அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

காரைக்காலைத் தொடர்ந்து களியக்காவிளை... குளிர்பானத்தில் ஆசிட் கலந்து மாணவனைக் கொன்றது யார்?

அஸ்வின்
பிரீமியம் ஸ்டோரி
News
அஸ்வின்

கடந்த 1-ம் தேதியே அந்த மாணவனின் அப்பாவும் பெரியப்பாவும் ‘பள்ளியில் வைத்து குழந்தைக்கு ஆசிட் கலந்த ஏதோ கொடுத்திருப்பதாக’ச் சொன்னார்கள்.

காரைக்காலில், தன் மகளைவிட நன்றாகப் படித்த மாணவனுக்கு ஜூஸில் விஷம் கலந்துகொடுத்த தாயின் கொடூரச் செயலின் ரணம் ஆறுவதற்கு முன்பே, களியக்காவிளையில் மாணவன் ஒருவனுக்கு, குளிர்பானத்தில் ஆசிட் கலந்துகொடுத்து கொலை செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளைக்கு அருகேயுள்ள நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த சுனில் - சோபியா தம்பதியின் மூத்த மகன் அஸ்வின். அதங்கோடு மாயாகிருஷ்ண சுவாமி வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அஸ்வினுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இதையடுத்து நெய்யாற்றங்கரை யிலுள்ள நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்வினுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், ‘மாணவன் ஆசிட் குடித்திருப்பதாக...’ அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து 22 நாள்கள் சிகிச்சையிலிருந்த அஸ்வின், கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான்.

அஸ்வின்
அஸ்வின்

இது பற்றி நம்மிடம் பேசிய அஸ்வினின் உறவினரும் வழக்கறிஞருமான ஐவன், “தனியார் மருத்துவமனையில், கிட்னி ஃபெயிலியர் ஆகிவிட்டதாக முதலில் டயாலிசிஸ் செய்தார்கள். பின்னர் மாணவனின் வாய் முதல் குடல்வரை வெந்தநிலையில் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து ஆசிட் போன்ற திரவம் ஏதோ குடித்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறினார்கள். அஸ்வினிடம் கேட்டதற்கு கடந்த 24-ம் தேதி மதியம் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தபோது பள்ளி யூனிஃபார்ம் போட்ட மற்றொரு மாணவன் கோகோ கோலா எனக் கூறி கையிலிருந்த பாட்டிலை கொடுத்ததாகச் சொன்னான். அதைக் குழந்தை இரண்டு வாய் குடித்ததும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், குழந்தை மீது இடித்ததால் பாட்டில் கீழே விழுந்துவிட்டது. டேஸ்ட் இல்லாததால், அதைக் கண்டுகொள்ளாமல் வீட்டுக்குப் போய்விட்டான்.

அந்தப் பள்ளியில் முந்தின நாள் காப்பர் சல்ஃபைட் மற்றும் அயர்ன் சொல்யூஷனை ‘கெமிஸ்ட்ரி லேபில்’ பத்தாம் வகுப்பு மாணவர்கள் பரிசோதனை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தக் கரைசலைத்தான் யாரோ அஸ்வினைக் குடிக்க வைத்திருக்கிறார்கள். அதைக் கொடுத்த மாணவன் யார் எனப் பார்க்கலாம் என்றால், ‘கண்காணிப்பு கேமரா கேபிள் எலி கடித்து அறுந்துவிட்டதாக’ பள்ளி நிர்வாகம் சொல்கிறது. மாணவன் கொலை குறித்து, தனி ஏஜென்சி விசாரணை நடத்தி யார் குற்றவாளி, எதற்காகக் கொலை செய்தார்கள் என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். பள்ளி நிர்வாகத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

ஐவன் - சாவர்க்கர்
ஐவன் - சாவர்க்கர்

மாயா கிருஷ்ண சுவாமி கோயில் டிரஸ்ட்டின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சாவர்க்கரிடம் பேசியபோது, “கடந்த 1-ம் தேதியே அந்த மாணவனின் அப்பாவும் பெரியப்பாவும் ‘பள்ளியில் வைத்து குழந்தைக்கு ஆசிட் கலந்த ஏதோ கொடுத்திருப்பதாக’ச் சொன்னார்கள். தாளாளரும் அவர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் பாட்டில் ஏதேனும் கிடக்கிறதா எனத் தேடினார். எதுவும் கிடைக்கவில்லை. ஆய்வுக்கூடத்திலிருந்து எதுவும் வெளியே வர வாய்ப்பு இல்லை. சிசிடிவி இரண்டு மாதங்களுக்கு முன்பே ரிப்பேர் ஆகிவிட்டது. ஆனாலும் பரிசோதனைக்காக ஹார்டு டிஸ்க், டி.வி.ஆர் கேபிள் எல்லாவற்றையுமே போலீஸார் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். நாங்களும் விசாரணைக்கு ஒத்துழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருப்பதால், ‘பெயர், பதவி குறிப்பிட வேண்டாம்’ என்ற நிபந்தனையோடு நம்மிடம் பேசிய போலீஸார், “புகார் வந்ததும் 2-ம் தேதியே வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினோம். பள்ளியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் டிஸ்பிளேயில் தெரிந்தன. ஆனால், டி.வி.ஆர் கேபிள் கட்டாகி இருந்ததால் ரெக்கார்ட் ஆகவில்லை. பள்ளியின் அனைத்து மாணவர்களின் போட்டோக்களையும் மாணவன் அஸ்வினிடம் காட்டிய பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆன பிறகும்கூட ‘என்ன குடித்தான்’ என்ற தகவலை நான்கு நாள்கள் கழித்த பிறகே டாக்டர்களிடம் கூறியிருக்கிறான்.

காரைக்காலைத் தொடர்ந்து களியக்காவிளை... குளிர்பானத்தில் ஆசிட் கலந்து மாணவனைக் கொன்றது யார்?

கடந்த மாதம் 24-ம் தேதி மதியம் 12:30-க்கு எக்ஸாம் முடிந்த பிறகு 12:40-க்கு பேப்பரை வாங்கிக்கொண்டு எல்லா மாணவர்களையும் ஒன்றாக வெளியே விட்டிருக்கிறார்கள். 12:53-க்கு ஸ்கூலைவிட்டு வெளியே வந்த வேனில், மாணவன் அஸ்வின் இருப்பது எதிர்ப்பக்கக் கடையிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இடைப்பட்ட 13 நிமிடங்களில் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என விசாரணை நடத்தினோம். ஒருவேளை வீட்டில் வேறு பிரச்னையில் ஏதாவது குடித்தானா அல்லது பள்ளி வேதியியல் ஆய்வகத்திலிருந்து தவறுதலாக எடுத்துக் குடித்தானா என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்தினோம். அந்த மாணவனின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ஆழமாக விசாரிக்க முடியவில்லை” என்றனர்.

மாணவன் அஸ்வின் மரணத்துக்கான காரணத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், `பள்ளிக்குச் சென்ற பிள்ளை பத்திரமாக வீடு திரும்புமா?’ என்ற கேள்வியே பெற்றோரின் நிம்மதியைக் கெடுத்துவிடும்!