கூடிய 8,000 ஹெக்டேர் காடுகளின் சொந்தக்காரர்கள் இந்த நபரின் மூதாதையர்கள். அதைவிடவும் அதிக நிலப்பரப்பில் அவர்கள் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் அவர்கள்தான் என்பதை ஒருபோதும் அறியாதவர்கள். இவருடன் இருந்தவர்களை இங்கிருந்து வெளியேற்ற 50 ஆண்டுகளுக்கு முன்பு, விஷம் தோய்க்கப்பட்ட சர்க்கரையை உணவாகக் கொடுத்திருக்கிறது மனித சமூகம். அதன்பிறகு 1990-களில் இவருடன் இருந்த ஆறு பேரையும் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அந்த நிலங்களை அபகரிக்கும் பேராசையே காரணம். இந்த 8,000 ஹெக்டேர்களைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மனிதர்கள் விவசாயம் செய்துவருகிறார்கள். மரங்களால் திகட்டத் திகட்ட நிரப்பப்பட்டிருந்த அந்த டனாரு நிலப்பரப்பைத் தற்போது மனிதன், கால்நடைகளின் தீவனத்துக்காகப் பயன்படுத்திவருகிறான்.

பெயரற்ற ஒற்றை மனிதரின் மரணம்!

உலகின் பழங்குடி இனங்கள் இப்படித்தான் அழிந்து கொண்டிருக்கின்றன. ‘பட்டாம் பூச்சியின் சிறகசைவுகள்கூட சுனாமிக்குக் காரணமாய் இருந்திருக்கலாம்’ என்பது மாதிரியான கேயாஸ் தியரி எல்லாம் இல்லை. அதிகாரப்பசியில் மனிதர்கள் அனுதினமும் செய்யும் நாச வேலைகளின் பலியாடுகள்தான் அந்தந்த நிலத்தின் பூர்வகுடிகள். ஏனெனில் அவர்களுக்குத் தேசம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ‘எங்கெல்லாம் பூர்வகுடி நிலங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று பொருள்’ என்கிற குரூர வசனத்துக்குச் சொந்தக்காரர் பிரேசில் அதிபர் போல்ஸோநரோ. பூர்வகுடிகள் தனித்து வாழ இடம் வேண்டும் என்பதே பொருளாதார வளர்ச்சிக்கான தடைக்கல் என்பது அவரின் வாதம். பூர்வகுடிகள் குறித்த சட்டங்கள், அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமைப்புகள் எல்லாவற்றின் நிதிகளிலும் கைவைத்திருக்கிறார் போல்ஸோநரோ.

பூர்வகுடிகளின் பாதுகாப்பு அமைப்பான ஃபுனாய், பிரேசிலில் தனிமையில் வாழும் 114 பூர்வகுடிக் குழுக்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார்கள். ஆனால், 28 குழுக்களைத்தான் அவர்களாலேயே கண்டறிய முடிந்திருக்கிறது. அதனால், பிற குழுக்களுக்கு அரசிடமிருந்து எவ்வித உதவிகளும் வராது. அவர்கள் அழிந்தே போயிருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் யாருக்கும் குற்றவுணர்ச்சி இருக்காது.

பெயரற்ற ஒற்றை மனிதரின் மரணம்!

இப்போது இறந்துபோயிருக்கும் இந்தப் பெயரற்ற மனிதரிடம், ஃபுனாய் அமைப்பின் அதிகாரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசுவதற்காக சோளத்தையும் சில அம்புகளையும் கொடுத்திருக்கிறார். மனிதர்களைப் பார்த்துப் பதறிப்போன அவர், அங்கிருந்து மூர்க்கமாகக் கிளம்பிவிட்டார். அதன்பின் அந்த நிலப்பரப்பில் ஐம்பது குடிசைகளுக்கு மேல் கட்டியிருக்கிறார். எல்லாக் குடிசைகளிலும் தவறாமல் 10 அடி அளவுக்கான குழிகளை உண்டாக்கி வைத்திருப்பாராம். ஃபுனாய் அமைப்பைச் சேர்ந்தவர்களோ, பிரேசிலிய மீடியாவோ இவரைக் கண்காணிப்பது தெரிந்தால், அந்தக் குழிகளுக்குள் பதுங்கிக்கொள்வார். அவை வெறும் பதுங்குகுழிகள் அல்ல. சில குழிகளை வேட்டைக்காகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரின் வயதுகூட புதிர்தான். அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள். அதைவிடவும் பெரிய புதிர், அவர் உடலைச் சுற்றி மக்காவ் பறவையின் இறகுகளைச் சுமந்து வந்து வைத்திருக்கிறார். ஒருவேளை, இறப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்துபோய் மடிந்திருக்கலாம். ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்டாமியின் ‘டேஸ்ட் ஆஃப் செர்ரி' படத்தில் ஒரு நடுத்தர வயதினன், இறந்தபின் தன் மீது மண்ணைப்போட ஒருவனைத் தேடி டெஹ்ரான் நகர வீதிகளில் அலைந்துகொண்டிருப்பான். அப்படிக்கூட இந்த நபருக்கு யாரும் இல்லை என்பதால், அவர் அப்படியே காத்திருந்திருக்கக்கூடும். அவர் கட்டி வைத்திருந்த மூங்கில் குடிசைகளுக்கு அருகிலேயே அவர் உடலைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

பெயரற்ற ஒற்றை மனிதரின் மரணம்!

இந்தப் பூர்வகுடி நடத்தி வந்தது ஓர் ஒத்துழையாமை இயக்கம். மனிதர்களின் தொந்தரவு இல்லாமல், மனிதர்களுடன் பேசாமல் தன்னால் தனித்திருக்க முடியும் என இந்த உலகுக்குக் காட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்திருக்கிறார். வளர்ச்சி என்னும் பெயரில் தன்னுடைய நிலம் சுரண்டப்பட்டபோது, கனடாவின் பூர்வகுடியான செத் கார்டினல் தன் நீண்ட முடியை அதே இடத்தில் அறுத்துவிட்டுக் கிளம்பினார். அவர் வாழ்ந்த அந்த நிலப்பரப்பை, ஆறு ஆண்டுகளாக சாலை அமைக்க அனுதினமும் துளையிட்டது செத் கார்டினலுக்கு சம்பந்தமேயில்லாத ஒரு அரசாங்கம். செத் கார்டினலுக்காவது பேசுவதற்கு வார்த்தைகள் இருந்தன. பிரேசிலின் குழிகளில் வாழ்ந்த பூர்வகுடிக்கோ அதுவும் இல்லை. அந்த நிலப்பரப்பு முழுக்க, அவர் விட்டுச் சென்றிருக்கும் பத்தடி குழிகளில் அவர் காற்றுடன் பேசிய வார்த்தைகள் நிரப்பப்பட்டிருக்கலாம்.