Published:Updated:

`வகுப்பறையில் ஏற்பட்ட காயம்; அலட்சிய ஆசிரியர்கள்!’- 5ம் வகுப்பு சிறுமியின் உயிரைப் பறித்த பாம்பு

'பாம்பு கடித்துவிட்டது' என மாணவி கூறிய பிறகும் ஆசிரியர்கள் அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவில்லை. ஆசிரியர்கள் சொந்தமாக கார் வைத்திருந்தும் மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முன்வரவில்லை.

மாணவி ஷஹ்ல ஷெரின்
மாணவி ஷஹ்ல ஷெரின்

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் புத்தன்குந்நு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல்லா சீஸ்-ஷஜினா தம்பதியின் மகள், ஷஹ்லா ஷெரின். ஷஹ்லா ஷெரின், சுல்தான் பத்தேரி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று மாலை வகுப்பறையில் பெஞ்சில் இருக்கும்போது, காலில் ஏதோ கடித்துள்ளது. வலியால் துடித்த ஷஹ்லா ஷெரின், அதுகுறித்து ஆசிரியரிடம் கூறியுள்ளார். காலில் இரண்டு இடங்களில் ஆணி குத்தியதுபோன்ற காயம் ஏற்பட்டிருந்தது. ஷஹ்லா ஷெரின் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகே தரையில் பெரிய பொந்து இருந்துள்ளது. எனவே, பொந்தில் காலைப் போட்டதால் அவரது காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றனர் ஆசிரியர்கள். மேலும், உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

அப்துல்லா சீஸ்
அப்துல்லா சீஸ்

மாணவியின் தந்தை வந்தபிறகு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். கால் நீல நிறமாக மாறியதால், அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி கூறியுள்ளனர். அரசு தாலுகா மருத்துவமனைக்கு மாணவியைக் கொண்டுசென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் மாணவியை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி கூறியுள்ளனர். கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மாணவியை சோதனை செய்துவிட்டு, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளியில் பாம்பு புகுந்து மாணவியைத் தீண்டிய சம்பவம் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. வகுப்பறைக்குள் காலில் செருப்பு அணியக்கூடாது என ஆசிரியர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும், செருப்பு அணிந்திருந்தால் மாணவியின் காலில் பாம்பு கடித்திருக்காது எனவும் ஷஹ்லா ஷெரினின் உடன் பயின்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர். பாம்பு கடித்தது என மாணவி கூறிய பிறகும் ஆசிரியர்கள் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. சில ஆசிரியர்கள் பள்ளிக்கு காரில் வந்திருந்தார்கள். சொந்தமாக கார் வைத்திருந்தும் மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல அவர்கள் முன்வரவில்லை என்றும் மாணவிகள் குற்றம் சாட்டினர்.

அமைச்சர் ரவீந்திரநாத்
அமைச்சர் ரவீந்திரநாத்

ஷஹ்லா ஷெரினின் தந்தை அப்துல்லா சீஸ் கூறுகையில், "என் மகளை மாலை 3 மணிக்கு பாம்பு கடித்திருக்கிறது. எனக்கு 3.36 மணிக்கு தகவல் சொன்னார்கள். பாம்பு கடித்தது என்று சொல்லவில்லை. குழியில் காலை போட்டுவிட்டாள் என்றார்கள். நான் வந்தபிறகு, மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால் போதும் என நான் கூறவில்லை. இதுபோல இனி ஒரு குழந்தைக்கும் நடக்கக்கூடாது" என்றார் கண்ணீர் சிந்தியபடி.

இதுகுறித்து கேரள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் கூறும்போது, "மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆசிரியர் தாமதப்படுத்தியதுதான் மரணத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாம்பு கடித்தது எனத் தெரிந்த பிறகும் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது குற்றமாகும். முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் சிஜில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவி மரணத்திற்கு வேறுயாரேனும் காரணம் எனட் தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவி ஷஹ்லா ஷெரின்
மாணவி ஷஹ்லா ஷெரின்

வகுப்பறைகளில் குழிகள் இருந்தால் உடனடியாக அவற்றை அடைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வகுப்பறைக்குள் செல்லும்போது, வெளியே செருப்புகளை கழற்றிப்போட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தவில்லை. எதற்காக மாணவிகளிடம் செருப்பை கழற்றச்சொன்னார்கள் என விசாரணை நடத்தப்படும்" என்றார்.