அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மாட்டுக்கறி சாப்பிடுறவனுக்கு படிப்பு எப்படி வரும்... - மாணவன் தற்கொலைக்கு ஆசிரியர்கள் காரணமா?

இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளி

பள்ளிக்கூடத்தில் சாதியப் பாகுபாட்டுடன் ஆசிரியர்கள் செயல்பட்டதாகச் சொல்வதில் துளியும் உண்மையில்லை.

‘‘ ‘மாட்டுக்கறி சாப்பிடுறவனுக்கு படிப்பு எப்படி வரும்?’ என்று சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால், என் மகன் தற்கொலை செய்துகொண்டான்” என்று கதறி அழுகிறார், ஓர் அப்பாவித் தாய்!

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகேயுள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - மாரியம்மாள் தம்பதியின் இளைய மகன் சீனு. உள்ளூரிலுள்ள இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்த சீனு, கடந்த 14-ம் தேதி தற்கொலை செய்துகொண்டான்.

சீனு
சீனு

சோகத்திலிருந்து மீளாத தாய் மாரியம்மாளிடம் பேசியபோது, “ ‘மாட்டுக்கறி சாப்பிடுற உனக்கெல்லாம் படிப்பு வராதுலே... பேசாம படிப்பை விட்டுட்டு குப்பை பொறுக்கப் போ’ என்று எல்லோர் முன்பும் என் பிள்ளையை ஆசிரியர்கள் திட்டியிருக்கிறார்கள். என் கணவர் தலைமை ஆசிரியரிடம் இது பற்றிப் புகார் செய்தார். ஆனால் அவரோ, ‘இப்படியெல்லாம் பேசுறது கஷ்டமா இருந்துச்சுன்னா உங்க சாதிக்காரங்க நடத்துற பள்ளிக்கூடத்துல போய் உன் பையனைச் சேர்த்துக்கோ’ என்று எகத்தாளமாகப் பேசியிருக்கிறார். பள்ளியிலுள்ள பிற ஆசிரியர்களோ, ‘எங்க மேலயே புகார் செய்யுற அளவுக்கு வந்துட்டியோ... நீ எப்படி பாஸாகி, இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போறேன்னு பார்ப்போம்’ என்று மறுபடியும் சீனுவை மிரட்டியதால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டான்” என்று கதறி அழுதார்.

மாட்டுக்கறி சாப்பிடுறவனுக்கு படிப்பு எப்படி வரும்... - மாணவன் தற்கொலைக்கு ஆசிரியர்கள் காரணமா?

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பள்ளி நிர்வாகிகள், “பள்ளிக்கூடத்தில் சாதியப் பாகுபாட்டுடன் ஆசிரியர்கள் செயல்பட்டதாகச் சொல்வதில் துளியும் உண்மையில்லை. சரியாகப் படிக்காத சிறுவன் சீனுவை அவனுடைய தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்திருக்கிறான். யாருடைய தூண்டுதலிலோ எங்கள் பள்ளிமீது வீண் பழிபோடுகிறார்கள்” என்கிறார்கள்.

மாரியம்மாள்
மாரியம்மாள்

இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான கபீரிடம் கேட்டதற்கு, “பள்ளியின் மீது புகார் வந்ததால், டி.இ.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தேன். அதில், பள்ளியின் மீது எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், அனைத்து மாணவர்களிடமும் விசாரிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் விசாரணை நடத்தப்படும். பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் கவுன்சலிங் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

பறிபோன மாணவனின் உயிருக்கு யார் பொறுப்பேற்பது?